posted 19th November 2026
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
Promotional Offer உறவுகளின் துயர் பகிர்வு - Share your bereavement
Chapter 2
மௌனத்தின் சக்தி - The Power of Silence
The Weapon That Dispels Inner Darkness
எமது இந்த இரண்டாவது அத்தியாயத்தில் தேனாரத்தின் குரல் மூலமாக உங்களைச் சந்திப்பதிலும், உங்களால், மௌனமாக இருப்பதினால் உங்களிடம் உள்ள பாரிய சக்தியினை வெளிக் கொணரவும்தான் நான் இப்போது உங்கள் முன் வந்திருக்கின்றேன்.
அதாவது, மௌனத்தின் சக்தி எப்படியானது? மௌனத்திற்கு அவ்வளவு சக்தி இருக்கின்றதா?
அப்படியென்றால், எப்போவாவது மௌனமானது உங்களை ஆண்டிருக்கின்றதா? வெளிக் காரணிகள் ஏதாவது உங்களை மௌனிக்க வைத்தனவா? அல்லது உங்களின் உள்ளாற்றலே உங்களை மௌனமாக்கியதா?
இவை உண்மையானால், மௌனத்தால் நீங்கள் வாடினீர்களா? இந்த வாட்டமானது வாழ்க்கையையே சூனியமாகி விட்டதே என்று நீங்கள் நிலை குலைந்ததுண்டா?
இவற்றிற்கெல்லாம் தீர்வு கூறவே சுமூகமான, சுகமான செய்தியுடன் உங்கள் முன் உள்ளேன்.
நீங்கள், உங்கள் வாழ்க்கையில், மௌனமாக இருந்ததினாலோ அல்லது, மௌனமாக இருக்க வைக்கப்பட்டதாலோ, அதற்கான காரணத்தினைத் தேடி அலைந்த காலங்களை மறவுங்கள். காரணிகள் எவையாயிருந்தாலும் அவற்றினையும் மனதினில் இருந்து விலக்குங்கள்.
அதுமட்டுமல்லாமல், விடை தெரியாத நிலையினில் உங்களை நீங்களே வருத்தாதீர்கள்.
காலம் கனியும் என்று யாராவது உங்களுக்கு ஆறுதலான வார்த்தைகள் சொல்லி இருந்தால், அந்த சந்தர்ப்பங்களில் அவ் வார்த்தைகள் உயிரினை மீட்டது போன்ற உணர்வுடன் ஆறியிருப்பீர்கள். அச்சமயத்தில் அக் கூற்றுகள் சரியானவைதான்.
ஆறுவதுதானே நமது வழக்கம். அதில் குற்றமோ ஒன்றுமில்லையே. ஏனென்றால், அச்சமயம் அது தேவைப்பட்டதொன்று.
ஆனால், உங்கள் மௌனத்தினிலே உள்ளிருக்கும் இரகசியம்தான் முக்கியமானது என்று இங்கு அது என்னவென்று கூற வினைகின்றேன்.
மௌனமாக இருப்பதற்கு அமைதியாக போவது என்ற இன்னொரு அர்த்தத்தினையும் எமது பெற்றோர்கள், பெரியோர்கள் புகட்டியது எப்போதும் உங்கள் நினைவில் இருப்பதனை ஒருவராலும் மறுக்க முடியாது.
இதற்கான அர்த்தம், நாங்கள் பாலராக இருக்கையிலே, எமது காதினுள் பெரியவர்களினால் ஓதப்பட்ட நித்திய வாசகம் அது. மாறாக, இன்னும் இலகுவாகச் சொல்லப்போனால், நமக்கேன் இந்தப் பிரச்சினை என்று ஒதுங்கிப் போவதற்காக அவர்களால் சொல்லப்பட்ட அறிவுரையாகவும் அது இருக்கலாமல்லவா?
