திருமதி மாகிறற் சௌபாக்கியம் புண்ணியசிங்கம்

மானிப்பாய், கண்டி, மன்னார்

Place

மானிப்பாய், கண்டி, மன்னார்

Anniversary

25ஆம் வருட நினைவஞ்சலி

Information

என் பெற்ற தாயை நினைத்துப்பார்க்கிறேன்.

Audio >>>> என் பெற்ற தாயை நினைத்துப்பார்க்கிறேன்

அம்மா! நீங்க இன்று எம்முடன் இல்லை. எம்மை விட்டுப் பிரிந்து இன்று 25 வருடங்களாகிவிட்டது. எனது நினைவுகூருதல் இந்தநாள் மட்டுமல்ல, ஒவ்வொரு நிமிடமும் உங்களை என் இருதயத்தில் நினைத்துக்கொண்டு தானிருக்கிறேன். உங்கள் மூத்த பிள்ளையென்று என்னைக் குறித்து உங்கள் இருதயத்திலிருந்த அன்பும், பாசமும் அந்நேரம் நான் உணராதிருந்த வயது. ஆனால், இன்று ஒவ்வொரு நொடியும் அதை நினைத்து எனக்குள் அழுதுகொண்டுதானிருக்கிறேன். இதை யாருமே அறியவோ புரிந்துகொள்ளவோமாட்டார்கள். எனது பிள்ளைகளையும், பிள்ளைகளின் பிள்ளைகளையும் அணைத்துக் கொஞ்சி உங்கள் அன்பைப் பொழிய இன்று நீங்கள் இல்லை. எனது வாலிப வயதுவரை எனக்கு நீங்களே உடுப்புகள் தைத்து அழகுபார்த்தீர்களே, என் பிள்ளைகளுக்கு அவ்விதமாக அழகுபார்க்க நாட்டின் சூழ்நிலைகளும் உங்கள் சரீர பெலவீனங்களும் அன்று தடையாகபோய்விட்டதே.

ஆனாலும் அம்மா! உங்கள் மூத்த மகனாகிய எனக்காக நீங்கள் ஆயத்தப்படுத்தி தாலாட்டி அழகுபார்த்த தொட்டிலிலே எனது மூத்த மகனை (உங்கள் பேரனை) பெரிய ஆசையோடு வளர்த்தி அழகு பார்த்தீர்களே... அதில் நீங்கள் அடைந்த அந்த சந்தோஷத்தை இன்றும் நான் நினைக்கும்போதெல்லாம் அம்மா என்னால் தாங்கவேமுடியவில்லை.

அம்மா! நீங்கள் எங்களைவிட்டுப் பிரியும்போதுகூட உங்கள் அருகில் இருக்கும் பாக்கியம் எங்களுக்குக் கிடைக்கவில்லையே. 1996ம் ஆண்டு நான் குடும்பமாக இலங்கைக்கு வந்தபோது உங்கள் இயலாத நிலையிலும் சக்கர நாற்காலியில் இருந்தவண்ணம் உங்கள் வலது புறத்தில் எனது மகளும், இடது புறத்தில் எனது தங்கையின் மகனும், உங்களுக்குப் பின்னாக எனது மகனும் நின்றபடி எடுத்த போட்டோவை பார்க்கும்போதெல்லாம் என் கண்கள் இப்பொழுதும் கலங்குகிறது. இது சாதாரண போட்டோ அல்ல. என் தேவன் எனக்கு ஆயத்தப்படுத்தித்தந்த அன்பின் நினைவின் சின்னமாகவே எண்ணுகிறேன். இதை எனது பாக்கியமாகவும் கருதுகிறேன். அம்மா! உங்கள் பேரப்பிள்ளைகளோடு நீங்கள் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் அந்தக் கெம்பீரம் அம்மா உங்கள் இயலாத நிலையிலும் குறையவேயில்லை. இந்த கெம்பீரத்தோடுதான் என்னையும், எனது சகோதரங்களையும் நீங்கள் வளர்த்தெடுத்தீர்கள்.

அம்மா! எமது சந்தோஷமான குடும்ப வாழ்க்கையில் பொறாமைகொண்ட உங்கள் உறவினர்களால் நீங்கள் வியாதிப்படுக்கையில் பல கஷ்டங்களை அனுபவித்தபோதும் எனது பப்பாவும் என் தங்கையும் எங்கள் வீட்டிலும், நீங்களும் நானும் என் இரண்டு சகோதரங்களும் உங்கள் வைத்தியத்துக்காக வேறிடத்திலுமிருந்த அந்த வேதனையான காலம் சாதாரணமானதல்ல. அப்பொழுது எனது சிறிய வயதில் நீங்கள் சொல்லச் சொல்ல உங்களுக்கும் என் இரண்டு சகோதரங்களுக்கும் நான் உணவு சமைத்துத்தந்த அந்த காலங்களை நான் இப்போ பாக்கியமாக கருதுகிறேன். எனது பப்பாவை இழந்தபோதும் நீங்கள் சோர்ந்துபோகாமல் என்னையும் எனது சகோதரங்களையும் கஷ்டம் எதுவும் தெரியாமல் கௌரவமாக வளர்த்தீர்களே. உங்கள் முத்த மகன் என்ற வகையில் நான் நன்கு அறிந்திருக்கிறேன் அம்மா. எந்த சூழ்நிலையிலும் யார் முன்னிலையிலும் உங்கள் கெம்பீரமான நடை, கெம்பீரமான பேச்சு, கெம்பீரமான செயல்கள் அனைத்தையும் இன்றும் என் கண்முன் நிறுத்திப்பார்த்து பெருமிதம் கொள்ளுகிறேன் அம்மா.

அம்மா! நான் உங்கள் மூத்த புதல்வன் என்பதால் என் குழந்தைப் பருவத்திலேயே பப்பாவும் நீங்களும் என்னை ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்ய அர்ப்பணித்துவிட்டீர்கள். நான் வளர வளர உங்கள் அர்ப்பணிப்பை எனக்கு அவ்வப்போது நினைவூட்டி வளர்த்துவந்தீங்க. நீங்க ஜீவனுள்ள தேவனுடைய கட்டளைகளை அறிந்தவர்களென்றும், அதின்படி நடக்க உங்களை ஒப்புக்கொடுத்த பெற்றோர் என்பதையும் நான் அறிந்து, எனக்கு இப்படிப்பட்ட தேவபக்தியுள்ள பெற்றோரை தந்ததற்காக என் தேவனுக்கு முன்பாக பணிந்து அவரை நன்றியுடன் ஸ்தோத்தரிக்கிறேன்.

"முதற்பேறான எந்த ஆண்பிள்ளையும் கர்த்தருக்குப் பரிசுத்தமானதெனப்படும் என்று கர்த்தருடைய நியாயப்பிரமாணத்தில் எழுதியிருக்கிறது" (லூக்கா 2:23)

அம்மா! உங்களுடைய இந்த மாபெரும் அர்ப்பணிப்பை அந்தநாளில் நான் உணராவிட்டாலும் கர்த்தர் சகலதையும் அறிந்தவர். அவர் அதை ஏற்றகாலத்திலே நேர்த்தியாய் செய்துமுடித்திருக்கிறார். இன்று நானும் எனது குடும்பமும் அவரது கனமான ஊழியத்துக்கென்று அழைக்கப்பட்டு அவருக்கு ஊழியஞ்செய்து வருகிறோம். என் சந்ததியும் உங்கள் அர்ப்பணிப்பால் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது அம்மா. உங்கள் ஆசையை நமது கர்த்தர் நிறைவேற்றி முடித்திருக்கிறார்.

அம்மா! எனது இருதய புலம்பலை நீங்கள் கேட்கமாட்டீர்கள். ஏனென்றால், நீங்கள் இவ்வுலக வாழ்வை முடித்துவிட்டீர்கள். ஆனால், கர்த்தர் இயேசு உறுதியான நம்பிக்கையை எமக்குத் தந்திருக்கிறார். ஒருநாள் அவரது வருகையில் உங்களையும், பப்பாவையும் சந்திக்க பெரும் கிருபையளிப்பார். அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை நிறைவேறும்.

"ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கட வான்...
ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்தால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்"
(யோவான்12:26)

அப்பொழுது உங்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி உண்டாகும். அதற்காக நமது கர்த்தரை மீண்டும் ஸ்தோத்திரித்து அவருக்குள் என்னைப் பெலப்படுத்திக்கொள்ளுகிறேன். என் புலம்பலை ஆனந்தக் களிப்பாக மாற்றுவார்.
(சங்கீதம் 30:11)

இப்படிக்கு,
உங்கள் மூத்த மகன்
Joseph Rajasingham-Germany

அசல் படிவத்தை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும் >>>>> என் பெற்ற தாயை நினைத்துப்பார்க்கிறேன்



மகளாய் நான் கதறுகிறேன்

மஞ்சளில் குளித்தெழுந்த பழிங்கு நிற மேனியாள்
அலையலையாய் இடைதவளும் கார்மேகத் தோகையாள்
தீட்சணியப் பார்வையாள் திடமான மனதுடையாள்
வாக்கிலே சத்தம் கொண்டாள்
தந்தை வாய்மொழியில் வேதம் கண்டாள்
அவள்தான் என்தாய்

தாயில்லாமல் வளர்ந்த பிள்ளையவள்
தந்தை அரவணைப்பில் வாழ்ந்த மங்கையவள்
உடன் பிறந்தோர் நால்வருக்கும் செல்லமவள்
உற்றம், சுற்றம் யாவருக்கும் பிடித்த மகள்

ஆற்றிவந்த ஆசிரியத் தொழிலைவிட்டு
அப்பாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு
சீர்பெறு மானிப்பாய் சிவதலத்தைவிட்டு
மான்புமிகு மன்னார் நகர்பதிக்கு வாழ வந்தாள்

நற்குடியில் பிறந்து நல் இயல்பு மிகுந்த
புண்ணியவான் கரம்பிடித்து பூரித்து வாழ்ந்தாள்
தந்தைமேல் வைத்தபாசம் சற்றேனும் குறைவுபடாது
தன் மாமியாரை நேசித்தாள் , மகளாகிப் பணிபுருந்தாள்

சுற்றத்தாரை நேசித்தாள், தன் கணவர் வழி
உற்றத்தாரை மதித்து வாழ்ந்தாள்
பெற்றெடுத்த நான்கு மக்களையும்
நல்லியல்பில் வளர்த்தெடுத்தாள்

காலங்கள் மாறிட, கஷ்டங்கள் சூழ்ந்திட
கைபிடித்த கணவரை காலன் கவர்ந்து சென்றிட
கலங்கி ஏங்கி நின்றாய் அம்மா, மனம் பேதலித்துப் போனாயம்மா
உடல் தளர்ந்ததம்மா, உருவம் குலைந்ததம்மா
நோயும் வந்ததம்மா, மனத்திடனும் குறைந்ததம்மா

பேரன் பேத்தி தீபம் பிடிக்க, பெண்மகவு கதறி அழ
ஆண் மக்கள் உடல் சுமக்க கல்லறை போக ஆசித்தாயம்மா - ஆனால்
எனைப் பெற்ற தாயே!

எதுவும் நடக்கவில்லை, என் இதயமும் ஆறவில்லை
ஐவைந்து ஆண்டுகள் கடந்து சென்றாலும் - அம்மா!

இதயம் கனக்கிறது, இரு விழிநீர் சொரிகிறது
மறு ஜென்மம் உண்டு என்று
மற்றைய வேதம் சொல்லுகிறது
உண்மையாய் அது இருந்தால் அம்மா
உனக்கே நான் மகளாய் பிறக்க வேண்டும்
போதும் போதும் என்று நீ சொல்லும் வரை
உன் கடமை நான் செய்யவேண்டும் அம்மா

சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

மகள், குயின், குடும்பம்
இலங்கை






அம்மாவைப் பிரிந்து 25 வருடங்கள்

தாயாகவும், தந்தையாகவும் தாங்கிநின்ற தாயே!
எம்மைப் பிரிந்து இரண்டரை சகாப்தங்கள்ஆகினதே
பிரிந்துள்ள காலங்கள் இருட்டாக இருக்கையிலே
ஏக்கங்கள் எம்மை வாட்டி வதைக்குதம்மா!

நீங்களோ என் வீட்டில் இருப்பதான நினைவுகள்
அடிக்கடி வந்து வந்தே போகின்றனவே!
நினைவுகள் கொஞ்சம் தெம்பைக் கொடுத்தாலும்
கானல் நீராய் அவை காணமல் போகின்றனவே!

கனவினில் உங்களை உங்கள் வீட்டினில் காண்பது
நிஜங்களா? இல்லை, இல்லை!
அல்லது,
நிஜங்களின் நினைவுகளா?
விளங்கவில்லை அம்மா, ஒன்றும் புரியவுமில்லையே?
இதற்கு காரணம் தேடி மனமோ ஏங்குது,
காத்துக் கிடக்கையில் காலம்தான் போகுது
காலமோ எனக்கொன்றும் சொல்லாமலிருக்குது
இவையெல்லாம் எனக்கு ஏன்தான் தோன்றுது?
சொல்லவா நினைத்தனீங்கள் விட்டனவற்றை?
அல்லது,
ஏதும் சொல்லத்தான் இப்போ தோன்றுகின்றதா?

