
posted 20th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக கடந்த சில தினங்களாக கிழக்கு மாகாணத்தில் பரவலாக அடைமழை பெய்துவருகின்றது.
இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மழை நீர் தேங்கி வெள்ளப் பாதிப்பு அவலங்களும் ஏற்படடுள்ளன.
குறிப்பாக இலங்கையின் முக்கிய விவசாய மாவட்டமான கிழக்கின் அம்பாறை மாவட்டம் அடைமழையால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.
அடைமழை காரணமாக இந்த மாவட்டத்தில் மும்முரமாக இடம்பெற்று வந்த பெரும்போக நெற்செய்கையின் அறுவடை வேலைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதுடன், விவசாயிகள் பாதிப்பையும் அடைந்துள்ளனர். அறுவடைக்குத் தயாரான நிலையிலுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்காணிகள் அடை மழையால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
குறிப்பாக நிந்தவூர், சம்மாந்துறை, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில், அக்கரைப்பற்று நாவிதன்வெளி உட்பட பல பிரதேசங்களில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கிய நிலையில் காணப்படுவதுடன், மழை நீடித்தால் பெரும்போக நெல்விளைச்சலில் பெரும் வீழ்ச்சியும் ஏற்படுமானால் விவசாயிகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவரென்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அடைமழை காரணமாக அக்கரைப்பற்று நகரப்பகுதி உட்பட புற நகர்ப்பகுதிகளிலும் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் காலநிலை சீரின்மையால் கிழக்கில் கடல் மீன்பிடித் தொழிலும் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)