
posted 5th May 2022
பிரதி சபாநாயகராக இருந்த ரஞ்சித் சியம்பலாபிட்டிய பதவி விலகியதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதால் புதிய பிரதி சபாநாயகர் தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
இதன்போது எதிர்க்கட்சி சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் பெயரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் மீண்டும் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் பெயரும் முன்மொழியப்பட்டன.
இதன்படி 148 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஞ்சித் சியம்பலா பிட்டியவுக்கு ஆதரவாகவும் 65 பேர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர்.
இதன்பேரில் மீண்டும் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவு செய்யப்பட்டார். இத் தெரிவின் மூலம் சிறீலங்கா சுதந்திக் கட்சி உட்பட நடுநிலை வகிப்பதாக கூறிய 11 கட்சிகளின் நாடகம் இதுவெனவும், அரசிலிருந்து விலகிவிட்டதாக கூறிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடகம் இதன் மூலம் அம்பலமாகியுள்ளதாகவும் தற்பொழுது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
மக்கள் இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், இந்த பொய்யர்கள் நாடகக் காரர்களின் நோக்கம் ராஜபக்ஷக்களை காப்பற்ற வேண்டும் என்பதே எனவும், ஏற்கனவே ஏன் இராஜினாமா செய்ய வேண்டும்? ஏன் வாக்கெடுப்பு நடாத்த வேண்டும்? என்பன போன்ற விமர்சனங்களும் தற்பொழுது எழுந்துள்ளன.
இது விடயமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் கருத்து வெளியிடுகையில், சிறி லங்கா சுதந்திக் கட்சி ஆடிய நாடகம் அம்பலத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீட் இந்த பிரதி சபாநாயகர் தெரிவை வரவேற்றுள்ளதுடன் தமது கட்சி சார்பில் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)