யாழ் ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தி
யாழ் ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தி

இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு பெருவிழாவைக் கொண்டாடும் அனைவருக்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்களை முதலில் தெரிவிக்கிறோம். அதே வேளை தமிழ் - சிங்கள புத்தாண்டை ஏற்கனவே கொண்டாடியுள்ள அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக.

மேலும் ஆண்டகை தனது வாழ்த்துச் செய்தியைத் தொடர்ந்து கூறுகையில்;
இன்றைய அவசர உடனடித் தேவையாக நமது நாட்டு மக்களுக்கு இருப்பது நாட்டில் நிலவிவரும், மக்களை நோகடிக்கும், வாட்டிவதைக்கும் அரசால் உருவாக்கப்பட்ட நிலேயே. எனவே, அரசு, இன்றைய நிலையை வேகமாகச் சரி செய்து நாட்டை மேலும் அழிவு நிலைக்குக் கொண்டு செல்லாது பாதுகாப்பதாகும்.
அரசியல் பதவியில் இருப்போர் வெற்றி - தோல்வி மற்றும் பதவியில் இருப்பு - பதவி இழப்பு என்ற நிலைப்பாடுகளைப் பெரிதுபடுத்தாது நாட்டு நலனை மட்டுமே முன்வைத்து செயற்பட வேண்டும். நாடு இன்னும் மோசமான நிலைக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு துணிகரமான முடிவுகளை, அவை தமக்குச் சாதகமாக இருந்தாலும் சரி, பாதகமாக இருந்தாலும் சரி நாட்டு நலனுக்காக எடுக்க வேண்டும் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தனது ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

இலங்கை நாடு இன்று என்றுமில்லாதவாறு ஒரு மிகுந்த இக்கட்டான கால கட்டத்தில் உள்ளது. இலங்கை மக்கள் எல்லோரும் இன மத பிரதேச வேறுபாடின்றித் தமது எல்லாத் தனித்துவங்களையும் மறந்து அன்றாட வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்காக அரச எதிர்ப்புப் போராட்டங்களில் ஒன்றிணைந்துள்ளனர்.

தமிழ் மக்கள் நடந்து முடிந்த கடந்த 30 ஆண்டு காலப்போரில் அனுபவித்த கடினமான அனுபவங்களை மீண்டும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். கோப்பேகடுவ லாம்ப் என அழைக்கப்படும் தேங்காய் எண்ணையும் பஞ்சும் வைத்து எரித்த விளக்கில் பல காலம் வாழ்ந்தவர்கள். வீதி விளக்கில் படித்தவர்கள். சூப்பி போத்தல் என அழைக்கப்படும் சிங்கர் ஒயில் கானில் பெற்றோளை வைத்து ரியூப் மூலம் செலுத்தி வாயால் ஊதி மோட்டார் சயிக்கிளை பெற்றோளில் இயக்கத் தொடங்கி மண்ணெண்ணையில் ஓடியவர்கள். சயிக்கிள் பெடலைச் சுற்றி டைனமோவில் இருந்து மின் உற்பத்தியாக்கி றேடியோ கேட்டவர்கள். மின்சாரம் உட்பட பல அடிப்படை வசதிகள் இல்லாமல் ஊரடங்கிலும், உணவுத் தட்டுப்பாட்டிலும் உயிர்ப் பயத்திலும் பல காலம் வாழ்ந்தவர்கள். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல மாதங்களாக இன்னும் வீதியில் உள்ளனர். அரசியற் கைதிகள் இன்னும் சிறைகளில் உள்ளனர்.

தமிழ் மக்கள் கடந்த காலத்தில் பெற்ற அனுபவங்கள் எப்படியானவை என்பதைச் சிங்கள மக்களும் இன்று அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். அவற்றைச் சிறிதும் தாங்க முடியாமல் இலங்கையின் பல இடங்களிலும் பல நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் உள்ளனர்.

