
posted 8th May 2022
மிரட்டிப் பணம் வசூலிக்கும் நியூ றென்ட்
இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோப்பாய் செல்வபுரத்தைச் சேர்ந்த இளம் கணவன், மனைவி மற்றும் அவரது சகோதரர்கள் இருவரே நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் முகநூல் போலிக் கணக்கில் சாவகச்சேரியைச் சேர்ந்த இளைஞருடன் நட்பாகியுள்ளனர். பின்னர் இளைஞனை கோப்பாய்க்கு அழைத்து தமது வீட்டில் அறையில் பூட்டிவைத்து நிர்வாணமாக்கி சித்திரவதை செய்ததுடன், ஒளிப்படம் மற்றும் காணொளிப் பதிவை மேற்கொண்டுள்ளனர்.
ஒளிப்படம் மற்றும் காணொளியை முகநூலில் பதிவேற்றப் போவதாக அச்சுறுத்தி இளைஞனிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை கோரியுள்ளனர். அச்சமடைந்த இளைஞன் வங்கிக் கணக்கில் அந்தப் பணத்தை கடந்த வாரம் வைப்பிலிட்டுள்ளார்.
இந்த நிலையில் மீளவும் இந்த வாரம் அந்த ஒளிப்படங்கள் மற்றும் காணொலியை பதிவேற்றப் போவதாக மிரட்டி இளைஞனிடம் 5 லட்சம் ரூபாய் கோரியுள்ளனர்.
அதனால் அச்சமடைந்த இளைஞன் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். அதனை விசாரித்த பொலிஸார் இளம் தம்பதி உள்ளிட்ட நால்வரை நேற்று கைது செய்தனர்.
இளம் குடும்பத்தலைவர் இராணுவத்தின் வேலைப் பகுதியில் இணைந்து பணியாற்றி விலகியவர் என்று தெரிவிக்கப்பட்டது.
சந்தேக நபர்கள் விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.
பூர்வீகமாக நெடுந்தீவு இடம்பெயரும் மக்களின் அவலநிலை
அடிப்படை வசதிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் இன்மையால் பூர்வீகமாக நெடுந்தீவில் வாழ்ந்த மக்கள் பலர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தின் மிகவும் பழமையான தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் போதிய வசதிகள் இன்மை மற்றும் தொழில் வாய்ப்புக்கள் இன்மையால் பரம்பரை பரம்பரையாக அங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, நெடுந்தீவு மேற்கு சாராப்பிட்டி வீட்டுத்திட்டம், நெடுந்தீவு கிழக்கு 12ஆம், 13ஆம் வட்டாரங்களை சேர்ந்த மக்களே அண்மைக்காலமாக அதிகளவில் வெளியேறி வருகின்றனர்.
ஒரு பகுதி மக்கள் வெளியேறி வருகின்றபோதிலும், வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் மக்களே தற்போது நெடுந்தீவில் வாழ்கின்றனர். இவர்கள் போதிய வருமானங்களின்றி பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர் என்றும் தெரியவருகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் இரக்கமான வேண்டுகோள்
இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார, சமூக நெருக்கடி மற்றும் அமைதியின்மையை நிர்வகிப்பதற்கு புத்திசாலித்தனமாகவும் பொறுமையாகவும் ஒத்துழைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு மக்களை கேட்டுள்ளது.
இது தொடர்பில் அந்த அமைச்சு விடுத்த அறிக்கையில்,
நாட்டில் எங்கிருந்தும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கான மக்களின் ஜனநாயக உரிமையை ஜனநாயக கட்டமைப்புக்குள் அனைத்து இலங்கையர்களும் மதிக்க வேண்டும்.
எவ்வாறாயினும், சில சந்தர்ப்பங்களில், போராட்டக்காரர்கள் வன்முறையான முறையில் நடந்துகொள்வதும், பொலிஸ் மற்றும் படையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிப்பதும், அவர்களை அச்சுறுத்துவதும் காணப்படுகிறது.
இதன் காரணமாக, நாட்டின் பெரும்பான்மையான சட்டத்தை மதிக்கும் குடிமக்கள் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பராமரிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இந்த அவசர நிலையை கருத்தில்கொண்டு ஜனாதிபதி அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பேணுவதற்கு மிகவும் புத்திசாலித்தனத்துடனும் பொறுமையுடனும் செயல்படுமாறு நாட்டின் அனைத்து பொறுப்புள்ள குடிமக்களையும் பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொள்கிறது என்றுள்ளது.
கால்தவறி கிணற்றுக்குள் விழுந்த சிறுமி மரணம்
வேலணை, பகுதியில் கிணற்றுக்குள் விழுந்த 11 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இதன்போது சரவணை பகுதியினை சேர்ந்த ரூபன் ஜதுசா என்ற 11 வயதுச் சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
வீட்டில் இருந்தவர்கள் அயல் வீட்டுக்குச் சென்ற சமயம் சிறுமி நீராடுவதற்காக கிணற்றடிக்கு சென்றுள்ளார். இதன்போது கால் தடக்கி கிணற்றுக்குள் விழ்ந்திருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சிறுமியை கிணற்றுக்குள் இருந்து மீட்டு ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றபோது, சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY