மீனவ சமூகத்தின் வாழ்வையே கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கும் திட்டங்கள்.

மன்னார் தீவில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி கோபுரம் அமைத்தல், இத்துடன் கனியவள மண் அகழ்வு இவற்றால் மன்னார் தீவும் மீனவர்களும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வரும் இவ்வேளையில், தற்பொழுது இப்பகுதியில் இறால் வளர்ப்பும், பண்ணையும் முன்னெடுக்கப்படுவதால் மன்னார் தீவுக்கு தொடர்ந்து அபாயம் தோன்றியுள்ளதாக மன்னார் மாவட்ட மீனவ சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம் இவ்வாறு தெரிவித்தார்.

ஆலம், செவ்வாய் கிழமை (13.09.2022) நடாத்திய ஊடக சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்;

மன்னார் மாவட்டத்தில் கடலட்டை , மீன், இறால் வளர்ப்பு போன்றவற்றை அரசோ அல்லது தனியாரோ திட்டங்களை முன்னெடுக்கும் போது நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல.

ஆனால், குறித்த வளர்ப்பு திட்டம் வழங்கப்பட்ட முறையில் நிறைய முறைகேடுகள் காணப்படுகின்றது. ஆரம்பத்தில் சீன கம்பனிகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்பட்ட விடயம் மீனவர்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த பகுதி மீனவர்களுக்கு குறித்த திட்டத்தை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனை நாங்கள் வரவேற்கிறோம். குறிப்பாக மன்னாரில் இலுப்பைக்கடவை தொடக்கம் தேவன் பிட்டி வரையிலான சுமார் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகள் இன்று மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இலுப்பைக்கடவை உள்ளிட்ட சில கிராமங்களில் மீனவ மக்களின் எதிர்ப்பு காரணமாக குறித்த நடவடிக்கை தடைப்பட்டுள்ளது.

அட்டை வளர்ப்பிற்காக வழங்கப்படுகின்ற காணிகள், மீனவர்கள் எதிர் காலத்தில் கடலை மட்டும் நம்பி இருக்காது கரை யோரங்களிலும் தமது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கு அமைவாக குறித்த பண்ணை திட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது எமது வேண்டுகோளாக இருக்கின்றது.

ஆனால்,

  • தற்பொழுது மன்னாரில் முன்னெடுக்கப்படும் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர்கள் யார்?
  • வெளிநாட்டு தலையீடுகள் இருக்கிறதா?, அல்லது,

  • வெளிநாட்டு கம்பெனிகள் உள் வாங்கப்பட்டுள்ளதா? உள்ளிட்ட கருத்துக்கள் இப்பொழுது வெளியாகி உள்ளது.

கடலில் பிடிக்கப்படுகின்ற 75 கிராமுக்கு குறைவான அட்டைகளைப் பெற்று அதனை பண்ணைகளில் விட்டால் அந்த அட்டைகள் பெருகி உற்பத்தியாகும் என்பது உண்மை.

எனினும், அந்த அந்த கிராம மீனவர்கள் நலம் பெற வேண்டுமாக இருந்தால் அரசு குறித்த திட்டத்தை குறிப்பிட்ட கிராம மீனவர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே மீனவ சமூகத்திடம் எழுந்துள்ள விடயமாக இருக்கின்றது.

ஆகவே, குறித்த திட்டத்தை வெளி மாவட்டத்தினருக்கும், வெளி நாடுகளுக்கும் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்பதும் எமது வேண்டுகொளாக இருக்கின்றது.

மேலும், மன்னார் தீவு பகுதியை எடுத்துக் கொண்டால் இங்கு இடம் பெறுகின்ற நிறைய அபிவிருத்தி திட்டங்கள் என்ற போர்வையில் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், கனிய மண் அகழ்வு போன்ற விடையங்கள் இடம்பெற்று வருகின்ற போதும் எம்மால் அதற்கு எதிராக பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதற்கு அப்பால் மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் சுமார் 400 ஏக்கர் நிலம் இறால் வளர்ப்புக்கு என வழங்கப்பட உள்ளதாக அறிய முடிகின்றது.

அதுவும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளது எனவும் தெரிய வந்துள்ளதுடன், குறித்த காணி தனி நபருக்கு சொந்தமானது எனவும் கூறப்படுகிறது.

இத்திட்டம் நடை முறைப்படுத்தப்படுமாக இருந்தால் மன்னார் தீவு பகுதியில் அதிக நிலப்பகுதியில் கடல் நீர் உள் வாங்கப்பட்டு இவை கிராமங்களுக்குள் உட்புகும் அபாயமும் காணப்படுகின்றது.

காற்றாலை மின் கோபுரங்கள் அமைப்பதால் மீனவர்கள் எவ்வாறான இடர்களை சந்திக்கின்றார்களோ அந்த வகையில் குறித்த இறால் வளர்ப்பு பண்ணையினால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்கு மாற்றுக் கருத்து கிடையாது.

குறித்த திட்டத்தை யார் முன்னெடுத்தார்களோ அவர்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் என மன்னார் மாவட்ட மீனவ சங்க சமாசத்தின் செயலாளர் என்.எம். ஆலம் மேலும் தெரிவித்தார்.

இவ் ஊடக சந்திப்பின்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வடமாகாண கடற்றொழில் இணையத்தின் செயலாளர் ஜீ. அன்ரனி சங்கர் என்பவரும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

மீனவ சமூகத்தின் வாழ்வையே கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கும் திட்டங்கள்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More