
posted 12th May 2022
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் புதிய பிரதமருடன் கூடிய இடைக்கால அரசு ஒன்றை உருவாக்கப் போவதாக நாட்டின் ஜனாதிபதியாக இன்றும் இருக்கும் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கோட்டா கோ ஹோம் மற்றும் நெருக்கடிகள், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமா, மற்றும் முன்னாள் பிரதமர் ராஜபக்ஷ திருமலை கடற்படை முகாமில் பாதுகாப்பு தஞ்சம் போன்றவற்றுக்கு மத்தியில் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையுடன், மக்கள் அங்கீகாரம் பெற்ற ஒருவரை இந்த வாரத்திற்குள் பிரதமராக நியமித்து, அமைச்சரவையையும் தாம் நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான இந்த விசேட உரையின்போது தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும், அக்கட்சியின ஒரேயொரு தேசியப்பட்டியல் மூலம் வந்த நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சு வார்த்தை ஒன்றை நடத்திவிட்டே ஜனாதிபதி நாட்டு மக்களுக்கான இந்த விசேட உரையை ஆற்றினார் எனவும் தகவல் வெளியாகின.
இந்நிலையில் இடைக்கால அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவே நியமிக்கப்படவுள்ளாரென தற்பொழுது பரவலாக ஹேஸ்யங்கள் வெளியாகிய வண்ணமுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகினால் மட்டுமே தாம் இடைக்கால அரசின் பிரதமர் பதவியை ஏற்போம் என ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் மற்றும் ஜே.வி.பி அடம் பிடித்துவரும் நிலையில், ரணில் பிரதமராகிறார் என்ற தகவல் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சமூக வலைத்தளங்கள், முக நூல்களில் ரணில் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
“ராஜபக்ஷக்களைப் பாதுகாப்பதற்காக ரணிலுக்கு பிரதமர் பதவி வழங்க முனைகின்றனர்”
“மக்களால் நிராகரிக்கப்பட்ட தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் வந்த ரணிலைப் பிரதமராக மக்கள் ஏற்க மாட்டார்கள்”
“நீலச்சாயம் பூசிய பச்சை நரிதான் ரணில்”
“பிரதமராக ரணில் இருந்தால் என்ன மஹிந்த இருந்தால் என்ன இரண்டும் ஒன்றுதான்”
“ஒரேயொரு எம்.பி பதவியை வைத்துக் கொண்டு பிரதமர் பதவியை ஏற்று வரலாற்றில் இடம்பிடிக்கின்றார் ரணில்”
“மத்திய வங்கியின் முதல் கொள்ளைக் காரன் நாட்டின் இன்றைய படுபாதாள நிலைக்கு இவரும் ஒரு காரணம்”
இவ்வாறெல்லாம் விமர்சனப்பார்வைகள் ரணில் தொடர்பில் வெளியாகிய வண்ணமுள்ளன.
இதேவேளை அரசிலிருந்து விலகி சுயாதீனமாக செயற்படும் 53 உறுப்பினர்களைக் கொண்ட குழுவினர் புதிய இடைக்கால அரசின் பிரதமர் பதவிக்கு மூவரின் பெயரை சிபார்சு செய்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.
எனினும் ரணில் விக்கிரம சிங்கவே எந்நேரத்திலும் பிரதமராக நியமிக்கப்படலாமென்ற தகவல் ஓங்கி ஒலிக்கும் அதே வேளை,
புதிதாக “ரணில் கோ ஹோம்” கோஷமொன்றும் நாட்டில் புதிதாக ஒலிக்கலாமெனவும் ஆருடம் கூறப்படுகின்றது!

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)