எனவே, எமது பெரியவர்களின் அந்த வாக்கியமானது மறைமுகமான ஒரு அறிவுறுத்தலாக அல்லது தற்பாதுகாப்பின் முன்னெச்சரிக்கையாகவென எடுத்தும் கொள்ளலாம்.
இந்த படிப்பினையானது நமது பாதுகாப்பிற்குப் பங்கம் வராமல் இருப்பதற்கான ஒரு முன் எச்செரிக்கையாக இருக்கையிலே, அடுத்த பக்கமாக நாம் உற்று நோக்குவோமானால், இம் மௌனத்திற்கும், அமைதியான ஒதுக்கத்திற்கும் இடையிலிருந்து ஒரு வகையான பயத்தின் சாயல் ஒரு உணர்வாக மனதினுள் உருவாகுவதை நாம் உணர்ந்திருப்போமல்லவா!
அது மட்டுமல்லாமல், நாம் எந்தவிதமான மறு வார்த்தையும் தூண்டியவரின் முகத்திற்கெதிராக கூறாமல் அங்கிருந்து ஒதுங்கிப் போகையிலே, அந்த எமது நடத்தையானது நாம் பயந்து விட்டோம் என்பதனை அவர்களுக்கு வெளிக்காட்டி எம்மைப் பலவீனமாக்குவது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.
இப்படியான சந்தர்ப்பங்களானது மீண்டும் மீண்டும் நம் மனத்தினுள் உருவெடுக்குமானால், அது நமது சமூக வாழ்க்கையினை விட்டு எம்மை ஒதுங்க வைத்திருப்பதுமல்லாமல், இறுதியில் நம்மனது தாங்கொணாத் துயரில் வாடுவதையும்தானே நீங்கள் இவ்வளவு காலமாக அனுபவித்திருப்பீர்கள்.
எனவே, இன்று மட்டும் விரையமான நாட்களை மறவுங்கள். மறக்க முடியவில்லையெனில், மறக்க முயற்சியாவது செய்யுங்கள்.
எமது அத்தியாயம் ஒன்றில்,“தோல்விதான் உங்கள் வெற்றிப்படி” என்பதினில் என்னவெல்லாம் கூறினோமோ அவற்றையெல்லாம் உங்கள் மனதினுள் உள்வாங்கி படிக்கட்டுகளினால் ஏறி உச்சிப் படிகளில் இப்போது இருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்.
அவ் அத்தியாயத்தின் தொடராக நான் இங்கு கூறப் போவதோ வேறு. அதாவது, இப்போது இந்த இரண்டாவது அத்தியாயத்தில், மௌனத்தின் சக்தியினைப் பற்றியே உங்களுக்கு விளக்கவுள்ளேன்!
ஆரம்பத்தில் கூறிவந்த நாட்டு நடப்புகளுக்கெல்லாம் இது எதிர் மாறானதாகும்.
இங்கு, நீங்கள் எந்த மௌனத்தினைக் கொண்டு ஒதுங்கிப் போனீங்களோ அல்லது எதனைக் கண்டு பயம் உங்களுள் உருவாகியதோ, அதையே இப்போது கையில் எடுங்கள். ஆனால், இனிப் பயந்து, ஒதுங்கிப் போகவல்ல. மாறாக, உங்களைத் துன்புறுத்தியவர்களுக்கு, பயத்தினைக் காட்டியவர்களுக்கு மௌனத்தால் பாடம் கற்பிப்பதற்காக.
அதாவது, உங்களின் மௌனத்தினை அவர்களால் விளங்கிக் கொள்ள முடியாத ஒரு ஆசானாக உங்களைத் தெரியப்படுத்தி நிமிர்ந்து நிற்பதனைக் காண்பிப்பதற்காக.
இச் சமயம் உங்கள் எதிரே நிற்பவர்கள் விழி பிதுங்கி வியப்பில் ஆழ்வர். உங்களது வெறுமையான பார்வையோ அவர்கள் படிக்காத பாடத்தினைப் புகட்டும். விடை தெரியாமல், வினாக்களை மட்டும் தேக்கி வைக்கும் அவர்களின் மூளையும் அப்போது கலங்கி நிற்கும்.
