Home

தமிழ் செய்திகள் | Tamil News

மரண அறிவித்தல் | Obituaries

மரண அறிவித்தல்

Information

நீங்கள் உங்களது அன்பானவரகளின் இழப்புகளை எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கலாம் மேலும் விபரங்களுக்கு தேவை ஏற்படின் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். email: notices@thaenaaram.com

மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க

Information

உங்களது அன்பானவர்களின் மரண அறிவித்தல்களை இங்கே பிரசுரிக்கலாம். இதற்கு நீங்கள் Plans & Prices கிளிக்செய்து அதில் கொடுக்கப் பட்ட தகவல்கள் மூலம் இவற்றை அனுப்பலாம். ஏதும் கேள்விகள் இருந்தால் எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மின்அஞ்சல் மூலம் notices@thaenaaram.com தொடர்பு கொள்ளுங்கள்.

நினைவஞ்சலி | Remembrances

திரு முருகமூர்த்தி பழனிதுரை

Place

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

Anniversary

18வது மாத நினைவு தினம்

Information

நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை இரைமீட்ட வேளையிலே திடீரெனச் சுருக்கம் ஏற்பட்டதை உணர்ந்தேன் பிரிவின் துக்கம் தனிமையின் தாக்கம் வாழ்க்கையோ விம்பமெனத் தெரிந்து கொண்டேன் ஆனால், ஆதரவு இல்லை என்ற ஏக்கமில்லாமல் உங்கள் உறவுகள் அனைத்தும் என்னை அணைத்தன உங்களை அவர்களில் கண்டேன் ஆறுதல் கொண்டேன் ஆனாலும் அடிக்கடி மலைபோல் சுமை என் தலைமேல் உள்ளதை உணர்வேன் ஒன்றாய்த் திரிந்த சென்ற இடங்கள் உங்களைக் கேட்பது போலப் பிரமை, ஆனாலும் உண்மை எப்படிச் சொல்வேன்? யாரிடம் கூறுவேன் என் அடிமனதின் கேள்விகள் துக்கத்தால் வந்தவற்றை? உங்கள் மெல்லிய இதழ்நோகா சிரிப்போ சொல்லும் அர்த்தம் புரியும், அது எனக்கு ஆசீர் வழங்குவதை உணர்வேன் - எந்தன் அயலில் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியுது காவல் காப்பதும் கடவுளிடம் இறைஞ்சுவதும் புரிகிறது நானோ புலம்புகிறேன், உங்களைப் பார்த்துக் கும்பிடுகிறேன் - கடவுள் இவ்வுலகில் எனக்குத் தந்த தெய்வமாக காத்திடுங்கள் இவ்வுலகில் என்னை உங்கள் கண்ணிமையினுள்ளே துயரத்தால் துயருறும் உங்கள் மனைவி, கௌறி

Dr. Ethirmarnasingam Jerome

*7 மாத நினைவு அஞ்சலி*

Place

சென்னை

Anniversary

7 மாத நினைவு அஞ்சலி

Information

பாசத்தின் உருவே! பதுமையின் குருவே! உதவிடும் கரமே! எங்கேதான் போனீர்? வையகம் காணும் வாழ்ந்தது போதும் என்றென்னும் முன்பே எங்குதான் போனீர்? கையினைப் பற்றி கலங்காதிரு என சொல்லிய போது விழங்கா மொழியாய் வினாவாய் போனதோ? தூங்கும் நேரம் தூரமாய் சென்றீரோ? ஏங்கும் நாங்கள் என்னதான் செய்வோம்? அமைதியாய் வாழ்ந்தீர் அமைதியாய் பிரிந்தீர் ஆருயிர் உயிரே தவிக்க ஏன் விட்டீர்? தாங்க முடியல தூக்கமோ வரல ஏக்கமே மீதியால் இதயமோ கனக்குது என்னதான் செய்வோம் விளங்கவுமில்லை ஆசையின் உயிரே மனமொத்தா சென்றீர் ஆண்டவர் அழைத்தாரோ அன்புக் கரம் தந்தாரோ? இவ்விடம் போதும் என்னிடம் வாரும் என்றா கூறிக் கூட்டிச் சென்றாறோ? எம்மைப் பாரும் உறுதுணையாயிரும் ஆறுதல் தாரும் எம்மை எப்பவும் காரும் என்றெல்லாம் வேண்டும் உம்முயிர் ஜீவன்கள், மனைவி, பிள்ளைகள்

ஆண்டு நினைவஞ்சலி | Anniversaries

திரு பெர்னான்டோ யேசுதாசன்

Place

மன்னார்

Anniversary

10ஆவது ஆண்டு அஞ்சலி - 18.01.2024

Information

வார்த்தைகளோ மௌனமாயின உங்கள் மரணத்தில் அதுவும் உண்மையாயின புன்னகையும் வாடியது பூமுகம் அமைதியாகியது திடீரென்ற இம்மாற்றம் வடுவில்லா காயமாயிற்று பறந்தது வருடங்கள் பத்து ‘பறக்கப் போறேன்’ என்று அடிக்கடி பப்பா நீங்கள் சொல்வது உண்மையுமாயிற்று தாயைப் பிரிந்து தவித்த காலங்கள் தாங்கிக் கொள்ளும் வலிகளை பொறுத்தது நீங்கள்தானே அத்துயரெல்லாம் மறக்க வைத்து கல்வியினை தினமும் புகட்டி எங்களை கலங்கரை விளக்காய்த் திகழவைத்தீங்களே பப்பா! அதில் உங்கள் மன உறுதியினைக் கண்டுகொண்டேன் வாழ்க்கை இதுதான் என்று உங்கள் வாழ்க்கையால் உணரவைத்து உங்கள் நல் பாதையில் எம்மையும் நடைபழக்கி விழவிடாமல் தாங்கிச் சென்று கரைசேர்த்தீங்களே தற்காலிக இவ்வலகில் தவிக்கவிட்டுச் சென்றது உங்கள் விருப்பன்று, அதுவோ, காலத்தின் கட்டாயம், காலனின் திட்டமாம் என்றாலும், கனவிலும் தோன்றுவது, செய்தி ஒன்று சொல்லவா? உங்கள் நினைவுநாளை நினைவூட்டவா? எப்போ நான் மறந்தேன் நினைவுகளைப் புதுப்பிக்க தந்தையாய்த் தாயாய் வாழ்ந்து காத்த தந்தையர்க்கும் தந்தை நீங்கள் நீங்கள் தங்கியிருப்பது இறைவனின் வாசஸ்தலம், அங்கு இறைவனைப் புகழ்ந்து கொண்டு எமக்கும் வேண்டிக்கொண்டும், வாழ்த்திக் கொண்டும் நித்தியத்திற்கும் சந்தோஷமாய் மகிழ்ந்திருக்க உங்களுக்காய் மன்றாடும்... அன்பும், பாசமும் நிறைந்த மகள் - பெரிய தங்கச்சி (மேரி ஜோசப்பின்) குடும்பம்


விலை மதிப்பில்லா சொத்தொன்று விண்ணேறிச் சென்ற நாள் விரைவாய்க் கடந்ததையா விடியலின் நாட்கள் பல எங்கள் உணர்வோடு கலந்து எங்கள் நினைவில் வாழுகின்ற அன்பு பப்பா உங்கள் முகம் மறைந்து பத்து ஆண்டுகள் ஆகி விட்டதே! களிப்புடனே கதைகள் பல பேசி எங்களை மகிழ்வித்தேரே பாசத்தைப் பரிவுடன் ஊட்டி பாரினில் சிறக்க வளர்த்தீரே எம்மைப் பரிதவிக்க விட்டு விட்டு கல்லறைக்குள் ஓடி ஒழிந்ததேனோ? உமது ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். “மரணங்கள் மறக்க முடியாதவை மன ரணங்கள் ஆற்ற முடியாதவை” உங்கள் துயரால் பிரிவுறும் மகள் - தங்கா (மேரி மெற்றில்டா) குடும்பம், பேரப்பிள்ளைகளும் குடும்பங்களும், பூட்டப்பிள்ளைகள்
எனது கணவரின் தந்தையின் 10 ஆவது வருட நினைவு தினத்தில் அவரின் தந்தையின் நிகழ்வுகள்களின் அன்புப் பதிவு 🥲🙏🏻❤ உயிர் தந்த பப்பாவின் உயிர் பிரிந்த பத்தாண்டு கண்ணீரில் கண்கள் இன்னும் கரைந்தோடுதே உன்னோடு வாழ்ந்த வாழ்வு கனவாகிப் போனதே தூண் போல் இருந்த உறவு துண்டித்துப் போனதே நீ விட்டுச் சென்ற நன்மை நல்லபடி நடத்தி செல்லுதே பப்பா என்ற வார்த்தை ஆயிரம் கதை சொல்லுதே நீ இருக்கும் வரை பப்பா உனதன்பில் நான் நனைந்தேன் நீ மறைந்தபின் உன் அன்புக்காய் ஏங்கினேன் கோபத்தை அதிகமாய் காட்டிடா அன்புருவம் நீ தோளுக்கு மிஞ்சினால் தோளனென்று தட்டிக்கொடுத்த என் பப்பா நீ சிறகடித்து பறந்தபோது கல்வியே சிறந்ததென கண்டிப்போடு சொன்னவன் நீ பிறிட்டிஸ் அரண்மணையில் இளவரசர் கையினால் தங்கப்பதக்கமதை உன் பேத்தி பெற்றதனை பார்க்காமல் போயிட்டியே நீ மட்டும்இருந்திருந்தால் மார்தட்டி மகிழ்ந்துருப்பாய் என் மனம் வெம்பியதை என்னவென்று சொல்வேன் பப்பா. வீட்டிற்கும் ஊருக்கும் கல்வியிலும் பண்பிலும் உதாரண குடும்பமாய் விளங்கிட செய்தவன் நீ படித்த குடும்பமடா என்றுரைக்க மகிழ்ந்தவன் நீ நீ தந்த கல்வியில் தலைமுறை நிமிர்ந்து நிற்கிறது கண்ணீரோடு நன்றி பப்பா யார் கண் பட்டதோ காலனவன் பிரித்திட்டான் நாட்கள் மாதங்களாகி வருடங்கள் ஓடினாலும் மறக்காது உன் உருவம் இறைவன் காலடியில் அன்பாக நீ உறங்கு எப்போதும் உனக்காக இறைவனிடம வேண்டுகிறேன்… அன்பு மகன் நிர்மலன், மருமகள், பேத்தி, பேரன்
மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து பத்து வருடங்கள் சென்றுவிட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயத்தில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. உங்கள் நினைவுகளுடன் பெறாமகள் - நிலானி, மருமகன், பேரப்பிள்ளைகள்

திருமதி பற்றிமாராணி அருந்தவம் (கிச்சி)

Anniversary

2 ஆம் வருட நினைவஞ்சலி

Information

காலங்கள் இரண்டு வருடங்கள் கடந்து விட்டன. உங்கள் வார்த்தைகளைக் கேட்டும் ஏக்கமுடன் வாழுகின்றேன். உறவுகளாக இருந்து பிரிந்து தூரமாகப் போய்க்கொண்டிருக்கின்றது. ஆனால், உங்களது ஆன்மாவை இறைவன் தன்னுடன் நல்லிடம் தந்து வைத்திருப்பார். ஆமென்! உங்கள் தம்பி குடும்பம்.