அம்மா!
நான் செபிக்கையில் ஒருநாள் உங்களைக் கண்டேன்
இளமைப் பருவ உடைவடிவுடனே
மறக்கவே முடியா புன்னகை உதிர்த்து
பூரித்த வதனமும் புதுமுகப் பொலிவுடனும்
வினாடியினுள்ளே தோன்றி மறைந்தது
கண்ணுள் இன்னமும் படமாய் நிக்குது
என்ன செய்யணும் ஒன்றுமே விளங்கல
சிந்தித்துப் பார்க்கறேன் ஒன்றுமே புரியல
இத்தனை வருடங்கள் கடந்திட்ட பின்பும்


எனது அறியும் பருவம் ஆனால் அறியாநிலையினில்
உங்களை ஆண்டவன் அழைத்து தன்னண்டை வைத்தான்
ஆனால், நானோ உங்களை பலமுறை காத்தேன்
உயிர்தந்த உயிரே தாயே உன்னை!
காலம் பகைத்ததோ? காணுமென்றானோ கடவுள் அப்போ?
நாங்கள் வருமுன்னே எம்மைப் பிரித்து விட்டானே!

உறவுகளும் கயவர்களாய் மாறினர்
உயிருடன் உங்களை கசக்கி எறிந்தனர்
தாங்கி நின்றோம் நான்கு பிள்ளைகளும்
பப்பாவை இழந்தும் இடிஞ்சு விழாமல்;

தொதள் கிண்ட என்னையும் விட்டதும்,
ஊறிடும் எண்ணையைக் காட்டித் தந்ததும்;
பெருமிதம் கொண்டதும் பூரிப்படைந்ததும்;
கேக் தாச்சி வழிக்கவிட்டு வியந்தென்னைப் பார்த்ததும்
எள்ளை இடித்து உருண்டை ஆக்கி எமை உண்ண வைத்ததும்;
மீனெண்ணை தந்து ஏப்பம் விட வைத்ததும்;
அரிசியை இடித்து வறுத்தவுடனே தேங்காய்ப் பூவுடன் குழைத்துண்ணத் தந்ததும்,
அந்த நினைவுகள் ஒன்றும் போகல, ஒன்றுமே போகவில்லை இப்பவும்;

ஈரல் கறி நீங்கள் காச்சும் விதமோ வேறு, அதனை,
என் மனைவியோ அவ்வாறு காய்ச்சியும் தருவா!
எத்தனை சொல்ல? அது உங்கள் பாசத்தைத் தாண்டுமா என்ன?

இடையிடையே மனைவியும் நானும்
பலவித தடைகளைத் தாண்டியே சந்திக்க வருவோமே
மனைவியின் பெயரை வடிவாக்க கூப்பிட
அவவுக்கும் மகிழ்ச்சி பொங்கியே வழியும்
அவவை, அருகினில் இருத்தி கதைத்துக் கொள்வதை
பார்த்து இரசித்து அமைதியாகப் போவேன்

என்னை டொக்டராக்கி பார்த்தீங்கள் அம்மா!
நானும் உங்கள் பேத்தியை, என் மகளை, டொக்டராக்கியும் விட்டேன் அம்மா!
நீங்கள் பார்த்து ரசிப்பீங்கள் எப்பவும் எம்மை
ஆசீர் பொழிவீர்கள் ஆண்டவரிடம் கேட்டு வாங்கி

ஆனால்,
எங்கள் குடும்பம் இன்னமும் வாடுது,
நிமிந்து நடக்க நிஜங்கள் தடுக்குது
எல்லாம் இனியோ முடிவுக்கு வருமென
என் நெஞ்சோ சொல்லுது அது இறையருள் வாக்கு
உங்களையும் கண்டதை நல்லமென தங்கச்சி சொன்னா
இறைவனிடம் கொஞ்சம் சிபாரிசு செய்யுங்கள், தாயே
நானும் முளைக்கணும், என் குடும்பத்தைத் தாங்கணும்.

தெய்வமாய்ப் போன தாயே உங்களை வணங்கும்
குமார் குடும்பம்
London, UK

25 வருடங்களைத் தாண்டி....

I miss you Amma!

குயின்ரஸ் குடும்பம்
London, UK

Audio

Leave a message below…