
posted 29th November 2021
மன்னாரில் தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மன்னார் தீவு மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன என மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலைய அறிக்கை வெளிக்காட்டுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் கடந்த 26.11.2021 தொடக்கம் 29.11.2021 வரை தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக இப் பகுதியில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு குறிப்பாக மன்னார் தீவு எங்கும் வெள்ளக்காடாகவே காட்சி அளிக்கின்றது.
திங்கள் கிழமை (29.11.2021) வரை மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மக்களே இடம்பெயர்ந்துள்ளமையால் இவர்களை பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கையில் இதுவரை மன்னார் மாவட்டத்தில் 39 கிராம அலுவலகர் பிரிவுகளில் 7253 குடும்பங்களைச் சார்ந்த 26,519 நபர்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன் மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் 367 குடும்பங்களைச் சார்ந்த 1380 நபர்கள் 11 பாதுகாப்பான அமைவிடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது பத்து கிராம அலுவலகர்கள் பிரிவைச் சார்ந்த சவுத்பாரில் 4 குடும்பங்களில் 19 நபர்களும், எழுத்தூரில் 8 குடும்பங்களில் 28 நபர்களும், எமில்நகரில் 30 குடும்பங்களில் 122 பேரும், பேசாலை தெற்கில் 13 குடும்பங்களில் 34 பேரும். பேசாலை மேற்கில் 28 குடும்பங்களில் 89 நபர்களும், தலைமன்னார் ஸ்ரேசனில் 36 குடும்பங்களில் 123 நபர்களும், துள்ளுக்குடியிருப்பில் 56 குடும்பங்களில் 220 பேரும், ஓலைத்தொடுவாயில் 17 குடும்பங்களில் 50 பேரும், தோட்டவெளியில் 160 குடும்பங்களில் 635 நபர்களும், சிறுத்தோப்பில் 15 குடும்பங்களில் 60 நபர்களுமே இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என மன்னார் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வாஸ் கூஞ்ஞ