
posted 24th May 2022

பேராசிரியர் பாலசுந்தரம்பிள்ளை
யாழ்ப்பாணத்தின் அரைவாசி நிலப்பரப்பைக் கொண்ட சிங்கப்பூர் பொருளாதாரத்தில் முன்னேறிய நிலையில் நாம் எங்கு பிழை விட்டோம் என்பதை திருத்தாத வரையும் இலங்கை பொருளாதாரத்தில் முன்னேற முடியாது என யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அரச சார்பற்ற நிறுவனமான சொண்ட் நிறுவனம் ஏற்பாடு செய்த புதிய ஆட்சி மாற்றத்தின் மக்களின் பங்களிப்பு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வளமிக்க இலங்கை நாடு இன்று பொருளாதாரத்தில் தள்ளாடும் நிலையே எண்ணிப் பார்க்கும்போது மனவேதனையைத் தருகிறது.
1942ஆம் ஆண்டு இலங்கையில் முதன் முதலில் எல்லோரும் நெல் அரிசிச் சோறு உண்ட ஆண்டாகப் பார்க்க முடியும்.
அதற்கு முன்னர் வசதி படைத்தவர்கள் சோறை உட்கொள்ள, ஏனையவர்கள் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சோற்றை உற்கொண்டார்கள்.
அப்போதைய பிரதமராக இருந்த சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது தேர்தல் பிரச்சாரத்தில், இலங்கையில் அரிசி இல்லாவிட்டாலும் சந்திர மண்டலத்தில் இருந்து கொண்டுவருவேன் என கூறி மக்களிடம் வாக்குக் கேட்டு வெற்றி பெற்றார்.
இவ்வாறு இலங்கையின் பொருளாதாரம் சரியான வழியில் கட்டியெழுப்பப்பட்டு வந்த நிலையில் எங்கு எப்படி பிழைத்தது என்பதே தற்போது கேள்வியாக உள்ளது.
வருமானத்துக்கு அதிகமான வாழ்க்கை தரத்துடன் வாழ முடியாது. அது வீடாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, அல்லது தனி மனிதனாக இருந்தாலும் சரி.
265 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட சிங்கப்பூரில் 44 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் 440 சதுர மைல் பரப்பளவைக் கொண்ட யாழ் குடாநாட்டில் பெறுமா 6 இலட்சம் பேரே வாழ்கின்றனர்.
அப்போதய சிங்கப்பூர் பிரதமர் லீக்குவான் இலங்கைக்கு வரும்போது இலங்கையை போல சிங்கப்பூரை மாற்ற வேண்டுமென கூறியிருந்தார்.
ஆனால், அதன் பின்னர் சிங்கப்பூர் வீறுகொண்டு எழுந்து விட்டது. ஆனால் இலங்கை பின் நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
ஆசிய நாட்டில் மிகப்பெரிய பொருளாதாரத்தை குறுகிய காலத்தில் வளர்ந்து, வருகிற நாடாக இந்தியாவை கூற முடியும்.
இந்தியாவின் பாரிய பொருளாதாரத்திற்கு தமிழ்நாடு பாரிய பங்களிப்பைச் செய்து வருகின்றது. இந் நிலைமைக்கு தமிழ்நாட்டின் சமூக பொருளாதார மற்றும் அரசியல் கொள்கையே காரணமாக அமைகிறது.
இலங்கையில் வறுமையைப் போக்க என சமுர்த்தி நிவாரணத்தை கொண்டுவந்தார்கள். வறுமை போய்விட்டதா? சமுர்த்தி பெறுபவர்களில் பலர் வருமானம் உள்ளவர்களாகவே காணப்படுகின்றனர்.
ஆகவே, நாட்டுக்கு கிடைக்கின்ற வெளிநாட்டு வருமானங்களை சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி, அதனை உரிய முறையில் செலவு செய்யும் போதே நாடு சிறந்த பொருளாதாரத்தை எட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY