
posted 28th December 2022

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு தினமும் புத்தக வெளியீடுகளும் இடம்பெற்றன.
2017 ஆம் ஆண்டில் ஐ.நா சபையானது உலக நாடுகளை இணைக்கவும் நாட்டின் அமைதி மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்கு உதவிபுரிபவர்களாகவும், விளங்கும் மொழிபெயர்ப்பாளர்களை கொண்டாடும் விதமாக செப்ரெம்பர் 30ஆம் திகதியை சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாகப் பிரகடனப்படுத்தியது.
இந்த வருடம் “தடைகளற்ற உலகம்” எனும் தொனிப்பொருளில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினமானது உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் கலைப்பீடத்தில் 2011ஆம் ஆண்டு மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையானது அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து தொடர்ந்து 10 வருடங்களாக கொண்டாடப்பட்டு வரும் இத்தினமானது இந்த வருடமும் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினால் கடந்த வியாழக்கிழமை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் ஸ்ரீசற்குணராஜா, சிறப்பு விருந்தினராக யாழ். கலைப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கே. சுதாகர், கௌரவ விருந்தினர்களாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஆணையாளர் பிரசாத் ஹேரத் மற்றும் தேசிய மொழி சமத்துவ பிரதி ஆணையாளர் திருநாவுக்கரசு மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற ஆக்கங்களுக்கு பணப்பரிசில்களும் ஆவன மற்றும் கவிதை மொழிபெயர்ப்பின் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் யாழ் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையின் பட்டதாரிகள் மூவரால் மூன்று புத்தகங்களும் வெளியிடப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)