திரு. யோன் யோசப் செபஸ்ரியன் புண்ணியசிங்கம்

Place

மானிப்பாய், மன்னார்

Anniversary

50ஆவது ஆண்டு தினம்

Information

காலங்கள் எங்களுடன் வாழ வைக்குமுன் உங்களைக் காலன் கொண்டு சென்றுவிட்டானே.

காலங்கள் கொஞ்சம் இல்லை - ஐந்து சகாப்தங்கள் கடந்து போய்விட்டன.

எனக்குள்ள ஞாபகம் உங்களைக் கடைசியாக 2ஆம் வாட்டில் உங்களுக்குத் துணையாக நான் நின்று கொண்டிருந்ததுதான். அந்த இரவு நீங்களும் தூங்கவில்லை, நானும் தூங்கவில்லை. உங்களுக்கு விளங்கியிருக்குமோ தெரியவில்லை இன்றுதான் நீங்கள் கடைசியாக இந்த உலகத்தைப் பார்க்கப் போகின்றீர்களென்று. அதுதான் நீங்கள் தூங்கவில்லேயோ?

எனக்கு இந்த விடயங்கள் புரியாத வயசில் நான் அப்போது உங்கள் கட்டிலில் பக்கத்தில் இருந்தேன். பயப்படும் வயசு, அரூபிகளை எண்ணி. ஆனால், நீங்கள் இருக்கையில் அந்த பயப்பிடும் நினைவுகள் ஒன்றும் எனக்கோ வரவில்லை.

அன்றிரவு, நாங்கள் இருந்த வாட்டில் உங்களுக்குப் பக்கத்தில் ஒருவரும், முன்னால் ஒருவரும், கொஞ்சம் தள்ளி ஒருவருமாக மூன்று நோயாளிகள் இறந்து போயினர். அப்போது எனக்கு ஒன்றும் பயங்கரமாகத் தெரியவில்லை. ஏனென்றால், நீங்கள் என்னுடன் இருந்ததனாலே.

அன்றிரவு, ஹவுஸ் சேர்ஜன் (House Surgeon) எல்லா நோயாளிகளையும் பார்ப்பதற்கு இரவு விசிற் வந்தார். பப்பா, உங்களையும் அவர் பார்த்தார். உங்களுக்கு அவர் சொன்னது இன்னமும் எனது காதினில் கேட்கின்றது. "ஐயா! உங்களுடைய வயிற்றினுள் சின்னப் பிரச்சினைதான். நாளைக்குக் காலை (14.01.1974) அம்புலஸில அனுராதபுரம் கொண்டு போவினம். அங்கு ஒரு சின்ன ஒப்பறேஷன் செய்வினம். அடுத்த நாள் (15.01.1974) நீங்கள் இங்கு வந்தவிடலாம். நான் இங்கு அதற்குரிய படிவங்களை (Transfer Form) எல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போகிறேன், டீ.எம்.மோ. (District Medical Officer) நாளைக்குக் காலை கையெழுத்துப் போட்டதும் காலை 6மணிக்கெல்லாம் வரும் அம்புலன்ஸில் நீங்கள் போகக்கூடியதாக இருக்கும்."

மறுநாள் விடிந்தது. காலை 6மணிக்கெல்லாம் அம்புலன்ஸும் வந்தது. நானோ கையெழுத்திற்காக டீ.எம்.மோ.வின் ஆபீஸடியில் காத்துக்கொண்டிருந்தேன். நானோ சிறுபையன். வாசலடியில் நிற்பதனைக்கூட பார்க்காத அவர், வந்த கடிதங்களை எல்லாம் ஒன்றின்பின் ஒன்றாகப் பிரித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். கையெழுத்துப் போடாமல் தன்னுடைய கடிதங்கள் படிப்பதில் கண்ணாக இருந்தார்.