நானோ, அநேகமான நேரங்களில், அவதானிப்பதிலேயே கவனமாக இருப்பேன். என் அமைதி அவர்களை அதிர வைப்பதினை நானே அப்போதே உணருவேன். இங்கு, இனி, நீங்களும் உங்களின் நரம்புகளினால் அவ்வுணர்வானது ஓடுவதையும், வெளிக் கொண்டு வருவதையும் உணரப் போகின்றீர்கள்.
அனால், இது ஒரு இலகுவான பாடம் அல்ல. இது வாழ்க்கை. அது எப்படி இருக்கும் என்றால், அது ஒவ்வொருவருக்கும் வைக்கும் அன்றாட பரீட்சையாகும். விடை தெரியாத வித்தியாசமான கேள்விகள் அதில் உள்ளடங்கி இருக்கும். விடைகளாக நாங்கள் நினைப்பவை அனைத்தும் முரண்பட்டதாகவே இருக்கும்.
இப்போது ஒன்றை அவதானியுங்கள். உங்களின் வார்த்தைகளை வெளிவர வைக்க, உங்களை அதனால் பலவீனமாக்க, பலவிதமான யுக்திகள் உங்களை நோக்கி கணத்திற்குக் கணம் வந்திருந்ததனை சிந்தித்துப் பாருங்கள்.
நாக்கினை அசைத்துப் பாருங்கள், உங்கள் அஸ்த்திவாரமே ஆடத் தொடங்கும். ஆனால், நாவினை அடக்கிப் பாருங்கள். அகிலமே கதிகலங்கி நிற்கும்.
வாயிலிருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் உங்களது பலம் குறைவதனை உணர்வீர்கள். ஆனால், வார்த்தைகளை ஒவ்வொன்றாக அடக்கிப் பாருங்கள், உங்களுள் தேங்கும் சக்தியையிட்டு நீங்களே திகைப்பீர்கள்.
உங்கள் வெறுமையான பார்வையோ எதிரே நிற்போரைத் திணற வைக்கும். அவர்கள் கதி கலங்கி நிற்பார்கள்.
ஆனால் உங்கள் மூளையோ வேறு கோணத்திற்கு உங்களைச் சிந்திக்க வைக்கும். அதாவது, நீங்கள் நினையாமலே உங்கள் மூளை எதிராய் உள்ளவர்களின் மனதினை வேவு பார்த்து அவர்களின் நினைவுகளை அளந்து கொண்டிருக்கும்.
இப்போது உங்களுக்குக் கொஞ்சம் விளக்கம் வரும் என்று நினைக்கின்றேன்.
அதாவது, மௌனம் என்பது ஒருவரின் ஞானத்தின் அத்திவாரம் என்று. அதை நீங்கள் அப்போது உணருவீர்கள். அத்துடன் அதனைப் படிப்படியாக கிரகித்தும் கொள்வீர்கள்.
இந்த அத்திவாரத்தினை நீங்கள் உங்களுக்காகக் கட்டிய பாதுகாக்கும் அரணாகும். அது மிகவும் வைரமாகவும், அதிமிகுந்த சக்தி வாய்ந்ததாகவும் அது இருந்தேயாகும்.
ஆனால், உங்களை எதிர்த்தவர்களோ அத்திவாரப் படிகளிலேதான் நிற்பார்கள், ஒன்றுமே புரியாமல். அப்போது உங்களின் அமைதியான போக்கினை பிழையாக அவர்கள் விளங்கக் கூடும். அது எதுவாக இருந்தாலும், அவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் அசட்டை செய்து விடுங்கள், உதறித் தள்ளுங்கள், உங்களின் மனத்தினால்.
