
posted 17th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
மருத்துவர் அர்ச்சுனாவுக்கு பிணை; எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல்
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் முன்னாள் பதில் மருத்துவ அத்தியட்சகர் இ. அர்ச்சுனா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அத்துடன், அவர் மருத்துவமனையின் பணிமனைகளுக்குள் நுழைவதற்கு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதேநேரம், மருத்துவர் அர்ச்சுனா ஏனைய மருத்துவர்கள்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் இன்று (17) புதன்கிழமை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளிக்க வேண்டும். அவ்வாறு வாக்குமூலம் அளிக்காதபட்சத்தில் அவர் மீது மற்றொரு வழக்கை தொடுக்க முடியும் என்று பொலிஸாருக்கு நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
சாவகச்சேரி ஆதார மருத்துவமனை குறித்த விவகாரத்தால் அதன் அப்போதைய பதில் மருத்துவ அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா பேசுபொருளாகியிருந்தார். இந்த நிலையில், ஏனைய மருத்துவர்களுக்கு எதிராக அவதூறு பரப்பினார் என்று அவர்மீது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஐந்து முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸார் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் அறிக்கையிட்டிருந்தனர். இது தொடர்பில் மருத்துவர் அர்ச்சுனாவை நீதிமன்றில் நேற்று (16) செவ்வாய்க்கிழமை முற்படுமாறு உத்தரவிடப்பட்டது.
இதன்படி மருத்துவர் அர்ச்சுனா நேற்று செவ்வாய்க்கிழமை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்பட்டார்.
வழக்கில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் பணிமனைகளுக்குள் நுழையவும், மருத்துவமனை நிர்வாகத்தில் தலையிடவும் அர்ச்சுனாவுக்கு தடை விதிக்கப்பட்டது. எனினும், மருத்துவமனை விடுதியில் தங்குவதற்கு மாத்திரம் அவருக்கு அனுமதியளிக்கப்பட்டது. அத்துடன், நேற்றைய நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவிடவும் அல்லது நேரலை வெளியிடவும் நீதிவான் தடை விதித்தார்.
மேலும், அர்ச்சுனா, மருத்துவர்கள் மீது சுமத்திய குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் இன்று (17) புதன்கிழமை வாக்குமூலம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிவான், அவர் வாக்குமூலம் அளிக்காதபட்சத்தில் அவர் மீது வழக்கு தொடர முடியும் என்றும் பொலிஸாருக்கு தெரிவித்தார்.
தொடர்ந்து, அர்ச்சுனாவை 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான பிணையில் செல்ல அனுமதித்தார். ஆனால், வைத்தியர் அர்ச்சனாவோ, ‘தன்னிடம் அதற்குரிய பணம் இல்லை. எனது காரினை விற்றுத்தான் அதற்குரிய பணத்தினைக் கட்ட வேண்டும்’ என்றார்.
ஆனால், இன்றைய நிலையின்படி, வைத்தியர் அர்ச்சனாவின் வங்கிக் கணக்கிற்கு ‘நலன்விரும்பிகள்’ பணத்தினை வைப்பிலிட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி என் வங்கியில் பணம் போட வேண்டாம். இது வேறு திசையில் நான் சொல்வதினையும், செய்வதனையும் கொண்டு போகும் என்று சொன்னார்.
நேற்றைய தினம் வழக்கு தாக்கல் செய்த மருத்துவர்கள் சார்பில் திருக்குமரன், குருபரன் ஆகியோர் முன்னிலையாகினர்.
மருத்துவர் அர்ச்சுனா தனக்காக சட்டத்தரணியை நியமித்திருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)