முகவர் அரசியலும் வேண்டாம் - கிறுக்கர் அரசியலும் வேண்டாம் - யோதிலிங்கம்

இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்து தமிழ்த் தேசியக் கட்சிகளை சந்தித்து இந்தியாவின் முடிவை தீர்மானகரமாக அறிவித்த பின் 13வது திருத்தம் மீண்டும் அரங்கிற்கு வந்து பேசுபொருளாகத் தொடங்கியுள்ளது.

நாம் சமஸ்டியை நிராகரிக்கவில்லை.. ஆனால் தற்போது இந்தியா முன்வைக்கும் தீர்வு 13வது திருத்தம் தான். இதற்கு மேல் இந்தியாவிடம் எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என்பது தான் அவரது தீர்மானகரமான அறிவித்தல்.

வழமையாக தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள கட்சிகளை மட்டும் சந்திக்கும் வெளிநாட்டமைச்சர்

இந்தத் தடவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவையும் சந்தித்திருக்கின்றார். இவ் அறிவித்தலுக்கான நாகரீகமான எதிர்வினை தமிழ்த் தரப்பிடமிருந்து போதியளவு வெளிவரவில்லை. இராஜதந்திரிகளிடம் எவ்வாறு பேசுவது என்கின்ற பயிற்சியை தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்னமும் பெற்றுக்கொள்ளவில்லை போலவே தெரிகின்றது.

சாதாரண அரசியல் தலைவர்களோடு பேசுவது போல இராஜதந்திரிகளுடன் பேச முடியாது. அவர்களுடன் பேசும் போது மூன்று விடயங்களைக் கவனத்திலெடுப்பது அவசியம்.

முதலாவது - நேரம். அவர்கள் மிகவும் சொற்ப நேரத்தையே சந்திப்புக்கு ஒதுக்குவார்கள். அதற்குள் மிகச் சுருக்கமாக தமிழ் மக்கள் என்ன எதிர்பார்க்கின்றனர் என்பதைக் கூறிவிட வேண்டும். விபரமான விடயங்களை ஒரு மகஜராக ஆவண வடிவல் கொடுத்துவிடலாம். வெளிநாட்டமைச்சர் அதனை வாசிக்காவிட்டாலும் அமைச்சின் செயலாளர் அதனை வாசித்து சாராம்சத்தை அமைச்சரிடம் கூறுவார். சம்பந்தனின் வரலாற்று விளக்கம் இராஜதந்திர சந்திப்பதற்கு உகந்ததல்ல.

தமிழ்த் தலைவர்கள் போதியளவு தயாரிப்புக்களுடன் சந்திப்புக்கு செல்வதில்லை. தங்கள் அபிலாசைகளை ஆவண வடிவில் கொடுப்பதுமில்லை. எப்போதும் தந்திரோபாயங்களை எப்போதும் கோட்டைவிடும் கஜேந்திரகுமார் இந்தத் தடவை மிகவும் தந்திரோபாயத்துடன் நடந்துகொண்டார். தனக்கு கொடுக்கப்பட்ட குறுகிய நேரத்தில் தமது கட்சியின் நிலைப்பாடுகளை தெளிவாகத் தெரிவித்ததுடன் விரிவான விளக்கங்களை ஆவண வடிவிலும் கையளித்திருந்தார். அவருடைய கருத்து இதுதான் ஒற்றையாட்சிக்குட்பட்ட 13வது திருத்தத்தை எம்மால் ஏற்க முடியாது. அதைவிட 13வது திருத்தத்தில் சட்டப் பிரச்சினைகளும் பல உள்ளன. கஜேந்திரகுமாரின் இயல்பு இந்திய இராஜதந்திரிகளுக்கு நன்கு தெரியும் என்பதால் அவருடன் பெரியளவிற்கு விவாதங்களுக்கு செல்வதில்லை.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தற்போது முன்வைக்கும் காணிப்பறிப்பு, அரசியல் யாப்பிலுள்ள அதிகாரப்பகிர்வு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துதல், சமஸ்டியை நோக்கிப் பயணித்தல் என்பது இந்தியாவையும் பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலுக்குள் முடக்கும் தந்திரோபாய நகர்வுதான். அரசியல் யாப்பிலுள்ள அதிகாரப்பகிர்வு என முலாம் பூசப்பட்டாலும் அது குறிப்பிடுவது 13வது திருத்தத்தைத்தான். ஆனாலும் அதிலுள்ள போதாமை என்னவென்றால் 13வது திருத்தத்திற்கு வந்த அழுத்தம் சமஸ்டிக்கு வரவில்லை என்பதே! இது சமஸ்டிக் கோரிக்கையைப் பலவீனப்படுத்துவதோடு அரசியல் தீர்வுக்கான நகர்வு 13வது திருத்தத்திற்குள் முடங்குவதற்கான வாய்ப்புக்களையும் உருவாக்கும்.

இரண்டாவது விடயம் - இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் உச்சபட்சமான தந்திரோபாய நகர்வுகளை வேண்டி நிற்பதாகும். அதுவும் வல்லரசுகளுடன் பேசும் போது அதிக கவனம் தேவை. அவர்கள் சாம, பேத, தான, தண்டம் அனைத்தையும் இராஜதந்திர மொழிக்குள்ளால் கூறும் ஆற்றலைப் பெற்றிருப்பர்.

ஜெய்சங்கள் சமஸ்டியை தாம் நிராகரிக்கவில்லை எனக் கூறியமை “சாம” அணுகுமுறைதான். இது தமிழ் அரசியல் தொடர்பான அணுகுமுறையில் அண்மைக்காலமாக இந்தியாவின் மாற்றங்களைக் காட்டுகின்றது. ஜெனிவாவில் இருந்தே மாற்றம் தெரியத் தொடங்கியது. அங்கு ஜெனிவா பிரதிநிதி 13வது திருத்தத்திற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை நோக்கி இலங்கை நகர வேண்டும் என்றும் பொருளாதார நெருக்கடித் தீர்வும், இனப் பிரச்சினைத் தீர்வும் “ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்” என்றும் கூறியிருந்தார். இந்த மாற்றத்தை தமிழ்த் தரப்பு எவ்வாறு கவனமாக கையாள்வது என்பது பற்றி யோசிப்பதும் நல்லது.

தமிழ்த் தரப்புடனான அணுகுமுறை இந்தியாவிற்கு தொடர்ச்சியான தோல்விகளையே தந்திருக்கின்றது. தமிழ் அரசியலின் பிரதான தரப்புக்கள் எப்போதும் இந்திய நிகழ்ச்சி நிரலிற்கு வெளியேதான் நிற்க முயற்சிக்கின்றன. 90களுக்கு பிறகு புலிகள் வெளியே நின்றனர். தற்போது கூட்டமைப்பின் தலைமையும், முன்னணியின் தலைமையும் வெளியேதான் நிற்கின்றது. தனக்கான அணியை உருவாக்குவதிலும் இந்தியா தொடர் தோல்விகளையேதான் கண்டுவருகின்றது. தமிழரசுக் கட்சிக்குள் மாவை அணியைப் பிரித்து பங்காளிக்கட்சிகளுடன் சேர்த்து ஒரு அணி கட்டுவதற்கு முயற்சிக்கப்பட்டது. 13வது திருத்தம் பற்றி மனோகணேசன், ரவூப்ஹக்கீம் என்போரை இணைத்து ரெலோ எடுத்த முயற்சி அவ்வாறானதுதான். அந்த முயற்சியை சம்பந்தனும், சுமந்திரனும் இலாவகமாக முறியடித்தனர்.

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரம் வந்தவுடன் விக்கினேஸ்வரன் அணியை பங்காளிக் கட்சிகளுடன் இணைத்து ஒரு முயற்சி எடுக்கப்பட்டது. அதுவும் மணிவண்ணனின் தந்திரோபாய நகர்வுகளினால் தோல்வியைத் தழுவியது. தற்போது இந்தியாவிற்குக் கிடைத்தது முன்னாள் இயக்கக்காறர்கள் மட்டும்தான். அவர்களைக் சோபிக்கச் செய்வது இலகுவான ஒன்றல்ல. புதிய தலைமுறையை உள்வாங்கக்கூடிய பலம் அவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. பழையவர்கள் பலர் தற்போது காலாவதியாகிப் போயுள்ளனர்.

இந்தியத்தொடர் தோல்விக்குப் பிரதான காரணம் பரஸ்பர பொறுப்பு, கடமை உணர்வை இந்தியா மறுத்துவருவதுதான். யதார்த்த உண்மை என்னவென்றால் தமிழ் மக்கள் தொடர்பாக இந்தியாவிற்குப் பொறுப்பும் கடமையும் உள்ளது. இந்தியாவின் அடுத்த தவறு இந்தியா முகவர்களை எதிர்பாக்கின்றதே ஒழிய நண்பர்களை எதிர்பார்ப்பதில்லை. சம்பந்தன், சுமந்திரன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார். போன்றவர்களினால் நண்பர்களாக இருக்க முடியுமே தவிர முகவர்களாக இருக்க முடியாது. அவர்களது வளர்ப்பின் அரசியல் கலாச்சாரம் அது. இந்த உண்மைகளை இந்தியா புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை. தவிர தமிழ் மக்கள் சார்ந்த விடயத்தில் பழைய அணுகுமுறை வெற்றியைக் கொடுக்கப் போவதில்லை. 80களில் ஒப்பந்தத்திற்கு ஜே.ஆர். ஜெயவர்த்தனா பணிந்தவுடன் இந்தியா உங்கள் இலக்கை கைவிடும்படி தமிழ் இயக்கங்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்தது. பல இயக்கங்கள் பணிந்துபோயின. புலிகள் மட்டும் இந்திய அழுத்தத்திற்கு பணியவில்லை. அது பின்னர் இந்தியப்படை - புலிகள் போராக மாறி ராஜீவ் காந்தி கொலை என வளர்ந்தது.

இந்தத் தடவை ஜெய்சங்கர் அந்த அணுகுமுறையினையே பின்பற்ற முயற்சிக்கின்றார். ரணில் அரசாங்கம் பணிந்தவுடன் தமிழ்த் தரப்பிற்கு அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கியுள்ளார். இந்த நகர்வு மேலும் பலரை இந்திய நிகழ்ச்சி நிரலுக்கு வெளியே தள்ளலாம். தனிநாட்டு இலக்கிற்காக உயிர்த்தியாகம் செய்த தமிழ் மக்களை ஒற்றையாட்சிக்குட்பட்ட 13க்குள் முடக்க முனைவது இந்தியாவிற்கு தொடர்ச்சியாக தோல்விகளையே தரும்.

இந்தியாவிற்குள்ள திரிசங்கு நிலை என்னவென்றால் முழு இலங்கைத் தீவும் இந்தியாவிற்கு தேவையாக இருப்பதால் தமிழ்மக்கள் பக்கம் முழுமையாக சாய முடியாது. மறுபக்கத்தில் புவிசார் அரசியல், தமிழ்நாட்டுக் காரணி, அழுத்த மூலவளம் என்பவற்றினால் தமிழ் மக்களை முழுமையாக நிராகரிக்கவும் முடியாது. இலங்கையின் ஆள்புல மேன்மை, இறைமை என்பவை பேணப்படுவதோடு தமிழ் மக்களின் சமத்துவம், சுயகௌரவம் பேணப்பட வேண்டும் என்ற இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை இதன் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டது.

இன்னோர் விடயம் பெரிய நாடுகள் ஒரு வெளிநாட்டுக்கொள்கையை உருவாக்கிவிட்டால் உடனடியாக மாற்றங்கள் எதனையும் கொண்டுவரமாட்டா? அடிக்கடி மாற்றங்கள் வருவது அந்த நாட்டின் பாதுகாப்பையே பலவீனப்படுத்திவிடும். எனவே அங்கு மாற்றங்கள் மெது மொதுவாகவே இடம்பெறும். அதற்கான அழுத்தங்களை நாம் கொடுத்துக்கொண்டேயிருக்க வேண்டும்.

இந்தியாவுடனான அணுகுமுறையில் தமிழ்த்தரப்பிடமும் பல பலவீனங்கள் உண்டு. அதில் முதலாவது இந்தியா தொடர்பாக தமிழ் அரசியல் தரப்பிடம் இருப்பது முகவர் அரசியலும், கிறுக்கர் அரசியலும்தான். முன்னாள் இயக்க காறர்களிடம் முகவர் அரசியல் இருக்கிறதென்றால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிடம் கிறுக்கர் அரசியல் இருக்கின்றது. இது இரண்டும் இந்தியாவுடன் உறவுகளைப் பேண உதவப்போவதில்லை. மாறாக பரஸ்பர பொறுப்பும், கடமைகளையும் கொண்ட அரசியலையே இந்தியாவும் தமிழ்த் தரப்பும் தேர்ந்தெடுக்க வேண்டும். கொழும்பின் மூத்த ஊடகவியலாளர் ஒருவர் ஒருதடவை சிரித்தபடி “இந்தியாவுடன் முகவர் அரசியலைத்தவிர வேறு எவற்றையும் பின்பற்ற முடியாது” என இக் கட்டுரையாளரிடம் குறிப்பிட்டார்.

இரண்டாவது இந்திய நலன்களுக்கும் 13வது திருத்தத்திற்குமிடையிலான உறவை தெளிவாகப் புரிந்துகொள்ளாமையாகும். இலங்கை மீதான இந்தியாவின் நலன்கள் அதிகளவில் 13வது திருத்தத்திலேயே தங்கியுள்ளது. 13வது திருத்தம் நடைமுறையில் இருக்கும்போது மட்டுமே இந்தியாவினால் இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உயிர்ப்போடு வைத்திருக்க முடியும். இலங்கை மீது செல்வாக்கு செலுத்துவதற்கு இந்தியாவிற்கு சட்ட ரீதியான சர்வதேச ஆவணம் இலங்கை இந்திய ஒப்பந்தம் மட்டும்தான்.

இந்தியாவின் பார்வையில் 13வது திருத்தம் என்பது சமஸ்டியையும் அல்ல ஒற்றையாட்சியுமல்ல. இந்திய அரசாங்க முறையும் சமஸ்டியும், ஒற்றையாட்சியும் அல்ல. அங்கு இந்திய அரசாங்க முறை நெருக்கடி காலங்களில் ஒற்றையாட்சி போல செயற்படும். சமாதான காலங்களில் சமஸ்டி ஆட்சி போல தொழிற்படும். யாப்பு ஏற்பாடுகளை விட நடைமுறை அரசியலே அங்கு சமஸ்டித் தோற்றத்தைக் கொடுக்கின்றது. மாநிலக் கட்சிகளின் வளர்ச்சி இப்போக்கை நிரந்தரமாக்கிவிட்டது. 13வது திருத்தத்தையும் இந்திய முறைபோலத்தான் இலங்கையிலும் சிபார்சு செய்திருந்தது.

ஆனால் நடைமுறையில் உள்ளமை அதுவல்ல. 13வது திருத்தம் சமஸ்டி முலாம் பூசப்பட்ட ஒற்றையாட்சி முறையாகும். சுரேஸ் பிறேமச்சந்திரன் நகைச்சுவையாக ஒருதடவை இலங்கை அரசியல் யாப்புடன் 13வது திருத்தம் கொஞ்சம்கூட பொருந்தவில்லை அதனால் யாப்பில் சும்மா செருகிவிட்டனர். செருகிவிட்டதால் தற்போது ஒவ்வொன்றாக கழன்று விழுந்து கொண்டிருக்கின்றது. 13வது திருத்தத்தில் சமஸ்டி முலாம் கொஞ்சம் கொஞ்சமாக அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

13வது திருத்தத்தைப் பொறுத்தவரை இரண்டு காரணங்களினால் தமிழ் மக்கள் ஏற்க முடியாது. ஒன்று திருத்த உருவாக்கத்தில் தமிழ் மக்கள் பங்குபெறவில்லை. எனவே 13வது திருத்தம் தொடர்பான பொறுப்பு தமிழ் மக்களுக்குக் கிடையாது. பொறுப்பு இந்தியாவிற்கே உள்ளது. இரண்டாவது 13வது திருத்தம் தமிழ்மக்களின் அபிலாசைகளை கொஞ்சம் கூட பிரதிபலிக்கவில்லை. எனவே 13இன் அமூலாக்கம் தொடர்பாக தமிழ் மக்கள் பார்வையாளராக இருக்க முடியுமே தவிர பங்காளராக முடியாது. இதனை நாகரீகமான மொழியில் இந்தியாவிற்கு தெரியப்படுத்த வேண்டும்.

13வது திருத்தம் தற்போதுள்ள நிலையில் முழுமையாக அமூல்படுத்தினாலும் பெரிய பயன்கள் எதுவும் கிடைக்கப் போவதில்லை. 13வது திருத்தத்தை தமிழ் மக்கள் ஏற்க வேண்டுமென்றால் ஆளுநரின் அதிகாரம் அகற்றப்படல் வேண்டும். மாகாண சபைகள் சட்டவாக்க அதிகாரத்தை பிரயோகிப்பதற்குள்ள தடைகள் அகற்றப்படல் வேண்டும். ஒத்தியங்கு பட்டியல் நீக்கப்பட்டு அவை மாகாண சபைகளிடம் ஒப்படைக்கப்படல் வேண்டும். இலங்கை ஓர் ஒற்றையாட்சி அரசு என்ற அரசியல் யாப்பின் இரண்டாவது உறுப்புரையும், பாராளுமன்றம் தனது சட்டவாக்க அதிகாரத்தை துறத்தலோ, பராதீனப்படுத்தலே ஆகாது என்ற அரசியல் யாப்பின் 76வது உறுப்புரையும் நீக்கப்படுதல் வேண்டும்.
இந்த மாற்றங்களைச் செய்துவிட்டு 13வது திருத்தத்தை ஏற்கும்படி தமிழ் மக்களை கேட்கட்டும். தமிழ் மக்கள் ஒத்துழைக்கத் தயாராக இருப்பார்கள்.

13வது திருத்தத்தையே நடைமுறைப்படுத்த முடியாத அரசாங்கத்திடம் சமஸ்டியை எவ்வாறு கேட்பது என ஜெய்சங்கர் அங்கலாய்க்கலாம். அவர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதற்காக தமிழ்மக்கள் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கமாட்டார்கள்.

முகவர் அரசியலும் வேண்டாம் - கிறுக்கர் அரசியலும் வேண்டாம் - யோதிலிங்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More