உங்கள் மௌனமான வாழ்க்கையிலிருந்து எதையும் எவராலும் கண்டு கொள்ளவோ, ஆராய்ந்தறிந்து உங்கள் வழிகளை ஊகிக்கவோ முடியாது. அதேசமயம், உங்களின் உள்ளத்தில் உதித்தவைகள் ஒன்றுடன் ஒன்றாகக் கலக்கத் தொடங்கி விடும்.
அப்படியாக ஒன்றொன்றாக மௌனத்தினால் உருவாக்கப்பட்டவை எல்லாம் அதிபார சக்தியாக உருப்பெற்று வியாபிக்கும். அதுமட்டுமல்லாமல், உங்களுக்கு எப்பவும் உறுதுணையாக உங்களைக் காக்கும் சக்தியாக மனதினுள் நிறைந்து நிற்கும்.
ஆனால், உங்களின் மௌனத்தினைக் கலைப்பதற்காக, உங்களை நிலைகுலைத்து, வாழ்க்கையினை உருக்குலைப்பதற்காக அடிக்கடி வீசப்படும் வார்த்தைகள் சுவை நிறைந்தவைகளாக உங்கள் மேல் விசிறப்படலாம். ஆனால், அவை உங்களுக்கு எதிரிகளாக உருபெற்று நிற்கும் என்பதனை ஒருக்காலும் மறவாதீர்கள். ஏமாந்து விடாதீர்கள்.
நான் எனது வாழ்க்கையின் ஒரு பக்கத்தின் ஒரு சிறு பந்தியினைக் கூறுகின்றேன். அமைதியாகக் கேளுங்கள்.
பல வருடங்களின் முன்பு, புதிதான வேலை ஒன்றினைப் பொறுப்பெடுத்தேன். நல்ல ஊதியமும் கிடைத்தது. என்றாலும், அங்கும், எனது அளவுத்திட்டத்தினைப் பயன்படுத்தினேன். அந்த அளவுத்திட்டமானது நானே எனெக்கென்று வடிவமைத்ததே. அதாவது, அங்குள்ள ஒவ்வொரு நடைமுறைக்கும், நேர்மறையானவற்றினையும், எதிர்மறையானவற்றினையும் குறித்து இரண்டையும் கூட்டிக் கொண்டே இருந்தேன்.
இந்தக் குறிப்புகளை நான் பதிவிட்டவை எல்லாம் எனது குறிப்பேட்டில் அல்ல. ஏனென்றால், நான் ஒரு நாளும் குறிப்பேடு பாவிப்பதே இல்லை. எனது குறிப்பேடு எனது மூளைதான்.
நான் அந்த வேலையினைத் தொடங்கிய காலத்திலிருந்தே என் மனம் ஏதோ என்னிடம் சொல்ல முனைந்து கொண்டிருந்ததனை உணர்தேன். எனக்கோ ஏன் இந்த உணர்வுகள் என்னுள் வந்தன என்று விளங்கவில்லை; என்றாலும், எனது மௌனத்தினையோ காக்கத் தொடங்கினேன்.
என் மனம் கூறியபடியே மௌனத்துடன் கூடி எனது மூளையிலே அப் புள்ளிகளைப் போட்டுக் கூட்டிக் கொண்டிருந்தேன்.
மாதங்கள் மெல்ல மெல்ல நகர்ந்தன. எனது மனம் சொல்லிக் கொண்டிருந்தவை மெல்ல மெல்ல துலக்கமாகத் தெரிய வந்தன. அவை தவறான வழிமுறைகளாகத் தெரிந்தன. அதனை எனது உள் மனம் மீண்டும் கூறிக் கூறி உறுதியும் செய்தது. எனது அளவுத் திட்டத்தின் முடிவினைப் பார்க்க முடிவு செய்தேன்.
அங்கு எனது கணக்கின்படி, எதிர்மறைக்கு அதிகமான புள்ளிகள் சேர்ந்தன. என் மனம் கூறிய பிரகாரம், எனது கூட்டலின் படி அவ்விடத்தில் நான் இருக்கக் கூடாதென்பது தெட்டத் தெளிவாக விளக்கியது.