மணி மதியம் 12ஐயும் நெருங்கியது. அப்போதுதான் கையெழுத்தையும் போட்டார் அந்த டீ.எம்.மோ. ஏன் அவ்வாறு செய்தார் என்று கூட எனக்குத் தெரியாது. ஹவுஸ் சேர்ஜனுக்கும் (House Surgeon) தெரியாது. அன்றைய நாள் தைப்பொங்கல் தினமாகும். விரைந்து சென்றது அம்புலன்ஸ், அனுராதபுர வைத்தியசாலையை நோக்கி.
அன்று இரவு பப்பா உங்களுடன் நான் நின்றபோது நீங்கள் எனக்குச் சொன்ன வார்த்தைகளின் ஈரம் இன்னமும் காயவில்லை. என்ன கூறினீங்கள் என்றால், குமார், "நீ நன்றாக ஆங்கிலத்தைப் படி, உன் பாஷை (தமிழ் மொழி) தெரிந்தவர்களுடன் ஆங்கிலத்தில் கதைக்காதே, தினமும் நீ பரிசுத்த ஆவியானவரின் செபமும், செபமாலையும் சொல்லு" என்பதாகும்.

பப்பா! நாங்கள் எல்லாரும் உங்களைத் தேடி, பாஷை தெரியாத இடமான அனுராதபுரத்திற்கு அம்மாவின் கையைப் பிடித்துக் கொண்டு பின் தொடர்ந்தோம். உங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. எங்களுக்கு அறிமுகமானவர், சம்பந்தர், அங்கு எங்களைச் சந்தித்தார். அவர்தான் நீங்கள் கடைசியாக என்ன கூறினீங்கள் என்பதையும், என்ன நடந்தது என்பதனையும் விரிவாகச் சொன்னார்.

உங்களை அனுராதபுரத்திற்குக் கொண்டு வந்த போது அங்கு வேலை செய்த அனைத்து தமிழ் டொக்டர்களும் மதிய யாழ் தேவியில் ஏறி தைப் பொங்கலுக்காக யாழ்ப்பாணம் சென்று விட்டார்கள். கொஞ்சம் வெள்ளன வந்திருக்கலாம் என்றும், உங்களை டாக்டர்கள் இல்லாத பட்சத்தில் குருநாகல் ஆஸ்பத்திரிக்கு மாற்றியதகவும், அங்கு கொண்டு செல்லும் வழியில் நீங்கள் அம்புலன்ஸ் சாரதியிடம் சொன்னீங்களாம், மனைவி, பிள்ளைகள் இங்குதான் வருவார்கள், அவர்களுக்கு குருநாகல் என்றால் றொம்ப கஷ்டமாகிவிடும், தயவுசெய்து திரும்பவும் அனுராதபுர வைத்தியசாலைக்கே கொண்டு போருங்கள் என்று. அம்புலன்ஸ் சாரதியும் உங்களது வேண்டகோளுக்காக அம்புலன்ஸைத் திருப்பிக் கொண்டு அனுராதபுர ஆஸ்பத்திரிக்கே கொண்டு வந்தார்கள் என்றும், உங்களைக் கொண்டு வந்த அம்புலன்ஸ் அனுராதபுர ஆஸ்பத்திரி வாசலுக்குள் ஏறும்போது உங்கள் உயிர் பிரிந்ததாகவும் சொன்னார்.

உங்களுக்கு ஏற்கனவே தெரிந்துவிட்டதா பப்பா எல்லாம். கடைசிவரைக்கும் எங்களது நினைவுகளுடனே அனுராதபுர ஆஸ்பத்திரியிலே உங்கள் ஆவி இவ்வுலகை விட்டு பிரிந்து போய்விட்டதே!

கொஞ்சம் வெள்ளன உங்களை அனுராதபுர ஆஸ்பத்திரிக்குக் கொண்டு வந்திருந்தால் அந்தச் சிறிய ஒப்பிரேஷனைச் செய்து மீண்டும் எங்களுடன் சந்தோஷமாகச் சீவித்திருப்பீர்களே. அந்த டீ.எம்.ஓ. எங்கள் குடும்பத்திற்கே செய்த துரோகம் இன்னமும் என் மனதில் மறக்க முடியாமல் இருக்கின்றதே!

நீங்கள் இறந்து உங்களை வீட்டினுள் வளர்த்தி இருக்கையிலே நீங்கள் வளர்த்த பசு அன்றிரவு பெரிய சத்தமாகக் கத்திக் கொண்டு தன் உயிரை விட்டுவிட்டது.

நீங்கள் இறந்த மூன்றாம் நாள் நீங்கள் என் கனவில் வந்தீங்கள். என்னை செபஸ்தாயார் கோவிலுக்கு காலைப் பூசைக்குக் கூட்டிக் கொண்டு போகின்றீங்கள், பப்பா. நானும் ஓடி, ஓடிக் கொண்டு உங்கள் பின்னால் வருகின்றேன். அப்போது நீங்கள் சொல்லுகின்றீங்கள், "எங்களை எல்லாரும் ஒரு துரும்பாக எண்ணிவிட்டார்கள். பொறு ஒரு கை பார்க்கின்றேன்" என்று. அதன் பின்பு உங்களைக் காணவில்லை. ஆனால், ஒரு 8 அல்லது 10 வருடங்களுக்கு முன்னால் மீண்டும் எனது கனவில் வந்தீங்கள் பப்பா. அம்மாவின் மடியில் படுத்திருக்கின்றீர்கள், ஆனால், காயப்பட்டுள்ளவாறு கண்டேன்.

நீங்கள் உங்கள் ஆபீஸில் வேலை செய்யும் போது, நான் அங்கு வந்து ஒரு பேப்பர் கிளிப் ஒன்று கேட்டேன். அப்போது நீங்கள் சொன்ன அறிவுரை. இந்தக் கிளிப்பும் ஒரு அரசாங்கச் சொத்து. அதை எடுப்பது தவறு என்று. அந்த நேர்மையான உங்கள் உருவும் இன்னமும் மனதிலுண்டு.

ஒருநாள் அம்மா சொன்னா, தான் உங்களுக்கு ஆஸ்பத்திரியில் இருக்கும் போது, நானும் உங்களுடன் நின்றேன். அப்போது அம்மா சாப்பாட்டுக் கோப்பை கழுவப் போகும் போது நீங்கள் அம்மாவிற்குப் முன்னால் போவதையும், பிறகு சாப்பாடு உங்களுக்குக் கொடுத்துவிட்டு வீட்டிற்குப் போகும் போது, தனக்கு முன்னால் நீங்கள் போவதைக் கண்டதாகவும், பின்பு எங்கள் வீட்டிற்குப் போகத் திரும்பும் அந்த ஒழுங்கையிலே நீங்கள் மறைந்து விட்டதாகவும் கூறினா. அப்பவே தனக்குத் தெரிந்ததாம் பப்பா நீங்கள் இனி வீட்டிற்கு உயிருடன் வரமாட்டீர்கள் என்று. இதையிட்டு நான் பல தடவைகள் நினைத்திருப்பேன் இவ்வாறு தெரிந்து பின்பு எங்களை எல்லாம் வளர்த்து ஆளாக்கின அம்மாவின் தைரித்தை யாரிடமும் காணமுடியாது.

ஒரு முக்கிய விடயம் என்னென்றால் பப்பா, நீங்கள் கடைசியாக்க கேட்டுக் கொண்டபடி, இன்னமும் தினமும் செபமாலையும், இஸ்பிரித்துசாந்துவானவரின் செபமும் கிட்டத்தட்ட 40 வருடங்களாகச் நான் சொல்லிக் கொண்டுதான் வருகின்றேன். இதனையிட்டு நீங்கள் சந்தோஷப்படுவீங்கள் என்ற நம்புகின்றேன்.
அத்துடன், இன்றுவரையும் உங்கள் பாத அடிகளைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றேன், உண்மை, நேர்மை, சத்தியம், வாய்மை, கடவுடனான ஒன்றிப்பு, இறைவனின் வார்த்தையினை வாழ்வாக்கி வாழுகின்றேன்.

நீங்கள் எனது மனைவியிடம் நான் அவவை நினைக்குமுன்பே நீங்கள் அவவிடம் என்னை உங்களிடம்தான் கொடுக்க வேண்டும் என்று. நீங்கள் அவவிற்கு நீங்கள் சொன்னதற்கிணங்க நான் அவவைத்தான் மணமுடித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றேன். அதுவும் உங்கள் ஆசைதானே பப்பா. அத்துடன், எங்கே உங்கள் உயிர் பிரிந்ததோ அங்கேதான் எங்கள் மகளும் பிறந்தாள் - அதுவும் உங்கள் விருப்பமா பப்பா! சந்தோஷம் பப்பா.

உங்களுடைய வாழ்க்கையினை எங்களால் மறக்கவே முடியாது. நோகாமல் வாழ்ந்து, எவ்வளவோபேரை வாழவைத்து இவ்வாறுதான் வாழவேண்டும் என்று சொல்லி விழங்க வைக்காமல் வாழ்ந்து காட்டிச் சென்றது இன்னமும் படமாக துல்லியமாக என்மனதினில் ஓடிக் கொண்டிருக்கின்றது - உங்கள் அந்தப் புனிதமான வாழ்க்கையினை பின்பற்றிக்கொண்டிருக்கும் நான் இவ்வுலகில் வாழ்ந்து முடிப்பேன் பப்பா.

நான் எவ்வளவுதான் படித்தாலும், என் மனைவி எவ்வளவுதான் படித்தாலும், எங்கள் மகள் கல்வியில் தொடர்ந்து சாதனைகள் புரிந்தாலும் எங்களால் இன்னமும் வாழ்க்கையில் சிரிக்க முடியவில்லை பப்பா.

துக்கங்கள் தாக்குகின்றன, துயரங்கள் வாட்டுகின்றன, சந்தோஷமில்லாத மனமும், இந்த உலகத்தில் ஒன்றுமே சொந்தமில்லாத நிலைமைக்குத் தள்ளப்பட்டு, சுக்கு நூறாக உடைக்கபட்டு மனங்களோடு காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றோம் நாம். தனிமையினை உணருகின்றோம் - தரணி வாழ்க்கை தேவையே இல்லையென்பதனை அறிந்து கொண்டோம் - உள்ளதனைச் சொல்லி ஆற உறவென்று ஒன்றுமில்லை - ஊருக்கு முன்னால் நடிக்கின்றோம், குறைவற்ற சந்தோஷத்தில் மிதப்பதாக - வேண்டிக் கேட்க எனக்கு நாதியில்லை - வேண்டுமென்று உரிமையுடன் நினைக்க ஒருத்தர் இல்லை - எமக்கு இப்போ வயசுமில்லை - ஒன்றுமே இல்லையென்றாயிற்று - சொல்வதைக் கேட்க இந்த உலகமும் தயாரில்லை - நமக்கும் பெலமுமில்லை - உங்களிடம்தான் சொல்லுகின்றேன் - நன்றி பப்பா என் கவலைகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு.
உங்களுக்காகவும், அம்மாவுக்காகவும் எனது செபமாலையில் தினமும் வேண்டுகின்றேன் - எங்கள் குடும்பத்தைக் கைதூக்கி விடுங்கள் பப்பா - எங்களுக்குப் பெலமில்லை.

உங்களிடம் கைகூப்பிக் கேட்கின்றேன் உங்கள் கையால் எங்களைத் தூக்கிவிடுங்கள். துயரினை நீக்கிவிடுங்கள்.
நன்றி பப்பா.

இறைவன் உங்களை நல்ல இடத்தில் வைத்து காப்பாற்றிக் கொண்டு வருவாராக.

ஆமென்!

உங்கள் மகன், குமார் குடும்பம்

Leave a message below…