திரு. யோன் யோசப் செபஸ்ரியன் புண்ணியசிங்கம்

Place

மானிப்பாய், மன்னார்

Anniversary

50ஆவது ஆண்டு தினம்

Information

காலங்கள் எங்களுடன் வாழ வைக்குமுன் உங்களைக் காலன் கொண்டு சென்றுவிட்டானே. காலங்கள் கொஞ்சம் இல்லை – ஐந்து சகாப்தங்கள் கடந்து போய்விட்டன. எனக்குள்ள ஞாபகம் உங்களைக் கடைசியாக 2ஆம் வாட்டில் உங்களுக்குத் துணையாக நான் நின்று கொண்டிருந்ததுதான். அந்த இரவு நீங்களும் தூங்கவில்லை, நானும் தூங்கவில்லை. உங்களுக்கு விளங்கியிருக்குமோ தெரியவில்லை இன்றுதான் நீங்கள் கடைசியாக இந்த உலகத்தைப் பார்க்கப் போகின்றீர்களென்று. அதுதான் நீங்கள் தூங்கவில்லேயோ? எனக்கு இந்த விடயங்கள் புரியாத வயசில் நான் அப்போது உங்கள் கட்டிலில் பக்கத்தில் இருந்தேன். பயப்படும் வயசு, அரூபிகளை எண்ணி. ஆனால், நீங்கள் இருக்கையில் அந்த பயப்பிடும் நினைவுகள் ஒன்றும் எனக்கோ வரவில்லை. அன்றிரவு, நாங்கள் இருந்த வாட்டில் உங்களுக்குப் பக்கத்தில் ஒருவரும், முன்னால் ஒருவரும், கொஞ்சம் தள்ளி ஒருவருமாக மூன்று நோயாளிகள் இறந்து போயினர். அப்போது எனக்கு ஒன்றும் பயங்கரமாகத் தெரியவில்லை. ஏனென்றால், நீங்கள் என்னுடன் இருந்ததனாலே. அன்றிரவு, ஹவுஸ் சேர்ஜன் (House Surgeon) எல்லா நோயாளிகளையும் பார்ப்பதற்கு இரவு விசிற் வந்தார். பப்பா, உங்களையும் அவர் பார்த்தார். உங்களுக்கு அவர் சொன்னது இன்னமும் எனது காதினில் கேட்கின்றது. “ஐயா! உங்களுடைய வயிற்றினுள் சின்னப் பிரச்சினைதான். நாளைக்குக் காலை (14.01.1974) அம்புலஸில அனுராதபுரம் கொண்டு போவினம். அங்கு ஒரு சின்ன ஒப்பறேஷன் செய்வினம். அடுத்த நாள் (15.01.1974) நீங்கள் இங்கு வந்தவிடலாம். நான் இங்கு அதற்குரிய படிவங்களை (Transfer Form) எல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிறேன், டீ.எம்.மோ. (District Medical Officer) நாளைக்குக் காலை கையெழுத்துப் போட்டதும் காலை 6மணிக்கெல்லாம் வரும் அம்புலன்ஸில் நீங்கள் போகக்கூடியதாக இருக்கும்.” மறுநாள் விடிந்தது. காலை 6மணிக்கெல்லாம் அம்புலன்ஸும் வந்தது. நானோ கையெழுத்திற்காக டீ.எம்.மோ.வின் ஆபீஸடியில் காத்துக்கொண்டிருந்தேன். நானோ சிறுபையன். வாசலடியில் நிற்பதனைக்கூட பார்க்காத அவர், வந்த கடிதங்களை எல்லாம் ஒன்றின்பின் ஒன்றாகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் போடாமல் தன்னுடைய கடிதங்கள் படிப்பதில் கண்ணாக இருந்தார். மணி மதியம் 12ஐயும் நெருங்கியது. அப்போதுதான் கையெழுத்தையும் போட்டார் அந்த டீ.எம்.மோ. ஏன் அவ்வாறு செய்தார் என்று கூட எனக்குத் தெரியாது. ஹவுஸ் சேர்ஜனுக்கும் (House Surgeon) தெரியாது. அன்றைய நாள் தைப்பொங்கல் தினமாகும். விரைந்து சென்றது அம்புலன்ஸ், அனுராதபுர வைத்தியசாலையை நோக்கி. அன்று இரவு பப்பா உங்களுடன் நான் நின்றபோது நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளின் ஈரம் இன்னமும் காயவில்லை. என்ன கூறினீங்கள் என்றால், குமார், “நீ நன்றாக ஆங்கிலத்தைப் படி, உன் பாஷை (தமிழ் மொழி) தெரிந்தவர்களுடன் ஆங்கிலத்தில் கதைக்காதே, தினமும் நீ பரிசுத்த ஆவியானவரின் செபமும், செபமாலையும் சொல்லு” என்பதாகும். பப்பா! நாங்கள் எல்லாரும் உங்களைத் தேடி, பாஷை தெரியாத இடமான அனுராதபுரத்திற்கு அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தோம். உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களுக்கு அறிமுகமானவர், சம்பந்தர், அங்கு எங்களைச் சந்தித்தார். அவர்தான் நீங்கள் கடைசியாக என்ன கூறினீங்கள் என்பதையும், என்ன நடந்தது என்பதனையும் விரிவாகச் சொன்னார். உங்களை அனுராதபுரத்திற்குக் கொண்டு வந்த போது அங்கு வேலை செய்த அனைத்து தமிழ் டொக்டர்களும் மதிய யாழ் தேவியில் ஏறி தைப் பொங்கலுக்காக யாழ்ப்பாணம் சென்று விட்டார்கள். கொஞ்சம் வெள்ளன வந்திருக்கலாம் என்றும், உங்களை டாக்டர்கள் இல்லாத பட்சத்தில் குருநாகல் ஆஸ்பத்திரிக்கு மாற்றியதகவும், அங்கு கொண்டு செல்லும் வழியில் நீங்கள் அம்புலன்ஸ் சாரதியிடம் சொன்னீங்களாம், மனைவி, பிள்ளைகள் இங்குதான் வருவார்கள், அவர்களுக்கு குருநாகல் என்றால் றொம்ப கஷ்டமாகிவிடும், தயவுசெய்து திரும்பவும் அனுராதபுர வைத்தியசாலைக்கே கொண்டு போருங்கள் என்று. அம்புலன்ஸ் சாரதியும் உங்களது வேண்டகோளுக்காக அம்புலன்ஸைத் திருப்பிக் கொண்டு அனுராதபுர ஆஸ்பத்திரிக்கே கொண்டு வந்தார்கள் என்றும், உங்களைக் கொண்டு வந்த அம்புலன்ஸ் அனுராதபுர ஆஸ்பத்திரி வாசலுக்குள் ஏறும்போது உங்கள் உயிர் பிரிந்ததாகவும் சொன்னார். உங்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டதா பப்பா எல்லாம். கடைசிவரைக்கும் எங்களது நினைவுகளுடனே அனுராதபுர ஆஸ்பத்திரியிலே உங்கள் ஆவி இவ்வுலகை விட்டு பிரிந்து போய்விட்டதே! கொஞ்சம் வெள்ளன உங்களை அனுராதபுர ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருந்தால் அந்தச் சிறிய ஒப்பிரேஷனைச் செய்து மீண்டும் எங்களுடன் சந்தோஷமாகச் சீவித்திருப்பீர்களே. அந்த டீ.எம்.ஓ. எங்கள் குடும்பத்திற்கே செய்த துரோகம் இன்னமும் என் மனதில் மறக்க முடியாமல் இருக்கின்றதே! நீங்கள் இறந்து உங்களை வீட்டினுள் வளர்த்தி இருக்கையிலே நீங்கள் வளர்த்த பசு அன்றிரவு பெரிய சத்தமாகக் கத்திக் கொண்டு தன் உயிரை விட்டுவிட்டது. நீங்கள் இறந்த மூன்றாம் நாள் நீங்கள் என் கனவில் வந்தீங்கள். என்னை செபஸ்தாயார் கோவிலுக்கு காலைப் பூசைக்குக் கூட்டிக் கொண்டு போகின்றீங்கள், பப்பா. நானும் ஓடி, ஓடிக் கொண்டு உங்கள் பின்னால் வருகின்றேன். அப்போது நீங்கள் சொல்லுகின்றீங்கள், “எங்களை எல்லாரும் ஒரு துரும்பாக எண்ணிவிட்டார்கள். பொறு ஒரு கை பார்க்கின்றேன்” என்று. அதன் பின்பு உங்களைக் காணவில்லை. ஆனால், ஒரு 8 அல்லது 10 வருடங்களுக்கு முன்னால் மீண்டும் எனது கனவில் வந்தீங்கள் பப்பா. அம்மாவின் மடியில் படுத்திருக்கின்றீர்கள், ஆனால், காயப்பட்டுள்ளவாறு கண்டேன். நீங்கள் உங்கள் ஆபீஸில் வேலை செய்யும் போது, நான் அங்கு வந்து ஒரு பேப்பர் கிளிப் ஒன்று கேட்டேன். அப்போது நீங்கள் சொன்ன அறிவுரை. இந்தக் கிளிப்பும் ஒரு அரசாங்கச் சொத்து. அதை எடுப்பது தவறு என்று. அந்த நேர்மையான உங்கள் உருவும் இன்னமும் மனதிலுண்டு. ஒருநாள் அம்மா சொன்னா, தான் உங்களுக்கு ஆஸ்பத்திரியில் இருக்கும் போது, நானும் உங்களுடன் நின்றேன். அப்போது அம்மா சாப்பாட்டுக் கோப்பை கழுவப் போகும் போது நீங்கள் அம்மாவிற்குப் முன்னால் போவதையும், பிறகு சாப்பாடு உங்களுக்குக் கொடுத்துவிட்டு வீட்டிற்குப் போகும் போது, தனக்கு முன்னால் நீங்கள் போவதைக் கண்டதாகவும், பின்பு எங்கள் வீட்டிற்குப் போகத் திரும்பும் அந்த ஒழுங்கையிலே நீங்கள் மறைந்து விட்டதாகவும் கூறினா. அப்பவே தனக்குத் தெரிந்ததாம் பப்பா நீங்கள் இனி வீட்டிற்கு உயிருடன் வரமாட்டீர்கள் என்று. இதையிட்டு நான் பல தடவைகள் நினைத்திருப்பேன் இவ்வாறு தெரிந்து பின்பு எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கின அம்மாவின் தைரித்தை யாரிடமும் காணமுடியாது. ஒரு முக்கிய விடயம் என்னென்றால் பப்பா, நீங்கள் கடைசியாக்க கேட்டுக் கொண்டபடி, இன்னமும் தினமும் செபமாலையும், இஸ்பிரித்துசாந்துவானவரின் செபமும் கிட்டத்தட்ட 40 வருடங்களாகச் நான் சொல்லிக் கொண்டுதான் வருகின்றேன். இதனையிட்டு நீங்கள் சந்தோஷப்படுவீங்கள் என்ற நம்புகின்றேன். அத்துடன், இன்றுவரையும் உங்கள் பாத அடிகளைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றேன், உண்மை, நேர்மை, சத்தியம், வாய்மை, கடவுடனான ஒன்றிப்பு, இறைவனின் வார்த்தையினை வாழ்வாக்கி வாழுகின்றேன். நீங்கள் எனது மனைவியிடம் நான் அவவை நினைக்குமுன்பே நீங்கள் அவவிடம் என்னை உங்களிடம்தான் கொடுக்க வேண்டும் என்று. நீங்கள் அவவிற்கு நீங்கள் சொன்னதற்கிணங்க நான் அவவைத்தான் மணமுடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அதுவும் உங்கள் ஆசைதானே பப்பா. அத்துடன், எங்கே உங்கள் உயிர் பிரிந்ததோ அங்கேதான் எங்கள் மகளும் பிறந்தாள் – அதுவும் உங்கள் விருப்பமா பப்பா! சந்தோஷம் பப்பா. உங்களுடைய வாழ்க்கையினை எங்களால் மறக்கவே முடியாது. நோகாமல் வாழ்ந்து, எவ்வளவோபேரை வாழவைத்து இவ்வாறுதான் வாழவேண்டும் என்று சொல்லி விழங்க வைக்காமல் வாழ்ந்து காட்டிச் சென்றது இன்னமும் படமாக துல்லியமாக என்மனதினில் ஓடிக் கொண்டிருக்கின்றது – உங்கள் அந்தப் புனிதமான வாழ்க்கையினை பின்பற்றிக்கொண்டிருக்கும் நான் இவ்வுலகில் வாழ்ந்து முடிப்பேன் பப்பா. நான் எவ்வளவுதான் படித்தாலும், என் மனைவி எவ்வளவுதான் படித்தாலும், எங்கள் மகள் கல்வியில் தொடர்ந்து சாதனைகள் புரிந்தாலும் எங்களால் இன்னமும் வாழ்க்கையில் சிரிக்க முடியவில்லை பப்பா. துக்கங்கள் தாக்குகின்றன, துயரங்கள் வாட்டுகின்றன, சந்தோஷமில்லாத மனமும், இந்த உலகத்தில் ஒன்றுமே சொந்தமில்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, சுக்கு நூறாக உடைக்கபட்டு மனங்களோடு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம் நாம். தனிமையினை உணருகின்றோம் – தரணி வாழ்க்கை தேவையே இல்லையென்பதனை அறிந்து கொண்டோம் – உள்ளதனைச் சொல்லி ஆற உறவென்று ஒன்றுமில்லை – ஊருக்கு முன்னால் நடிக்கின்றோம், குறைவற்ற சந்தோஷத்தில் மிதப்பதாக – வேண்டிக் கேட்க எனக்கு நாதியில்லை – வேண்டுமென்று உரிமையுடன் நினைக்க ஒருத்தர் இல்லை – எமக்கு இப்போ வயசுமில்லை – ஒன்றுமே இல்லையென்றாயிற்று – சொல்வதைக் கேட்க இந்த உலகமும் தயாரில்லை – நமக்கும் பெலமுமில்லை – உங்களிடம்தான் சொல்லுகின்றேன் – நன்றி பப்பா என் கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு. உங்களுக்காகவும், அம்மாவுக்காகவும் எனது செபமாலையில் தினமும் வேண்டுகின்றேன் – எங்கள் குடும்பத்தைக் கைதூக்கி விடுங்கள் பப்பா – எங்களுக்குப் பெலமில்லை. உங்களிடம் கைகூப்பிக் கேட்கின்றேன் உங்கள் கையால் எங்களைத் தூக்கிவிடுங்கள். துயரினை நீக்கிவிடுங்கள். நன்றி பப்பா. இறைவன் உங்களை நல்ல இடத்தில் வைத்து காப்பாற்றிக் கொண்டு வருவாராக. ஆமென்! உங்கள் மகன், குமார் குடும்பம்

