
posted 6th December 2022
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் ஐந்தாவது மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மாநாடு நேற்று திங்கட்கிழமை மருத்துவ பீட கூவர் அரங்கில் இடம்பெற்றது.
“ஆராய்ச்சியினூடான ஞானம் - Wisdom through Research” என்ற தொனிப் பொருளில் இடம் பெற்ற இந்த மருத்துவ மாணவர் ஆராய்ச்சி மநாட்டில் பேர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் பிரயோக சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தை சேர்ந்த சுகாதார தரவு அறிவியல் மற்றும் பொது சுகாதாரப் பேராசிரியர் கிருஸ்ணராஜா நிரந்தரகுமார் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு முதன்மை உரையாற்றினார்.
நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, மருத்துவ பீடாதிபதி பேராசிரியர் இ. சுரேந்திரகுமாரன், மருத்துவ பீடத்தைச்சேர்ந்த பேராசிரியர்கள், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், மருத்துவ பீட விரிவுரையாளர்கள் மற்றும் மருத்துவ பீடத்தின் 40ஆம், 41ஆம் மற்றும் 42 ஆம் அணிகளைச் சேர்ந்த மாணவர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
40 ஆம் அணி மருத்துவ மாணவர்களால் சுமார் 30 ஆராய்ச்சிச் சுருக்கங்கள் இந்த ஆய்வு மாநாட்டில் முன் வைக்கப்பட்டன.
- “நாள்பட்ட நோய்களும், பராமரிப்பும்”
- “பெண்கள் - குழந்தைகளுக்கான ஊட்டச் சத்தும், அறிவூட்டலும்”
- “பெருந் தொற்றுப் பரவல் அபாயம்”
ஆகிய மூன்று தலைப்புகளில் ஆராய்ச்சி அமர்வுகள் இடம்பெற்றன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவினால் வழங்கப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட ஆராய்சிச் சுருக்கங்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)