வசந்தபுரம் கி. அ. சங்கத் தலைவரும் சாரதியும் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட மன்னாகண்டல், வசந்தபுரம் கிராமத்தில் தொல்பொருள் இடத்தை அகழ்ந்து தொல்பொருட்களுக்கு சேதம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

நெல்களஞ்சியசாலைக்கான அடித்தளத்துக்கான மண் நிரப்பும் நடவடிக்கைக்காக அருகில் உள்ள வழிபாட்டு இடம் ஒன்றின் பகுதிகளை கனரக இயந்திரம் கொண்டு தோண்டியபோது தொல்பொருள் சிதைவுகள் காணப்பட்டுள்ளன.

இவற்றுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் வசந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் மற்றும் கனரக இயந்திரத்தின் சாரதி ஆகியோர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் குறித்த பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஓட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மன்னாகண்டல் கிராமத்தில் வசந்தபுரம் கமக்கார அமைப்புக்கான நெல் காயவிடும் தளம் பிரதேச செயலத்துக்குச் சொந்தமான இடம் ஒன்றில் அமைத்துக் கொடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மன்னாகண்டல் கிராம சேவையாளர்,ஒட்டுசுட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர் ஆகியோர் பிரசன்னமாகி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

வசந்தபுரம் கி. அ. சங்கத் தலைவரும் சாரதியும் கைது

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)