இலங்கை நாட்டை இந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டுமென்று யாரும் திட்டமிட்டுச் செயற்படவில்லை. மாறாக அதிகாரத்தில் இருப்போரால் எடுக்கப்பட்ட சில வேண்டாத நடவடிக்கைகளும் தவறான முடிவுகளும் பிழையான வழிநடத்தல்களுமே நாட்டை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

இன்றைய அவசர உடனடித் தேவையாக இருப்பது இன்றைய நிலையை வேகமாகச் சரி செய்து நாட்டை மேலும் அழிவு நிலைக்குக் கொண்டு செல்லாது பாதுகாப்பதாகும். நாட்டு நலனில் அக்கறை கொண்டுள்ள இலங்கை மக்கள் அனைவரும் மண்ணின் சுபீட்சமான எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு இக்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என இலங்கை மக்கள் அனைவருக்கும் அன்பு அழைப்பு விடுக்கிறோம்.

தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்கள் அனைவரும் இலங்கை நாட்டின் சகோதர இனங்களாக தமது இன, மத பேதங்களை மறந்து இணைந்து நின்று நாட்டின் சுபீட்சமான எதிர்காலத்திற்காக நிறைவேற்று ஜனாதிபதி முறை - குடும்ப அரசியல் - இனவாத ஆட்சி என்பவற்றை ஒழித்து, பொருத்தமான அரசியற் திருத்தச்சட்டம் இனப்பிரச்சினைக்கான தீர்வு, புதிய யாப்பு என்பவற்றின்வழி ஒரு புதிய சகாப்பத்தை உருவாக்க வேண்டும்.

“ஓன்று பட்டால் உண்டு வாழ்வு” என்பதற்கொப்ப, இலங்கையின் எல்லா இனங்களும் இணைந்து புலம்பெயர் தமிழரின் பொருளாதார பலத்தையும் இணத்து, நாட்டை ஒரு புதிய பாதையில் இட்டுச் செல்ல வேண்டும்.

தமிழ் கட்சிகள் தத்தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுக்குச் சாதகமாகச் சாதுரியமாகப் பயன்படுத்த வழிமுறைகளை வகுக்க வேண்டும். அரசியற் கைதிகள் விவகாரம் - காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை போன்ற பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண இச்சந்தர்ப்த்தைப் பயன்படுத்தி அரசிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அரசியல் பதவியில் இருப்போர், வெற்றி - தோல்வி மற்றும் பதவியில் இருப்பு - பதவி இழப்பு என்ற நிலைப்பாடுகளைப் பெரிதுபடுத்தாது நாட்டு நலனை மட்டும் முன்வைத்து செயற்பட வேண்டும்.
நாடு இன்னும் மோசமான நிலைக்கு செல்வதைத் தடுக்கும் விதமாக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு துணிகரமான முடிவுகளை அவை தமக்குச் சாதகமாக இருந்தாலும் பாதகமாக இருந்தாலும் நாட்டு நலனுக்காக எடுக்க வேண்டும்.

இந்த இக்கட்டான நிலையில் மக்கள் அவர்களின் ஆதரவாளர்களாகவோ அல்லது எதிர்ப்பாளர்களாகவோ இருந்தாலும், அவர்களின் ஜனநாயக உரிமைகளை மதித்து, அவர்களை இன மத பேதமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் பாரமரிக்க வேண்டிய பொறுப்பு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசிற்குரியது.

இன்றைய இக்கட்டான நிலையில் அனைவருக்கும் தேவையானது இறை நம்பிக்கையாகும். இலங்கையின் இன்றைய இக்கட்டான நிலையில் இறைவன் அனைவருக்கும் நம்பிக்கையைத் தந்து, பாதுகாத்து வழிநடத்த இறையாசீர் மிக்க வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறோம் என யாழ் ஆயர் மேதகு கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யாழ் ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையின் ஈஸ்ரர் வாழ்த்துச் செய்தி

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More