
posted 15th July 2022
ஆளுநராக கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவரே நியமிக்கப்பட வேண்டும்
மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரே கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அரசியல் நடப்புகள் தொடர்பாக கல்முனையில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசியபோது இவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;
வட - கிழக்கு மாகாணங்களுக்கு பரசூட்டுகளில் இருந்து ஆளுநர்களை இறக்கி கொண்டிருக்கின்றார்கள். இவ்விதம் இறக்குமதி செய்யப்படுகின்ற ஆளுநர்கள் எதற்கும் அருகதை அற்றவர்களாகவும் உள்ளனர். அந்த அந்த மாகாணங்களை சேர்ந்த பொருத்தமானவர்களே வடக்கு- கிழக்குக்கு ஆளுநர்களாக நியமிக்கப்படவேண்டும். அவர்களுக்குதான் எமது மக்களின் பிரச்னைகள் தெரியும், புரியும். அவற்றை தீர்த்து தர அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷவால் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பதவிகள் உடனடியாக வெறிதாக்கப்பட்டு பொருத்தமான புதியவர்கள் நியமிக்கப்பட வேண்டும். கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் போன்றவர்களுக்கு நிர்வாகம் தெரியாது என்பது இன்னுமொரு விடயம். கிழக்கின் ஆளுநராக இதே மாகாணத்தை சேர்ந்த மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்றார்.
புதிய ஜனாதிபதியாக சஜித் பிறேமதாஸ - லோகநாதன்
சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிறேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்- அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இன்று இலங்கை வரலாற்றில் மிக மிக பொன்னான நாள். மக்கள் போராட்டம் வெற்றி பெற்ற மகத்தான தினம். இம்மகிழ்ச்சியில் நாமும் பங்கேற்கின்றோம். மக்கள் போராட்டத்தின் மூலம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ விரட்டி அடிக்கப்பட்டு உள்ளார். புதிய ஜனாதிபதி, புதிய பிரதமர் ஆகியோர் நியமிக்கப்படுதல் வேண்டும்.
நாம் அடையாளம் கண்ட வகையில் சஜித் பிறேமதாஸ, அனுரகுமார திஸநாயக்க ஆகிய இருவரும் இந்நாட்டை தலைமை ஏற்று நடத்துவதற்கு மிக மிக பொருத்தமானவர்கள்.
சஜித் ஜனாதிபதியாகவும், அனுர பிரதமராகவும் நியமிக்கப்பட வேண்டும் என்று நாம் முன்மொழிகின்றோம். ரணில் விக்கிரமசிங்க உடனடியாக பிரதமர் பதவியில் இருந்து விலகி வழி விட வேண்டும்.
இந்த அரசாங்கத்தை தீர்மானிக்கின்ற சக்திகளாக போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் இருந்து இயங்குதல் வேண்டும். அதே போல் வடகிழக்கிலும் இவ்வாறான மக்கள் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
வடக்கு-கிழக்கு மக்கள் தொடர்ந்தேச்சையாக ஏமாற்றி வருகின்ற குறுகிய சுய இலாப தலைமைகளை விரட்டி அடிக்க வேண்டும். விக்னேஸ்வரனும் ஒன்றுதான், சம்பந்தரும் ஒன்றுதான். எமது மக்கள் புதிய தலைமையின் கீழ் பயணிக்க வேண்டும் என்றார்.
ஊடகத்துறையினர் மீதான தாக்குதலுக்கு ரணிலே பொறுப்பு - லோகநாதன்
ஊடகத்துறையினர் மீதான தாக்குதலுக்கு முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் அகில இலங்கை மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றின் தலைவர் எஸ். லோகநாதன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
ஊடகத்துறையை அடக்குமுறை வேண்டாம் எனவும் தற்போதைய ஜனாதிபதியை ஓட ஓட விரட்டியவர்கள் ஊடகத்துறையினர். மக்களை ஊடகத்துறை தான் வழிநடத்தியது. ஆகவே ஊடகத்துறையை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு எமக்கு உள்ளது. நீங்கள்(பிரதமர்) உடனடியாக பதவி விலக வேண்டும்.
மக்கள் போராட்டத்தில் தாக்குதலுக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கு நீதி நியாயங்கள் கிடைக்க வேண்டும். மிலேட்சத்தனமாக பெண் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்களை இப்போராட்டத்தில் தாக்கும் போது இந்த அரசாங்கம் பார்த்துக்கொண்டு இருந்தது. இதற்கான முழுப்பொறுப்பையும் ரணில் விக்ரமசிங்கவே பொறுப்பேற்க வேண்டும். எனவே ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு விலகி வீடு செல்வதன் ஊடாக உங்களுக்குரிய கௌரவத்தை பாதுகாத்து கொள்ள முடியும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY