மீட்சி பெறுவதற்கு வெகுகாலம் எடுக்காது

பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு, சர்வதேசத்தின் நிதியுதவிகளைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் இராஜதந்திர முயற்சிகள் வெற்றியளிக்குமாயின்- எமது நாடு பொருளாதார மீட்சி பெறுவதற்கு வெகுகாலம் எடுக்காது என முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா தெரிவித்துள்ளார்..

சமகால அரசியல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

பொருளாதார நெருக்கடியினால் மக்கள் பாரிய இன்னல்களை எதிர்கொள்கின்றனர். இந்த பின்னணியில்தான் மக்கள் போராட்டம் உருவானது, அகிம்சை வழியில் போராடிய போராட்டகாரர்கள் தாக்கப்பட்டனர், போராட்டக்காரர்களை தாக்கியதால் மக்கள் ஆத்திரத்தில் ஆளும்தரப்பு எம்.பி.க்கள், அமைச்சர்களின் வீடுகள், சொத்துகளை தேடித் தேடி தீ வைத்தனர், பல உயிர்ச்சேதங்களும் ஏற்பட்டன.

இத்தகைய அபாய சூழலில் அரசாங்கம் ஒன்று இல்லாத நிலை ஏற்ப்பட்டது. உடனடியாக ஆட்சியை அமைக்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு பல தடவைகள் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இறுதி நேரம் வரை இருந்து விட்டு தனது கட்சிக்காரர்கள் ஒரு சிலரின் அழுத்தத்தின் பின்னணியில், அதுவும் ரணிலை நியமிக்க முடிவானதன் பின்னரே- பல நிபந்தனைகளை முன்வைத்து, தான் பதவியேற்கப் போவதாக சஜித் அறிவித்தார். இது மிகவும் கோழைத்தனமான முடிவாகும்.

நாட்டில் இவ்வளவு பிரச்சினை உருவாகியும் எதிர்கட்சிகளால் மக்கள் சார்பாக ஒன்றுபட்டு தீர்மானம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. நாட்டு மக்கள் குறித்து எந்தவித கவலையும் அவர்கள் கொள்ளவில்லை. தங்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தையே குறிக்கோளாக கொண்டு நிபந்தனைகள் பல விதித்தனர். இத்தகைய பின்னணியில் யாரும் ஆட்சிப்பொறுப்பை ஏற்க முன்வராத சூழலில்தான் வேறு வழியின்றி ரணிலை அழைத்து பொறுப்பை கொடுத்துள்ளனர்.

இருந்த போதிலும் ரணிலின் நியமனம் காலத்திற்கு ஏற்றதாகும். நாட்டின் கல்வி மற்றும் பொருளாதார அபிவிருத்தி குறித்து மிகச்சிறந்த முடிவினை எடுக்கும் ஆற்றல் அனுபவம் வாய்ந்தவர், சர்வதேச இராஜதந்திர உறவும் மதிநுட்பமும் நிறைந்தவர் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கொண்ட பல திட்டங்களை கடந்த காலங்களில் நாட்டுக்கு அவர் முன்வைத்திருந்தார். ஆனால் அவற்றுக்கு மக்களோ பிற அரசியல் தலைமைகளோ சரியான இடம் கொடுக்கவில்லை.

எவ்வாறாயினும் இன்றைய சூழலில் ரணிலால் மாத்திரமே பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்பதை அவரின் எதிரிகள் கூட ஏற்றுக் கொண்டுள்ளனர். எவரும் அவர் தகுதியற்றவர், திறமையற்றவர் என்று கூறவில்லை. பிரதமராக பதவியேற்ற ரணிலுக்கு பலம்வாய்ந்த நாடுகள் பல தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதுடன் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்பதற்கு உதவுவதாகவும் உறுதியளித்திருக்கின்றன. இது நெருக்கடியில் சிக்குண்டு தவிக்கன்ற எமது மக்களின் விடிவுக்கு நல்ல சமிக்ஜையாகவே தெரிகிறது.

விரைவில் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, சீனா, இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளையும் அரபு நாடுகளையும் உள்ளடக்கி இலங்கைக்கு நிதியுதவி வழங்கும் சர்வதேச பொருளாதார மாநாட்டினை நடத்தி, அதன் மூலம் நிலையான உதவித் திட்டத்திற்கான சர்வதேச ஒத்துழைப்பு பேரவையை அமைப்பதற்கு பிரதமர் ரணில் திட்டமிட்டுள்ளார். அவரது இந்த இராஜதந்திர முயற்சி வெற்றியளிக்குமாயின்- இலங்கை பொருளாதார மீட்சி பெறுவதற்கு வெகுகாலம் எடுக்காது என்பது திண்ணம்.

இவ்வாறான விடயங்கள்- சிதைந்து போயுள்ள எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப உதவும் சிறந்த வழி முறைகளாக நாம் நோக்கலாம். மிகவும் இக்கட்டான கட்டத்தில்- நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு முன்வராமல் பயந்து ஒதுங்குகின்றவர்களை விட- சவாலை ஏற்றுக் கொண்டு துணிச்சலுடன் முன்வந்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்கிப் பார்க்கலாம் என்று மயோன் முஸ்தபா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மீட்சி பெறுவதற்கு வெகுகாலம் எடுக்காது

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now




ENJOY YOUR HOLIDAY