
posted 16th November 2021

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம் - ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம்
அரச ஊழியர்களுக்கு வரவு செலவு திட்டத்தின் போது சம்பளத்தை அதிகரிக்காமல் விட்டது அரச ஊழியர்களை வறுமையில் கையேந்த வைக்கின்ற செயற்பாடாகும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பத்மநாபா மன்றம் - ஈ.பி.ஆர்.எல்.எப், இரா.துரைரெத்தினம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அரச நிருவாகத்தின் கீழ் கடமையாற்றுகின்ற அனைத்து அரசஊழியர்கள் அனைவரும் 2022ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது சம்பளம் அதிகரிக்கப்படும் தங்களின் வாழ்வாதாரம் உயரும் என எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் அவர்கள் எதிர்பார்பை புறந்தள்ளிய வகையில் அரச சேவையாளர்கள் அனைவரையும் ஏமாற்றிய முறையில் இவ் வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது.
தற்போது நாடு எதிர் நோக்கின்ற சூழ்நிலையில் பொருட்கள் சேவைகளது விலை அதிகரிப்புக் காரணமாக அன்றாட வாழ்வாதாரத் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியாத வகையில் அரச உத்தியோகத்தர் கடும் கஸ்ர நிலையை எதிர்நோக்கியுள்ள கடன் சுமையுடனும், பொருளாதார சிக்கலுக்கு மத்தியிலும் எவ்வித அரச சலுகைகளும் இல்லாமல் அரச சம்பளத்தையே மட்டும் நம்பி வாழ்ந்து வருகின்ற நிலையில் அரசில் கடமை புரிவோர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்த நிலையில் அதனை தவிடு பொடியாக்கிய வகையில் இந்த அரசு வரவு செலவுத் திட்டம் அமைந்துள்ளது. அரசு சம்பளத்தை அதிகரித்து இந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கும் என கூர்ந்து கவனித்த வேளையில்
அரச ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப் படவில்லை என செய்தி கேட்டு பல்லாயிரக்கணக்கான அரச ஊழியர்கள் மனம் உடைந்து மிகவும் வாழ்வாதாரத்தை ஈடு செய்ய முடியாமலும், பெற்ற கடனைக் கூட கட்ட முடியாமல், பொருட்களின் விலை ஏற்றத்திற்கு மத்தியில் செய்வதறியாது வேதனையுடன் உள்ளனர். அரசாங்கத்தின் இந்தப் போக்கு ஆரோக்கியமானதல்ல.
எனவே அரசு வரவு செலவுத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்து இந்த ஆண்டிலேயே குறைநிரப்பு வரவு செலவுத் திட்டத்தின் போது விசேட அனுமதியுடன் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வைப்பதற்கு அமைச்சரவையும், பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்விடயம் பரிசீலனை செய்யப்படாவிடின் இவ் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவதா, இல்லையா என பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஏ.எல்.எம்.சலீம்