அச்சமயமே நான் அவ்விடத்தினை விட்டு விலகுவதற்குத் தீர்மானித்தேன். அறிவித்தலும் கொடுத்தேன். இதனை அறிந்து அனைவரும் தடுத்தனர், அந்த வேலைத்தளத்தின் பொறுப்பதிகாரி உட்பட. காரணம், என்னை மறித்த சக ஊழியருக்கோ ஊதியம்தான் முக்கியமாக இருந்தது. அதற்காக, எனக்குமட்டுமென்ன ஊதியம் அவசியம் இல்லையென்றில்லை. முன், பின் நினைக்காமல் வேலைத் தலத்தினை விட்டு வெளிக்கி்ட்டு விட்டேன்.
இந்தக் கதையினை ஏன் இங்கு சொன்னேன் என்றால், எனது விலகலுக்குக் காரணம், எனது மனதினில் நான் போட்ட மௌனமான கணக்குத்தான். அந்த மௌனமாகப் போடப்பட்ட கணிப்பீடானது எவருக்கும் தெரியவில்லை. நான் தெரியப்படுத்தவுமில்லை.
அதனால்தான் சொல்லுகின்றேன், மௌனத்தின் ஆழத்தினை ஒருவராலும் அளக்கவும் முடியாது. அப்படியான உங்கள் அடக்கமான மனதினை ஆயவும் இயலாது. ஒருவராலும் அறியவும் முடியாது. இதுதான் மௌனத்தின் சக்தி என்பது.
இதனால், உங்களது பலம் எவருக்கும் தெரியாது. இதுவரைக்கும் எனது நடவடிக்கை ஒருவருக்கும் புரியவுமில்லை. தெரியவுமில்லை.
இப்படியான கௌரவமான வேலையிலே கிடைத்த ஊதியத்தினை, ஏன் அந்த வேலையினை நான் விட்டு விட்டு போனதினால், எனது முகத்திற்கு முன்னால் என்னை ‘மூளை இல்லாதவன்’, ‘மோடன்’ என்று கூடச் சொன்னார்கள்.
இவ் வார்த்தையானது எனக்கு வலித்தது. ஆனால் அவ்வலியினை உள்வாங்கினேன். அதன் உள் அர்த்தத்தினை என்மனம் அலசியது. இப்படி எதையும் நம்பாமல் நல்ல வார்த்தைகளைக் கூட அலசிப் பழக்கப்பட்டது என்மனம்.
அதாவது, இவர்கள் வீசிய வார்த்தையானது எனது ரோசத்தினைக் கிளற வைத்து, எப்படியாவது என்னை வேலையினை விட்டு விலகவிடாமல் நிற்க வைக்கும் என்று நினைத்தார்கள். ஏனென்றால், அனைவரின் வேலைகளினையும் செய்யும் திறனானது என்னிடம் இருந்ததினால்.
ஆனால், எனது முடிவினில் திடமாகவே இருந்தேன். அதாவது, அவ் வேலையினைத் தூக்கியெறிந்து விட்டு வெளியேறினேன்.
இதிலிருந்து தெரிகின்றதா, மௌனமானது எந்தவிதமான அபார சக்தியையும் அசட்டையாகத் தகர்த்தெறியும் என்பதானது, நாம் அப்படியான கேடயத்தினுள் இருக்கும் வரை.
எனது மனதினுள் உயிர்பெற்ற இந்த சிறு கவிதையினை உங்களுக்குச் சமர்ப்பிக்கின்றேன். ஆர அமர்ந்து சிந்தியுங்கள்.
உணர்வுகள் தூண்டப்படும், உதடுகள் திறப்பதனால்
உதடுகள் தடுமாறும் உணர்வுகள் அடங்குகையில்
மனமோ குளம்பும் வீண் சொற்கள் உள்ளிறங்குகையில்
சொற்கள் தாக்கும் தாரக மந்திரமாய் ஓதுகையில்
தாங்கும் மனமோ துடிக்கும் மௌனம் அதனைக் காக்கும்
காத்தும் வதனம் அசையாதிருக்கும் ஆணவம் புறமுதுகு காட்டும்
நிலைகுலைவோ அப்போ தெரியும் நிலைமாறா உள்ளம் சிரிக்கும்
அந்த அகத்தின் மகிழ்வுதான் மௌனத்தின் வெற்றி
யுகமோ திரும்பி அம்மகிழ்ச்சியைத் தாங்கி ஜொலிக்கும்
உன்னையும் கண்டேன், உன் உணர்வையும் புரிந்தேன்
புன்னகை புரியா மௌனத்தால் வென்றேன்
வாழ்க்கை என்றால் இப்படி என்று உணர்த்தி நின்றேன்
உன் தீய உணர்வுகளை உருக்குலைத்தெறிந்தேன்
நீ நல்லவனாக மீண்டும் பிறக்கணும்
நானிலம் என்னுடன் உன்னையும் வாழ்த்தணும்
அந்தக் கனவினிலே என் மௌனத்தைத் தொடர்ந்தேன்.
எனவே, எவரும் என்னவும் சொல்லட்டும். எத்தனை முறைகளென்றாலும் சொல்லட்டும். உங்கள் மௌனம்தான் உங்களது பலமே என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.
மௌனமானது எவருடனும் பகைக்காது, பிரச்சினைகளைக் கூட்டுச் சேர்க்காது, உங்களின் சக்தியினை விரயமாக்காது, உங்களை மற்றவருக்கு விளங்கப்படுத்தாது. ஆனால், உங்கள் வாழ்க்கையினை வளப்படுத்தும், நன்நெறிப்படுத்தும்.
ஞானத்தின் சக்தியானது ஞாலம் உங்களுக்குத் தந்த உக்தி. உங்கள் ஞானத்தினைப் பயன்படுத்தி உங்கள் மௌனத்தினை வளர்க்கப் பாருங்கள்.
பிரச்சினைகள் வராமல் வாழ்க்கையில்லை. அதற்கு உடனே அடிமையானால், எமது சக்திதான் விரயமாகும், வாழ்க்கை நரகமாகும்.
மௌனத்தினை நிதானமாகக் காத்துப்பாருங்கள், வாழ்க்கை மோட்சமாகும்.
எந்த வினைகளின் வீரியத்தினைக் குறைக்கும் வல்லமையானது மௌனத்திற்கு மட்டும்தான் இருக்கும் என்பதனை பரீட்சித்துப் பார்த்தால் உங்களுக்குப் புரியும். சுதாகரித்துப் பார்த்தால் அது ருசிக்கும்.
எதெற்கெல்லாம், மனம்தான் வேண்டும் என்று கூறுபவரும் உண்டு. உண்மைதான், எதற்கும் மனம் வைக்க வேண்டும் என்று இயம்புவரும் உள்ளனர். அப்படிப் பார்த்தால், மனத்தினை மூடுங்கள், மௌனம் தானாக வரும்.
இந்த அமைதி தரும் மௌனத்தின் அபார சக்தியினை, வாழ்வினை வளப்படுத்தும் உன்னத உந்தலை நாம்தான் படிப்படியாக உருப்பெற வைக்க வேண்டும்.
அப்படியென்றால், மௌனத்தினை பலமாக்க வேண்டுமென்றால், மனத்தினை அடக்க வேண்டும்.
அப்போது மனதினை அடக்குவது எப்படி?
மனமோ அவ்வளவிற்குச் சக்தி வாய்ந்ததா? மனத்தினை அடக்கி விடலாமா? என்பதனை அடுத்த அத்தியாயத்தினிலே உங்களை தேனாரத்தின் குரல் சந்திக்கத் தயாராகின்றது.
வணக்கம் நண்பர்களே!
வாழ்க்கை வளம்பெற எனது வாழ்த்துக்கள்.