பிராந்தியத்தின் ஒத்துழைப்பை விரித்தரைக்கும் ஜனாதிபதி

பிராந்தியத்தின் ஒத்துழைப்பை விரித்தரைக்கும் ஜனாதிபதி

காலநிலை அனர்த்தங்களுக்கு தீர்வுகளை தேடுவதற்கு பிராந்திய மற்றும் சர்வதேச அளவிலான முயற்சிகளுக்கு இலங்கை முழுமையான ஆதரவை வழங்குமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

அதற்காக இலங்கையில் சர்வதேச காலநிலைப் பல்கலைக்கழகம் ஒன்றை அமைக்க தீர்மானித்திருப்பதாகவும், ஆசிய மற்றும் ஆபிரிக்க வலயங்களின் காலநிலை சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான முக்கியமான பணியை அதனால் ஆற்ற முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும், அண்மையில் டுபாயில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச மாநாடான COP 28 இல் ஆசிய வெப்ப வலயத்தை காபன் உமிழ்வு பிரதேசமாக மாற்றுவது தொடர்பிலான இலங்கையின் முன்மொழிவையும் நினைவு கூர்ந்தார்.

கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற தெற்காசிய ஹைட்ரோமெட் மன்றம் 2024இன் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

உலக வங்கி மற்றும் RIMES ஆகியவற்றின் ஒத்துழைப்புடனான ஹைட்ரோமெட் மன்றம், வலயத்தின் ஒத்துழைப்பு, திறனை வலுவூட்டல் மற்றும் மேம்படுத்தல் உள்ளிட்ட நோக்கத்துடன் "வலயத்தின் ஒத்துழைப்பை திறத்தல்" என்ற தொனிப்பொருளின் கீழ் இன்று முதல் பெப்ரவரி 08ஆம் திகதி வரையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆசிய வலயத்தை காபன் உமிழ்வு பிராந்தியமாக மாற்றுவது நிலையான அபிவிருத்தி திட்டங்களில் முதலீடு செய்வதற்கு தனியார் துறையை ஊக்குவிக்கும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், பிராந்தியம் முழுவதிலும் உள்ள வாய்ப்புகளை ஆராய்வதற்காக இந்து சமுத்திர எல்லை நாடுகளின் சங்கமான IORAஇன் செயற்பாடுகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். வெப்பவலயத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான முன்முயற்சிகள் குறித்து அறிக்கையிடுவதற்கு இலங்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய நாடுகளின் நிபுணத்துவ குழுவொன்று நிறுவப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

COVID-19 தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சவால்களை எதிர்கொண்ட போதிலும், இலங்கை காலநிலை அறிவியல் அமைப்புகளை மேம்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். குறிப்பாக தெற்காசியா, காலநிலை மாற்றத்தின் பாதகமான விளைவுகளை எதிர்கொள்வதால், காலநிலை மாற்றத்தின் சவால்களுக்கு தீர்வு காண பிராந்திய ஒத்துழைப்பின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றம் காரணமாக குறைந்த வருமானம் கொண்ட நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2% வரை குறையக்கூடும் என்பதால் பொருளாதார பாதிப்புக்கள் குறித்து கவனம் செலுத்தி அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசரத் தேவையையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் அண்மையில் எதிர்பாராத வகையில் மழைவீழ்ச்சி கிட்டியிருந்தமை தொடர்பில் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, இமயமலையில் பனி மலைகள் உருகும் அபாயம் இலங்கை உட்பட பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளையும் பாதிக்கும் என்றும் கூறினார்.

எஞ்சியுள்ள சவால்களுக்கு ஈடுகொடுப்பதற்கான 'நஷ்டம் மற்றும் சேத இழப்பீட்டுக்கான நிதியத்தை' (The Loss and Damage Fund) ஸ்தாபித்தல் போன்ற நிதியளிப்பு செயன்முறைகள் மற்றும் நிதிப் பாதுகாப்பு தொடர்பான சவால்கள் குறித்தும் கருத்துத் தெரிவித்தார்.

வெப்ப வலையத்தில் காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான முயற்சிகளில் முதலீடு செய்ய விரும்பும் நாடுகளுக்கு கடன் நிவாரணம் உள்ளிட்ட மாற்று வழிகள் குறித்து தேடியறிய வேண்டும் என்றும், வெப்ப வலய நாடுகள் இதற்கான வாய்ப்புகளைப் அறிந்துகொள்வதற்கான நடவடிக்கைகள் அவசியம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான புது வகையான தீர்வுகள் மற்றும் முன்முயற்சிகளுக்கு ஹைட்ரோமெட் மன்றம் வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, காலநிலை அனர்த்தங்களை மட்டுப்படுத்தல் மற்றும் மாற்றியமைக்கும் நோக்கில் தற்போது முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கான யோசனைகள் மற்றும் அறிவாற்றலின் ஊடாக பங்களிப்புக்களை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தெற்காசியா ஹைட்ரோமெட் மன்றத்தின் இணைத் தலைவரும், பூட்டானின் தேசிய நீரியல் மற்றும் வானிலை ஆய்வு மையத்தின் பணிப்பாளருமான கர்மா தப்சு, உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் டினா உமாலி டெயினிங்கர், இலங்கைக்கான ஐக்கிய இராச்சிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக், உலக வங்கியின் தெற்காசிய பிராந்திய ஒருங்கிணைப்புப் பணிப்பாளர் செசில் ப்ரூமன் மற்றும் உலக வானிலை ஆய்வு அமைப்பின் பொதுச் செயலாளர் செலஸ்டெ சாலோ உள்ளிட்டோரும் உள்நாட்டு , வெளிநாட்டு பிரதிநிதிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

பிராந்தியத்தின் ஒத்துழைப்பை விரித்தரைக்கும் ஜனாதிபதி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu - வாரிசு - 25.08.2025

Varisu - வாரிசு - 25.08.2025

Read More
Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More