
posted 19th May 2022
முள்ளிவாய்க்காலில் தமிழினத்தை அழித்த தினமாகிய மே 18 தினத்தின் 13வது ஆண்டு நினைவேந்தல் தினத்தை மன்னார் மாவட்டத்தில் பேசாலை மக்களும் உணர்வு பூர்வமாக நினைவு கூர்ந்தனர்.
அன்றைய தினம் மாலை 6.30 மணியளவில் பேசாலை நகருக்குள் முற்சந்தியில் நடாத்தப்பட்ட நினைவேந்தலில் பேசாலை பங்கு தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார், உதவி பங்குத் தந்தை, மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் செந்தமிழருவி மஹா. தர்மகுமார குருக்கள் மற்றும் பெரும் திரலான மக்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலய பேரவை, பேசாலை மீனவ சங்கம் உட்பட பேசாலை மக்களால் ஒழுங்கு செய்யப்பட்ட இந் நினைவேந்தலின் போது உதவி பங்குத் தந்தை, மன்னார் மாவட்ட சைவக்கலை இலக்கியப் பெருமன்றம் தலைவர் செந்தமிழருவி மஹா. தர்மகுமார குருக்கள் இணைந்து சுடர் ஒளியை ஏற்றி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கலந்து கொண்டோர் அனைவரும் முள்ளிவாய்க்காலில் மறைந்தவர்களை நினைந்து மலர்தூவி மெழுகுதிரி பற்ற வைத்து இறந்தவர்களின் ஆன்மாவுக்காக இறை வேண்டுதல் வேண்டிக் கொண்டனர்.
இந்நிகழ்வினிலே அருட்பணி ஏ.ஞானப்பிரகாசம் அடிகளார் நிகழ்த்திய உரையில்;
இந்த நாட்டில் எமது உரிமைகளைப் பெற்று ஒன்றுபட்டு வாழ்வதற்கு பல சுமைகளை தாங்கியவர்களாக பயணித்து வருகின்றோம். ஆனால் இன்றைய நிலையை நாம் பார்க்கின்றபொழுது எமக்கான விடிவு தூரத்தில் இல்லை என்பதே எனக்கு தோன்றுகின்றது. இறைவன் எம்மை வழிநடத்திச் செல்லுகின்றார்.
மேலும், முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்ட மக்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காக அஞ்சலி செலுத்துவதற்கும் அவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காகவும் செபிக்கவும் இம்முறை எமக்கு சந்தர்ப்பம் கிடைக்கப் பெற்றமைக்கு நாம் இறைவனுக்கு நன்றி கூறுவோம்.
13 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தேறிய துன்பியல் சம்பவம் இது என்னை பொறுத்தமட்டில் இன்று உணர்வோடு நின்று விடாது இது ஒரு உண்மையான ஒரு சம்பவமாக இருப்பதால் என்றும் எம்மைவிட்டு அகலாதிருக்க வேண்டும்.
உணர்வுகள் சில சமயம் களைத்துபோய் விடலாம். ஆனால் ஒரு உண்மை ஒருபோதும் உறங்காது.
ஆகவே இந்த உண்மையை எமது நெஞ்சில் தாங்கிக் கொண்டு நாங்கள் நடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும்.
இந்த வருடம் அதாவது இன்று (18.05.2022) எம்முடன் இணைந்து சகோதர மொழி பேசுகின்ற மக்களும் இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூறுகின்றார்கள் என்பது மட்டுமல்ல பெருமைக்குரியதாகவும் இருக்கின்றது.
நடைபெற்ற இந்த முள்ளிவாய்க்கால் சம்பவத்தை அவர்கள் எற்றுக் கொண்டு புரிந்து கொண்டு காலிமுகத் திடலில் மட்டுமல்ல, முள்ளிவாய்க்காலுக்கும் எமது சிங்கள சகோதரர்கள் வந்திருக்கின்றார்கள்.
அவர்களும் எம்முடன் இணைந்து கண்ணீர் சிந்தி நினைவு கூர்ந்துள்ளனர். இதற்காக நாம் அவர்களை பாராட்டுகின்றோம் நன்றியும் கூறி நிற்கின்றோம்.
இறைவன் எமது செபங்களுக்கு செவி சாய்த்து வருகின்றார். ஆகவே நாம் தொடர்ந்து இறை வேண்டுதல் கேட்போம். இறைவன் எம்மை வழி நடத்திச் செல்வார் என்பது திண்ணம்.
மறைந்த ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகைதான் எம்மிடமிருந்து தொலைந்துபோன உறவுகளை நினைத்துப் பார்க்க வித்திட்டவர். இது அழிந்து போகாதிருக்க அவர் எடுத்த முயற்சி அளப்பெரியது என்றுரைத்தார் அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார்.
மஹா.தர்மகுமார குருக்கள் உரையாற்றுகையில்;
முள்ளிவாய்க்காலில் தமிழின அழிவின் காரணமாக பல பெண்கள் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் அல்லலுற்ற நிலையில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் எனவும்,
இன்றைய மே மாதம் 18ந் திகதி நாளானது எமக்கு மறக்க முடியாத துயரம் நிறைந்த நாளாக இருக்கின்றது எனவும்.
எமது மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறி, அல்லலுற்று, துன்புற்று, குழந்தைகள் தொடக்கம் கர்ப்பிணி தாய்மார், பெரியோர், வயது முதிர்ந்தோர் யாவரும் பாதுகாப்பு கருதி சென்ற வேளையிலே தமிழினம் திட்டமிட்டு அழிக்கப்பட்ட நாளாக இந்த நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது என்பது நாம் அறிவோம்.
இது, என்றும் எம் மக்கள் மத்தியிலிருந்து அகல முடியாத ஒரு நாளாக இது இருக்கின்றது.
இந்த அழிவின்போது உயிர் நீத்தவர்கள் பலர் அத்துடன் அங்கவீனமுற்றவர்கள் இன்னும் பலர் இருந்து வருகின்றனர்.
இவ்வாறு நிக்கதியானோர் பொருளாதார சிக்கலில், நாளாந்த உணவு பஞ்சத்திலும், தங்கள் பிள்ளைகளுக்கு கல்வியை வழங்க முடியாத நிலையில் இன்றும் தடுமாறிய குடும்பங்களாக இருந்து வருகின்றனர்.
இதனால் இந்த நாள் என்பது ஒவ்வொரு குடும்பத்திலும் மறக்க முடியாத ஒரு நாளாகவே தொடர்கின்றது.
இதனால்தான் பேசாலை மக்கள் இந்த நாளை இந்த இடத்தில் இன்று இறந்தவர்களின் ஆன்ம ஈடேற்றத்துக்காக இறை வேண்டி நிற்கின்றார்கள் என இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாளின் நினைவு நாளாக, முள்ளிவாய்க்காலில் அவலமாக இறந்தவர்கள், பசி பட்டினியால் இறந்தவர்கள், இவர்கள் இந்த கஞ்சியை மட்டும் உண்டு உயிர் வாழலாம் என நினைத்தார்கள். இதனால்தான் இவர்களை நினைத்தே நாம் இந்த கஞ்சியை அருந்துகின்றோம்.
அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார், மஹா. தர்மகுமார குருக்கள் ஆகியோரின் உரையைத் தொடர்ந்து கஞ்சி பரிமாறப்பட்டது.
இந்த கஞ்சியானது எமக்கு ஒரு தேசிய உணவாகவும் அமையத் தொடங்கியுள்ளது என தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)