பொதுமக்கள் எரிபொருளுக்காகப் போராட்டங்கள்

பொதுமக்கள் எரிபொருளுக்காகப் போராட்டம் - கிளிநொச்சி

எரிபொருள் தரக்கோரி பொதுமக்கள் சிலர் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கூடி போராட்டம் ஒன்றை செவ்வாய்க்கிழமை (28) முன்னெடுத்திருந்தனர்.

குறித்த போராட்டம் காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. போராட்டதில் ஈடுபட்டவர்கள் மாவட்ட செயலகத்தில் சத்தியாக்கிரக போராட்டமாக முன்னெடுத்தனர்.

இதன்போது, மாவட்ட செயலக அதிகாரிகள் அவர்களுடன் கலந்துரையாடினர்.

5 நாட்களாக எரிபொருள் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் எமக்கு 1 லீட்டர் பெற்றோலாவது தாருங்கள் என அவர்கள் இதன் போது வலியுறுத்தினர்.

சிலர் மாவட்ட செயலகத்தில் அனுமதி பெற்றதாக கூறி எரிபொருள் பெற்று செய்கின்றனர். அது போன்று தாம் வீடு செல்வதற்கு எரிபொருள் தருமாறு கூறியே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்திய சேவை உள்ளிட்ட அத்தியாவசிய சேவைக்கு மாத்திரமே இருப்பில் உள்ள எரிபொருளிலிருந்து மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருவதாக மாவட்ட செயலக அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைத்து சென்றதுடன், தொடர்ந்தும் எரிபொருள் கிடைக்கும் எனும் நம்பிக்கையில் காத்திருக்கின்றனர்.


பொதுமக்கள் எரிபொருளுக்காகப் போராட்டங்கள்

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்கள்

கிளிநொச்சியில் இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களுக்கு எரிபொருள் பெற்றுத் தருமாறு கோரி மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அவர்கள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

கிளிநொச்சி அரச அதிபர், யாழ் மாவட்ட அரச அதிபருடன் கலந்துரையாடி அதற்கான ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்ததை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டது


முன்னாள் போராளிகளை அல்லாது எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடியுங்கள் - செல்வம் அடைக்கலநாதன்

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளை தொந்தரவு செய்யாமல் எரிபொருளை பதுக்கும் மாபியாக்களை கண்டுபிடிப்பதற்கு புலனாய்வுப் பிரிவினர் முன்வரவேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (28) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

அத்தியாவசியத் தேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பானது குழந்தைப் பிள்ளைத்தனமானது. இதனால் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள் உட்பட பலதரப்பினர் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

ஏ.சி ரூமில் இருக்கும் அமைச்சர் பந்துல குணவர்த்தன சாதாரண மக்கள் வரிசையில் நிற்கும் பரிதாபத்தை உணர்ந்திருப்பாரோ என்று தெரியவில்லை. அதிலும் பெண்கள் இந்த விடயத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நேர சாப்பாட்டுடன் வாழ்வை கழிக்கும் அவலநிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அந்த மக்களின் பரிதாப நிலையை அறியாது அமைச்சர் பந்துல இவ்வாறு அறிவித்திருப்பது ஏற்கமுடியாத கருத்தாகவே உள்ளது. எனவே இந்த நடைமுறையை அவர் உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.

அத்துடன் அனைத்து மக்களுக்கும் எரிபொருளை பெற்றுக் கொடுப்பதற்கான வசதியினை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார்.


மாபியாக்களைக் கண்டுபிடித்துக் கட்டுப்படுத்துங்கள் - கஜேந்திரகுமார் | கஜேந்திரன்

பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் கள்ளச்சந்தை மாபியாக்களின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாதாரண மக்கள் எரிபொருட்களை பெறுவதை அவர்கள் தடுப்பதாகவும் குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்கள்.

அண்மைய சில நாட்களாக மக்கள் எரிபொருளைப் பெறுவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுவருகின்றனர். இந்த நெருக்கடிகளுக்கு கள்ளச்சந்தை மாபியாக்களும் காரணம் என பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையிலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இதன்போது எரிபொருள் நிலையங்களில் நிலவும் பிரச்சனைகளை தீர்த்து, மக்கள் எரிபொருளை பெறுவதை இலகுபடுத்துவதற்காக தங்களால் இயன்றதை செய்வதாக அரசாங்க அதிபர் உறுதியளித்ததாக இந்தச் சந்திப்பின் பின் கருத்து வெளியிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.


கொலனாவையிலிருந்து எரிபொருள் விநியோகம் நிறுத்தம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பிரதான களஞ்சியசாலையான கொலனாவையிலிருந்து எரிபொருள் விநியோகம் செய்யும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் பயன்படுத்துவதற்கான 1100 தொன் பெற்றோல், 7500 தொன் டீசல் கையிருப்பில் இருந்தன. இந்நிலையில் எரிபொருள் வழங்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த நிலையில், எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் எப்போது எரிபொருள் வழங்கப்படும் என்பது குறித்து எந்தத் தகவலும் தெரிவிக்கப்படாமலே விநியோகம் நிறுத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


சரக்கு படகு சேவை ஜூலை 1 ஆம் திகதியிலிருந்து ஆரம்பிக்க அனுமதி

தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்துக்கும் இடையிலான சரக்கு படகு சேவையை ஆரம்பிக்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜூலை 1 ஆம் திகதியிலிருந்து சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தச் சேவையானது இலங்கையர்களுக்கு எரிபொருள், உரம், பால் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள உதவும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் - ஜூலை 01 முதல் 10ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவையிலுள்ளோருக்கு எரிபொருள் வினியோகம்

அரசாங்கத்தின் 2285/04 ஆம் இலக்க 2022.06.20ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு மாத்திரம் ஜூலை 01 முதல் 10ஆம் திகதி வரை எரிபொருள் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று யாழ். மாவட்ட அரச அதிபர் அறிவித்துள்ளார்.

அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அரச, அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் தலைவர்களின் பரிந்துரைகளுக்கு அமைவாக அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு ஜூலை 10ஆம் திகதி வரை குறிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிபொருள் விநியோகிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்களுக்கான எரிபொருள் இந்த நாட்களில் விநியோகிக்கப்படமாட்டாது. அத்துடன், அவ்வாறான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் காத்திருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள். போதுமான எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுமக்கள் எரிபொருளுக்காகப் போராட்டங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)