மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை

கல்முனை மாநகராட்சி ஆள்புல எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் 01 கிலோ கிராம் மாட்டிறைச்சியின் அதிகூடிய விலையாக 1600 ரூபா கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அசாதாரண சூழ்நிலையை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, கல்முனை மாநகர பிரதேசங்களில் ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி 2200 ரூபாவுக்கு மேல் விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைக் கவனத்தில் கொண்டு, மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம். றகீப், நாளை மறுதினம் 06ஆம் திகதி சனிக்கிழமை தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த நிர்ணய விலையை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபைக்குட்பட்ட மாட்டிறைச்சி விற்பனையாளர்கள், புதன்கிழமை (03) மாலை, மாநகர முதல்வரினால் மாநகர சபைக்கு நேரடியாக அழைக்கப்பட்டு, இறைச்சி வியாபாரத்தின் போது அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் செலவீனங்கள் குறித்து கேட்டறியப்பட்டு, அவற்றுக்குரிய தீர்வுகள் முன்மொழியப்பட்ட நிலையில், அவர்களது இணக்கத்துடன் மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 01 கிலோ கிராம் மாட்டிறைச்சி 1600 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும், அதில் ஆகக்கூடியது 200 கிராம் மாத்திரமே முள் அடங்கியிருத்தல் வேண்டும் எனவும், அனைத்து இறைச்சிக் கடைகளிலும் டிஜிட்டல் (digital) தராசு பயன்படுத்தப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை மீறும் மாட்டிறைச்சி வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மாட்டிறைச்சிக் கடைக்கான வியாபார உரிமம் இரத்துச் செய்யப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை, இறைச்சிக் கடைக்காரர்களுக்கு மாடுகளை விற்பனை செய்வோர் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து, அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், ஒரு கிலோ கிராம் இறைச்சியை ஆகக்கூடியது 1300 ரூபாப்படி வழங்க வேண்டும் எனவும் முதல்வரினால் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனை மீறும் மாடு வியாபாரிகள் பொலிஸார் மூலம் கைது செய்யப்பட்டு, கடுமையான சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவதுடன், மாடுகளும் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாட்டிறைச்சி வியாபாரிகளுடனான இக்கலந்துரையாடலை ஆரம்பித்து வைத்து முதல்வர் ஏ.எம். றகீப் கருத்துரைக்கையில், அம்பாறை மாவட்டத்தின் ஏனைய பல பிரதேசங்களில் மாட்டிறைச்சியானது 1200 ரூபா, 1400 ரூபா தொடக்கம் 1600 ரூபா வரை விற்கப்படுகின்றபோது ஏன் கல்முனையில் மாத்திரம் 2200 ரூபாவுக்கு மேல் அநியாயமாக விற்பனை செய்கின்றீர்கள் என்று விசனம் தெரிவித்தார்.

மிகவும் கஷ்டமான இக்கால கட்டத்தில் எமது மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்வதில் இவ்வளவு கொள்ளை இலாபத்தை ஈட்டுவது மனச்சாட்சிக்கு விரோதமாகத் தெரியவில்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நாட்டு நிலைமையை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு நாளுக்கு நாள் உங்கள் இஷ்டம் போல் விலையைக் கூட்டிக்கொண்டு போவதை இனியும் அனுமதிக்க முடியாது. இறைச்சிக் கடைகளை இழுத்து மூட வேண்டியேற்பட்டாலும் பரவாயில்லை கொள்ளை இலாபத்தில் இறைச்சி விற்பதை அனுமதிக்க மாட்டேன் என்றும் முதல்வர் தனது நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியிருந்தார்.

மாட்டிறைச்சிக்கு கட்டுப்பாட்டு விலை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More