
posted 14th December 2022
மன்னார் மாவட்டத்தில் உள்ளுர் உற்பத்தியாளர்களை ஊக்குவித்து வெளி உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உள்ளுர் உற்பத்திபொருட்கள் கண்காட்சியும், விற்பனையும் புதன்கிழமை (14) காலை பத்து மணி தொடக்கம் பிற்பகல் வரை இடம்பெற்றது.
மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் அவர்களின் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களிலும் இருந்து சுய தொழில் முயற்சி உற்பத்தியாளர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்தார்கள்.
இதில் தொற்று நீக்கி திரவங்கள், சலவைப் பொருட்கள், மரக்கரி வகைகள், உணவுப் பொருட்கள், பனை உற்பத்திப் பொருட்கள், விவசாய நாற்றுகள், இயற்கை உரங்கள், வீட்டு உபகரணப் பொருட்கள் உட்பட உள்ளுரில் உற்பத்தி செய்யப்பட்ட பல வியாபாரப் பொருட்கள் காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்பட்டன.
நாட்டினையும், மன்னார் மாவட்டத்தினையும் உணவு பாதுகாப்பின்மை மற்றும் மந்த போசணையில் இருந்து விடுவிக்கும் வகையில் பிரதேச செயலாளர் பிரிவுகளில் வீட்டுத் தோட்ட செய்கையை ஊக்குவிக்கும் வகையில் பயணாளிகளுக்கு விதைகள் வழங்குவதற்காக பிரதேசச் செயலாளர்களிடம் ஒரு தொகை விதைகளும் கையளிக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டச் செயலகம், பிரதேச செயலகங்கள், சமுர்த்தி திணைக்களம், விவசாய திணைக்களம், கமநல அபிவிருத்தி திணைக்களம், சுகாதார திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், கால்நடை சுகாதார திணைக்களம், பனை அபிவிருத்தி சபை மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு பற்றுதலோடு பிரதேச செயலாளர்கள் அழைக்கப்பட்ட திணைக்கள தலைவர்கள் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
இந்த கண்காட்சியின் போது உள்ளுர் உற்பத்திப் பொருட்களை பொது மக்களும் அரச உத்தியோகாத்தர்களும் ஆர்வத்துடன் கொள்வனவு செய்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)