
posted 10th June 2024
உறவுகளின் துயர் பகிர்வு
கதிர்காமம் காட்டுப் பாதை திறப்புக் கூட்டம் சிங்களத்தில் மட்டுமே நடந்தது
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை திறப்பு தொடர்பான கூட்டம் தனிச் சிங்களத்தில் நடத்தப்பட்டதால் அதில் பங்கேற்ற தமிழர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
அரச அதிகாரிகள், பொது - இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், மக்கள் என 90 வீதமானோர் தமிழர்களே கலந்து கொண்டனர். இருந்த போதிலும் கூட்டத்தில் விநியோகிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல், தனிச் சிங்களத்தில் அமைந்திருந்தது விசனத்தை ஏற்படுத்தியது. மேலும், கூட்டமோ தனிச் சிங்களத்தில் நடைபெற்றது. ஆனால், தமிழ் மொழி பெயர்ப்பும் இடம்பெறவில்லை.
இதேவேளை, வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமம் ஆடிவேல் விழாவுக்குச் செல்லும் பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை எதிர்வரும் 30 ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது ஜூலை 11 ஆம் திகதி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை உகந்தமலை முருகன் ஆலயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்கிரம தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே மேற்படி இறுதி முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)