
posted 5th May 2022
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியின் A9 வீதியில் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றது.
முறிகண்டி திசையிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த ஜீப் ரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
குறித்த வைத்தியர் தனது வாகனத்தை வேகமாக ஓடியதனால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதி அருகில் உள்ள மரங்களுடன் பலமாக மோதியது.
மரங்களில் வாகனம் மோதுண்டதால், அதில் பயணித்த இருவரும் சிறு காயங்களுடன் தப்பித்துக் கொண்டனர்.
வாகனம் மரங்களில் மோதியதால், அங்கிருந்த கடைகள் பெரிய சேதங்கள் அடையவில்லை.
அக்கராயன் பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றும் இவ்வைத்தியருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவரை அவசர உதவி அம்புலன்ஸ் மூலமாக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், A9 வீதியோரங்களில் வர்த்தக நிலையங்கள் அனுமதியற்ற நிரந்தர கட்டடங்களாக அமைக்கப்பட்டது தொடர்பாக பல்வேறு தடவை புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், தொடர்ச்சியாக வியாபார அனுமதிகள் பிரதேச சபையினால் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான விபத்து சம்பவங்கள் இடம்பெறுகின்ற பொழுது, பொது மக்கள் உயிர் ஆபத்துக்களை எதிர்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்படின், புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரும், வீதி அபிவிருத்தி அதிகார சபையினருமே பொறுப்புடையவர்களாவர் என பிரதேச மக்களின் ஆதங்கமாக இருக்கின்றது.