திருமதி மாகிறற் சௌபாக்கியம் புண்ணியசிங்கம்

மானிப்பாய், கண்டி, மன்னார்

Place

மானிப்பாய், கண்டி, மன்னார்

Anniversary

25ஆம் வருட நினைவஞ்சலி

Information

என் பெற்ற தாயை நினைத்துப்பார்க்கிறேன். Audio >>>> என் பெற்ற தாயை நினைத்துப்பார்க்கிறேன்=!1582671! அம்மா! நீங்க இன்று எம்முடன் இல்லை. எம்மை விட்டுப் பிரிந்து இன்று 25 வருடங்களாகிவிட்டது. எனது நினைவுகூருதல் இந்தநாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நிமிடமும் உங்களை என் இருதயத்தில் நினைத்துக்கொண்டு தானிருக்கிறேன். உங்கள் மூத்த பிள்ளையென்று என்னைக் குறித்து உங்கள் இருதயத்திலிருந்த அன்பும், பாசமும் அந்நேரம் நான் உணராதிருந்த வயது. ஆனால், இன்று ஒவ்வொரு நொடியும் அதை நினைத்து எனக்குள் அழுதுகொண்டுதானிருக்கிறேன். இதை யாருமே அறியவோ புரிந்துகொள்ளவோமாட்டார்கள். எனது பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அணைத்துக் கொஞ்சி உங்கள் அன்பைப் பொழிய இன்று நீங்கள் இல்லை. எனது வாலிப வயதுவரை எனக்கு நீங்களே உடுப்புகள் தைத்து அழகுபார்த்தீர்களே, என் பிள்ளைகளுக்கு அவ்விதமாக அழகுபார்க்க நாட்டின் சூழ்நிலைகளும் உங்கள் சரீர பெலவீனங்களும் அன்று தடையாகபோய்விட்டதே. ஆனாலும் அம்மா! உங்கள் மூத்த மகனாகிய எனக்காக நீங்கள் ஆயத்தப்படுத்தி தாலாட்டி அழகுபார்த்த தொட்டிலிலே எனது மூத்த மகனை (உங்கள் பேரனை) பெரிய ஆசையோடு வளர்த்தி அழகு பார்த்தீர்களே... அதில் நீங்கள் அடைந்த அந்த சந்தோஷத்தை இன்றும் நான் நினைக்கும்போதெல்லாம் அம்மா என்னால் தாங்கவேமுடியவில்லை. அம்மா! நீங்கள் எங்களைவிட்டுப் பிரியும்போதுகூட உங்கள் அருகில் இருக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவில்லையே. 1996ம் ஆண்டு நான் குடும்பமாக இலங்கைக்கு வந்தபோது உங்கள் இயலாத நிலையிலும் சக்கர நாற்காலியில் இருந்தவண்ணம் உங்கள் வலது புறத்தில் எனது மகளும், இடது புறத்தில் எனது தங்கையின் மகனும், உங்களுக்குப் பின்னாக எனது மகனும் நின்றபடி எடுத்த போட்டோவை பார்க்கும்போதெல்லாம் என் கண்கள் இப்பொழுதும் கலங்குகிறது. இது சாதாரண போட்டோ அல்ல. என் தேவன் எனக்கு ஆயத்தப்படுத்தித்தந்த அன்பின் நினைவின் சின்னமாகவே எண்ணுகிறேன். இதை எனது பாக்கியமாகவும் கருதுகிறேன். அம்மா! உங்கள் பேரப்பிள்ளைகளோடு நீங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்தக் கெம்பீரம் அம்மா உங்கள் இயலாத நிலையிலும் குறையவேயில்லை. இந்த கெம்பீரத்தோடுதான் என்னையும், எனது சகோதரங்களையும் நீங்கள் வளர்த்தெடுத்தீர்கள். அம்மா! எமது சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் பொறாமைகொண்ட உங்கள் உறவினர்களால் நீங்கள் வியாதிப்படுக்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தபோதும் எனது பப்பாவும் என் தங்கையும் எங்கள் வீட்டிலும், நீங்களும் நானும் என் இரண்டு சகோதரங்களும் உங்கள் வைத்தியத்துக்காக வேறிடத்திலுமிருந்த அந்த வேதனையான காலம் சாதாரணமானதல்ல. அப்பொழுது எனது சிறிய வயதில் நீங்கள் சொல்லச் சொல்ல உங்களுக்கும் என் இரண்டு சகோதரங்களுக்கும் நான் உணவு சமைத்துத்தந்த அந்த காலங்களை நான் இப்போ பாக்கியமாக கருதுகிறேன். எனது பப்பாவை இழந்தபோதும் நீங்கள் சோர்ந்துபோகாமல் என்னையும் எனது சகோதரங்களையும் கஷ்டம் எதுவும் தெரியாமல் கௌரவமாக வளர்த்தீர்களே. உங்கள் முத்த மகன் என்ற வகையில் நான் நன்கு அறிந்திருக்கிறேன் அம்மா. எந்த சூழ்நிலையிலும் யார் முன்னிலையிலும் உங்கள் கெம்பீரமான நடை, கெம்பீரமான பேச்சு, கெம்பீரமான செயல்கள் அனைத்தையும் இன்றும் என் கண்முன் நிறுத்திப்பார்த்து பெருமிதம் கொள்ளுகிறேன் அம்மா. அம்மா! நான் உங்கள் மூத்த புதல்வன் என்பதால் என் குழந்தைப் பருவத்திலேயே பப்பாவும் நீங்களும் என்னை ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்ய அர்ப்பணித்துவிட்டீர்கள். நான் வளர வளர உங்கள் அர்ப்பணிப்பை எனக்கு அவ்வப்போது நினைவூட்டி வளர்த்துவந்தீங்க. நீங்க ஜீவனுள்ள தேவனுடைய கட்டளைகளை அறிந்தவர்களென்றும், அதின்படி நடக்க உங்களை ஒப்புக்கொடுத்த பெற்றோர் என்பதையும் நான் அறிந்து, எனக்கு இப்படிப்பட்ட தேவபக்தியுள்ள பெற்றோரை தந்ததற்காக என் தேவனுக்கு முன்பாக பணிந்து அவரை நன்றியுடன் ஸ்தோத்தரிக்கிறேன். "முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதெனப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறது" (லூக்கா 2:23) அம்மா! உங்களுடைய இந்த மாபெரும் அர்ப்பணிப்பை அந்தநாளில் நான் உணராவிட்டாலும் கர்த்தர் சகலதையும் அறிந்தவர். அவர் அதை ஏற்றகாலத்திலே நேர்த்தியாய் செய்துமுடித்திருக்கிறார். இன்று நானும் எனது குடும்பமும் அவரது கனமான ஊழியத்துக்கென்று அழைக்கப்பட்டு அவருக்கு ஊழியஞ்செய்து வருகிறோம். என் சந்ததியும் உங்கள் அர்ப்பணிப்பால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது அம்மா. உங்கள் ஆசையை நமது கர்த்தர் நிறைவேற்றி முடித்திருக்கிறார். அம்மா! எனது இருதய புலம்பலை நீங்கள் கேட்கமாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் இவ்வுலக வாழ்வை முடித்துவிட்டீர்கள். ஆனால், கர்த்தர் இயேசு உறுதியான நம்பிக்கையை எமக்குத் தந்திருக்கிறார். ஒருநாள் அவரது வருகையில் உங்களையும், பப்பாவையும் சந்திக்க பெரும் கிருபையளிப்பார். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும். "ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கட வான்... ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்" (யோவான்12:26) அப்பொழுது உங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். அதற்காக நமது கர்த்தரை மீண்டும் ஸ்தோத்திரித்து அவருக்குள் என்னைப் பெலப்படுத்திக்கொள்ளுகிறேன். என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார். (சங்கீதம் 30:11) இப்படிக்கு, உங்கள் மூத்த மகன் Joseph Rajasingham-Germany அசல் படிவத்தை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் >>>>> என் பெற்ற தாயை நினைத்துப்பார்க்கிறேன்=!1582516!


மகளாய் நான் கதறுகிறேன் மஞ்சளில் குளித்தெழுந்த பழிங்கு நிற மேனியாள் அலையலையாய் இடைதவளும் கார்மேகத் தோகையாள் தீட்சணியப் பார்வையாள் திடமான மனதுடையாள் வாக்கிலே சத்தம் கொண்டாள் தந்தை வாய்மொழியில் வேதம் கண்டாள் அவள்தான் என்தாய் தாயில்லாமல் வளர்ந்த பிள்ளையவள் தந்தை அரவணைப்பில் வாழ்ந்த மங்கையவள் உடன் பிறந்தோர் நால்வருக்கும் செல்லமவள் உற்றம், சுற்றம் யாவருக்கும் பிடித்த மகள் ஆற்றிவந்த ஆசிரியத் தொழிலைவிட்டு அப்பாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு சீர்பெறு மானிப்பாய் சிவதலத்தைவிட்டு மான்புமிகு மன்னார் நகர்பதிக்கு வாழ வந்தாள் நற்குடியில் பிறந்து நல் இயல்பு மிகுந்த புண்ணியவான் கரம்பிடித்து பூரித்து வாழ்ந்தாள் தந்தைமேல் வைத்தபாசம் சற்றேனும் குறைவுபடாது தன் மாமியாரை நேசித்தாள் , மகளாகிப் பணிபுருந்தாள் சுற்றத்தாரை நேசித்தாள், தன் கணவர் வழி உற்றத்தாரை மதித்து வாழ்ந்தாள் பெற்றெடுத்த நான்கு மக்களையும் நல்லியல்பில் வளர்த்தெடுத்தாள் காலங்கள் மாறிட, கஷ்டங்கள் சூழ்ந்திட கைபிடித்த கணவரை காலன் கவர்ந்து சென்றிட கலங்கி ஏங்கி நின்றாய் அம்மா, மனம் பேதலித்துப் போனாயம்மா உடல் தளர்ந்ததம்மா, உருவம் குலைந்ததம்மா நோயும் வந்ததம்மா, மனத்திடனும் குறைந்ததம்மா பேரன் பேத்தி தீபம் பிடிக்க, பெண்மகவு கதறி அழ ஆண் மக்கள் உடல் சுமக்க கல்லறை போக ஆசித்தாயம்மா - ஆனால் எனைப் பெற்ற தாயே! எதுவும் நடக்கவில்லை, என் இதயமும் ஆறவில்லை ஐவைந்து ஆண்டுகள் கடந்து சென்றாலும் - அம்மா! இதயம் கனக்கிறது, இரு விழிநீர் சொரிகிறது மறு ஜென்மம் உண்டு என்று மற்றைய வேதம் சொல்லுகிறது உண்மையாய் அது இருந்தால் அம்மா உனக்கே நான் மகளாய் பிறக்க வேண்டும் போதும் போதும் என்று நீ சொல்லும் வரை உன் கடமை நான் செய்யவேண்டும் அம்மா சாந்தி! சாந்தி!! சாந்தி!!! மகள், குயின், குடும்பம் இலங்கை
அம்மாவைப் பிரிந்து 25 வருடங்கள் தாயாகவும், தந்தையாகவும் தாங்கிநின்ற தாயே! எம்மைப் பிரிந்து இரண்டரை சகாப்தங்கள்ஆகினதே பிரிந்துள்ள காலங்கள் இருட்டாக இருக்கையிலே ஏக்கங்கள் எம்மை வாட்டி வதைக்குதம்மா! நீங்களோ என் வீட்டில் இருப்பதான நினைவுகள் அடிக்கடி வந்து வந்தே போகின்றனவே! நினைவுகள் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தாலும் கானல் நீராய் அவை காணமல் போகின்றனவே! கனவினில் உங்களை உங்கள் வீட்டினில் காண்பது நிஜங்களா? இல்லை, இல்லை! அல்லது, நிஜங்களின் நினைவுகளா? விளங்கவில்லை அம்மா, ஒன்றும் புரியவுமில்லையே? இதற்கு காரணம் தேடி மனமோ ஏங்குது, காத்துக் கிடக்கையில் காலம்தான் போகுது காலமோ எனக்கொன்றும் சொல்லாமலிருக்குது இவையெல்லாம் எனக்கு ஏன்தான் தோன்றுது? சொல்லவா நினைத்தனீங்கள் விட்டனவற்றை? அல்லது, ஏதும் சொல்லத்தான் இப்போ தோன்றுகின்றதா? அம்மா! நான் செபிக்கையில் ஒருநாள் உங்களைக் கண்டேன் இளமைப் பருவ உடைவடிவுடனே மறக்கவே முடியா புன்னகை உதிர்த்து பூரித்த வதனமும் புதுமுகப் பொலிவுடனும் வினாடியினுள்ளே தோன்றி மறைந்தது கண்ணுள் இன்னமும் படமாய் நிக்குது என்ன செய்யணும் ஒன்றுமே விளங்கல சிந்தித்துப் பார்க்கறேன் ஒன்றுமே புரியல இத்தனை வருடங்கள் கடந்திட்ட பின்பும் எனது அறியும் பருவம் ஆனால் அறியாநிலையினில் உங்களை ஆண்டவன் அழைத்து தன்னண்டை வைத்தான் ஆனால், நானோ உங்களை பலமுறை காத்தேன் உயிர்தந்த உயிரே தாயே உன்னை! காலம் பகைத்ததோ? காணுமென்றானோ கடவுள் அப்போ? நாங்கள் வருமுன்னே எம்மைப் பிரித்து விட்டானே! உறவுகளும் கயவர்களாய் மாறினர் உயிருடன் உங்களை கசக்கி எறிந்தனர் தாங்கி நின்றோம் நான்கு பிள்ளைகளும் பப்பாவை இழந்தும் இடிஞ்சு விழாமல்; தொதள் கிண்ட என்னையும் விட்டதும், ஊறிடும் எண்ணையைக் காட்டித் தந்ததும்; பெருமிதம் கொண்டதும் பூரிப்படைந்ததும்; கேக் தாச்சி வழிக்கவிட்டு வியந்தென்னைப் பார்த்ததும் எள்ளை இடித்து உருண்டை ஆக்கி எமை உண்ண வைத்ததும்; மீனெண்ணை தந்து ஏப்பம் விட வைத்ததும்; அரிசியை இடித்து வறுத்தவுடனே தேங்காய்ப் பூவுடன் குழைத்துண்ணத் தந்ததும், அந்த நினைவுகள் ஒன்றும் போகல, ஒன்றுமே போகவில்லை இப்பவும்; ஈரல் கறி நீங்கள் காச்சும் விதமோ வேறு, அதனை, என் மனைவியோ அவ்வாறு காய்ச்சியும் தருவா! எத்தனை சொல்ல? அது உங்கள் பாசத்தைத் தாண்டுமா என்ன? இடையிடையே மனைவியும் நானும் பலவித தடைகளைத் தாண்டியே சந்திக்க வருவோமே மனைவியின் பெயரை வடிவாக்க கூப்பிட அவவுக்கும் மகிழ்ச்சி பொங்கியே வழியும் அவவை, அருகினில் இருத்தி கதைத்துக் கொள்வதை பார்த்து இரசித்து அமைதியாகப் போவேன் என்னை டொக்டராக்கி பார்த்தீங்கள் அம்மா! நானும் உங்கள் பேத்தியை, என் மகளை, டொக்டராக்கியும் விட்டேன் அம்மா! நீங்கள் பார்த்து ரசிப்பீங்கள் எப்பவும் எம்மை ஆசீர் பொழிவீர்கள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கி ஆனால், எங்கள் குடும்பம் இன்னமும் வாடுது, நிமிந்து நடக்க நிஜங்கள் தடுக்குது எல்லாம் இனியோ முடிவுக்கு வருமென என் நெஞ்சோ சொல்லுது அது இறையருள் வாக்கு உங்களையும் கண்டதை நல்லமென தங்கச்சி சொன்னா இறைவனிடம் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்கள், தாயே நானும் முளைக்கணும், என் குடும்பத்தைத் தாங்கணும். தெய்வமாய்ப் போன தாயே உங்களை வணங்கும் குமார் குடும்பம் London, UK 25 வருடங்களைத் தாண்டி.... I miss you Amma! குயின்ரஸ் குடும்பம் London, UK

திரு அன்ரன் குலேந்திரன்

Place

Jaffna, France

Anniversary

6ஆம் வருட நினைவஞ்சலி

Information

Death takes the body God takes the soul Our mind holds the memories Our heart keeps the love Our faith let's us know we will meet again

வடக்கு மக்களின் அவலங்கள் உட்பட தமிழ் மக்களின் போராட்டக் குரல்களை நாம் முன்னெடுக்கும் போது அதற்கென களம் அமைத்துத்தருவதில் முன்னிற்பது தேனாரம் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.*

எம்.ஏ.சுமந்திரன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினர்)

தேனாரம் நமக்கு அளித்துவரும் பங்களிப்புகள் தொடர்பில் நன்றிகள் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ரிஷாட் பதியுதீன் (மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர்)

எமது மக்கள் சார்பில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் ஓங்கி ஒலிக்கும் குரல்களை ஜனறஞ்சப்படுத்துவதில் தேனாரம் முன்னிற்கு நிற்கின்றது.

இரா. சாணக்கியன் (தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்)

நாட்டின் நடப்புகளை மட்டுமன்றி, பாமர மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளையும் துல்லியமாகச் சுட்டிக்காட்டுவதில் தேனாரம் இணையத்தளம் முன்னிலை வகிக்கின்றது.

ஏ.எம். றகீப் (கல்முனை முன்னாள் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி)