
posted 3rd May 2022
அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமையினாலும், பொருளாதார சீர்குலைவினாலும், நாட்டு மக்களின் வாழ்வாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் தேசிய நலனுக்காகப் பெருநாள் தினத்தில் இறைவனைப் பிரார்த்திப்போமாக என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள ஈதுல் பித்ர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் ஈகைத் திருநாள் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நாட்டின் தற்போதைய அரசியல் தலைமைத்துவம் மேற்கொண்ட தவறான நடவடிக்கைகளின் விளைவாக, இலங்கையின் அரசியல் கட்டமைப்பு முற்றாகச் செயலிழந்து, நாட்டின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ள மிகவும் நெருக்கடியான நிலைமையிலும் கூட, ஆட்சிபீடத்திலிருந்து அகன்று சுமூக நிலை தோன்ற வழிவிடுமாறு சகல இன மக்களும் ஒருமித்து எழுப்பிவரும் கோஷம் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.அது ஜனநாயகத்தை அறவே மதிக்காத அப்பட்டமான சுயநலத்தையே எடுத்துக்காட்டுகின்றது.
நாட்டுமக்களின் அத்தியாவசிய தேவைகள் அனைத்துக்கும் பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டு, வெளிநாட்டுச் செலாவணியின்மையாலும், நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சியாலும் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு சிரமங்களுக்கு மத்தியில் அப்பாவிப் பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் காத்து நிற்க நேர்ந்திருக்கிறது.
பொதுவாக எல்லா சமுகத்தினரையும் போல, முஸ்லிம்களும் புனித நோன்பு காலத்திலும் கூட மிகவும் இக்கட்டான நிலைமைக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்பட்டது.
பிரச்சினைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்கள் பொறுமையுடன் நோன்பை நோற்று,இறை வணக்கங்களில் அதிகமாக ஈடுபட்டதோடு, ஈகைப் பண்பையும் இயன்றவரை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
எனவே இன, மத, மொழி பேதங்களுக்கு அப்பால் நின்று, நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு, சுமூக நிலை தோன்றுவதற்கு பெருநாள் தினத்தில் இறைவனைப் பிரார்த்திப்போம்.அத்துடன், பல்வேறு நாடுகளிலும் இன்னல்படும் உலக முஸ்லிம்களுக்காகவும் அல்லாஹ்விடம் கையேந்துவோம்.
ஈத் முபாரக்! எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY