
posted 12th July 2022
ஊடக அடக்குமுறைக்கு எதிராக கண்டனம்
இலங்கையில் இடம்பெறும் ஊடக அடக்குமுறைக்கு எதிராக கிழக்கு மாகாணத் தழிழ் ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ். ஜெயராஜா, ஞாயிற்றுக்கிழமை (10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கடந்த 09ஆம் திகதியன்று, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வாஸஸ்தலம் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட சந்தர்ப்பத்தில், மக்களுக்கு தகவல்களை வெளிக் கொண்டுவரும் நோக்கத்துடன் ஊடகவியலாளர்களால் எடுக்கப்பட்ட முயற்சி பொலிஸாராலும் விசேட அதிரடிப் படையினராலும் தடுக்கப்பட்டு, அவர்கள் படுமோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்.
இவை ஊடக சுதந்திரத்துக்கு விடப்பட்ட அச்சுறுத்தல் மட்டுமல்ல, ஊடகவியலாhளர்களை அச்சுறுத்தும் மனித உரிமை மீறலாகவும் நாம் காண்கின்றோம்.
மக்களின் தகவல் அறியும் உரிமைகளைக் கேள்விக் குறியாக்கும் நோக்குடன் சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட இதுபோன்ற மிலேச்சத்தனமான அடக்குமுறையை ஒரு சுயாதீன ஆசிரியர் சங்கம் என்ற வகையில், கிழக்கு மாகாணத் தழிழ் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் நன்றி
புதிய நாடொன்றை நோக்கி மக்கள் அலைகடலாக அணி திரண்டிருப்பது இலங்கை அரசியல்வாதிகளுக்கு மட்டுமல்ல, உலக அரசியலுக்கே ஒரு செய்தியை கூறியிருக்கும் சம்பவமே.
மக்கள் தன் எழுச்சி வெற்றியை நோக்கி நகர்வது மகிழ்ச்சியளிக்கிறது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பைறூஸ் தெரிவித்தார்.
நாட்டின் சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், தொடர்ந்தும் கூறுகையில்;
பொறுமை காத்து அடங்கியிருக்கும் மக்கள் பொறுமையிழந்து வீதிக்கு இறங்கினால் என்ன நடக்கும் என்பதை மக்களை பலியிட நினைக்கும் எல்லோருக்கும் அறிய வைத்துள்ளது.
மக்கள் சுதந்திரமாக சுவாசிப்பதற்கும் கூட இன்று வரிசையில் நிற்கவேண்டிய அவலநிலை இலங்கையில் இருக்கிறது.
ஊழல், அதிகார துஷ்பிரயோகங்கள் காரணமாக சீரழிக்கப்பட்ட வளமிக்க இலங்கை தாய்நாட்டை மீட்க அரசியல் வாதிகளினால் கட்டமைக்கப்பட்ட இனவாத, பிரதேசவாத தடை சுவர்களை உடைத்துக்கொண்டு, இனவாத அரசுக்கு எதிராக கொழும்பு உட்பட முக்கிய இடங்களை முடக்கியிருப்பது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய வரலாற்று திருப்பமாக உள்ளது.
இப்பணியை சிறப்பாக முன்னெடுக்க இரவு பகலாக அரசின் பல்வேறு கெடுபிடிகளுக்கு மத்தியிலும், கஷ்டங்களுக்கு மத்தியிலும் இரண்டு மாதங்களுக்கு மேலாக வீதியில் அமர்ந்திருந்து போராடிய நாளைய தலைவர்களான இளைஞர்கள், தாய்நாட்டை நேசித்த இலங்கையர்கள், மதபோதகர்கள், சமூக அமைப்புக்கள், சமூக ஆர்வலர்கள், ஊடக நண்பர்கள் உட்பட அவர்களுக்கு உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கிய அரசியல் பிரமுகர்கள் எல்லோருக்கும் தாய்நாட்டை நேசிக்கும் இலங்கையனாக என்னுடைய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
மீண்டும் கொரொணா தொற்றல்
தென்மராட்சியின் அல்லாரை, கைதடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் அல்லாரை அறுகம்புலம் மகா கணபதி பிள்ளையார் ஆலயத்தின் தலைவர் என்று தெரியவந்துள்ளது. குறித்த ஆலயத்தில் வருடாந்த திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் இன்று அங்கு தேர்த்திருவிழா நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
இந்நிலையில் இது குறித்து சாவகச்சேரி சுகாதாரத் தரப்பினர் அவசர கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அதில்,
நீண்டகால இடைவெளியின் பின்னர் மீண்டும் எமது பிரதேசங்களில் கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளமை பரிசோதனைகள் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அதன் பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சினால் கடந்த காலங்களில் பரிந்துரைக்கப்பட்டிருந்த சுகாதார வழிமுறைகளை, உங்களது நன்மைகருதி மீளவும் பின்பற்றுமாறு அறுவுறுத்தப்படுகிறது.
வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாடு
யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஏழாவது மாநாடு எதிர்வரும் நாளை மறுதினம் வியாழக் கிழமை (13), முற்பகல் 9.00 மணி முதல் முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
“புதிய இயல்பில் மீள்தன்மைக்காக வணிகத்தை மாற்றுதல்" ( Transforming Business for Resilience in New Normal ) என்ற தொனிப்பொருளில் இடம் பெறவுள்ள இந்த இவ் ஆய்வு மாநாட்டில் ஆஸ்திரேலியாவின் சதேர்ண் குறொஸ் பல்கலைக் கழக (Southern Cross University) தகவல் அமைப்புகள் முறைமைப் பேராசிரியர் தர்சனா செடெராவின் முதன்மை உரை நிகழ்நிலை வாயிலாக இடம்பெறவுள்ளது.
கணக்கியல் மற்றும் நிதி, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகச் சங்கிலி, முயற்சியாண்மையும் புதியன புனைதலும், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், மனிதவள முகாமைத்துவம் மற்றும் நிறுவன கற்கைகள், கற்றல் கலாச்சாரம் மற்றும் சமூகம் ஆகிய 07 உப பிரிவுகளின் கீழ் 43 ஆய்வுக் கட்டுரைகள் இவ் ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
இவற்றுடன், மாணவர்களின் அறிவு மற்றும் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாணவர் ஆய்வு மாநாடும் (Student Research Symposium) ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. அதற்காக 6 ஆய்வு கட்டுரைகளும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
மாநாட்டு நிகழ்வுகளையும், ஆய்வுச் சமர்ப்பணங்களையும் http://www.iccm.maco.jfn.ac.lk என்ற இணையத் தளத்தினூடாக நேரலையாகப் பார்வையிட முடியும்.
இம் மாநாட்டுக்கு எமேரல்ட் பதிப்பகம் (Emerald Publishing) கல்விசார் பங்காளியாகவும், இலங்கை வங்கியாளர்கள் நிறுவனம் ( Institute of Bankers of Sri Lanka ), இலங்கை பட்டய நிதி பகுப்பாய்வாளர் சமூகம் ( CFA Society Sri Lanka ), இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் ( Sri Lanka Institute of Marketing ), பட்டயக் கணக்காளர் நிறுவனம் ( Chartered Accountants of Sri Lanka ), பட்டய சான்றளிக்கப்பட்ட கணக்காளர்கள் சங்கம் ( Association of Chartered Certified Accountants ) ஆகியன தொழில்முறை பங்காளர்களாகவும் அனுசரணை வழங்குகின்றன.
யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை திங்கட்கிழமை (11) ஆரம்பம்
யாழ்ப்பாணத்துக்கும்-கிளிநொச்சிக்கும் இடையே யாழ்ராணி என்ற விசேட ரயில் சேவை நேற்று திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரச பணியாளர்கள் மற்றும் அறிவியல்நகர் யாழ்.பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பணியாளர்களுக்கு வசதியாக இச்சேவையை ரயில் திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பணியாற்றி வருகின்ற யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேந்த அதிகளவான அதிகாரிகள் போக்குவரத்துச் சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் குறித்த ரயில் மாங்குளம் ரயில் நிலையம் வரை சேவையை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ரயில் சேவையை பொறுத்தவரை முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள ஒரேயொரு பிரதான ரயில் நிலையமாக மாங்குளம் ரயில் நிலையம் உள்ள நிலையில் யாழ்.ராணி ரயில் சேவையை மாங்குளம்வரை மேற்கொள்ளாததையிட்டு மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக மாங்குளம் நகரில் இருந்து மல்லாவி ஊடாக வெள்ளாங்குளம் மற்றும் பாண்டியன்குளம் வரையான பகுதிகளின் மக்களும், ஒட்டுசுட்டான் ஊடாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு போன்ற பிரதேசங்களுக்களில் வசிக்கும் முல்லைத்தீவு மாவட்ட மக்களும் சேவை பெறக்கூடிய ஒரே ஒரு ரயில் நிலையம் மாங்குளம் புகையிரத நிலையமாகும். யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பணிக்கு வருகின்ற அதிகாரிகள் மாங்குளம் வந்து அங்கிருந்தே ஏனைய இடங்களுக்கு செல்கின்றனர்.
இவ்வாறான பின்னணியில் ஏன் தற்போது ஆரம்பிக்கப்பட்ட யாழ்ராணி ரயில் சேவையை கொக்காவில் காட்டுப்பகுதியில் உள்ள முறிகண்டி ரயில் நிலையத்தோடு சேவையை நிறுத்துகிறது? அங்கிருந்து ஏனைய இடங்களுக்கு எவ்வாறு பயணத்தை தொடர்வது? அங்கிருந்து வீதிக்கு வரக் கூட போக்குவரத்து வசதி இல்லை இவ்வாறு இருக்க ஏன் இந்த சேவையை மாங்குளம் வரை நடத்த தீர்மானிக்கவில்லை? இதிலும் முல்லைத்தீவு மாவட்டம் புறக்கணிப்பா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்த ஆறு இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் திங்கட்கிழமை (11) தினம் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணம் காரைநகர் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒரு படகையும் அதிலிருந்த 6 இந்திய மீனவர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
கைதான மீனவர்களை மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
தனியார் பேருந்து சேவை நாளை முதல் முடங்கும் அபாயம்
கடந்த நான்கு நாட்களாக பருத்தித்துறை சாலையிலிருந்து தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு டீசல் வழங்கப்படமையால் வடமராட்சி தனியார் பேருந்து சேவை சங்கம் நேற்றைய முன்தினமிருந்து (10) பேரூந்து சேவைகளை குறைத்துள்ளது.
பருத்தித்துறையிலிருந்து 15 நிமிடத்திற்கு ஒரு தடவை இடம் பெற்று வந்த 750 வழித்தடமான யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பேருந்து நேற்று (11) 30 நிமிடத்திற்கு ஒரு சேவையாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் பயணிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்கள், நடத்துனர்கள், சாரதிகள் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே வேளை பருத்தித்துறை சாலைக்கு நேற்றைய தினம் டீசல் தாங்கி மூலம் டீசல் கொண்டுவரப்பட்டு நிரப்பப்பட்டுள்ளது.
டீசல் வழங்க வேண்டாமென மேலிடத்திலிருந்து வந்த உத்தரவிற்க்கு அமையவே தங்களால் தனியார் போக்குவரத்து சேவைக்கு டீசல் வழங்க முடியாத. நிலை ஏற்பட்டுள்ளதாக பருத்தித்துறை சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)