
posted 8th August 2022
திருடர்கள் ஜாக்கிரதை!
சண்டிலிப்பாய் ஐயனார் கோயில் வீதியில் வீடொன்றிலிருந்து 10 பவுண் நகைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டு பணங்கள் என்பன திருடப்பட்டுள்ளன என்று முறையிடப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி பிற்பகல் வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டில் கணவனும் மனைவியும் மட்டும் வசித்து வரும் நிலையில் அவர்கள் இருவரும் வேலைக்குச் சென்ற பின்னர், வீட்டின் பின்பக்க யன்னலை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள், அலுமாரியினுள் வைக்கப்பட்டிருந்த நகைகள் மற்றும் பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வந்த உறவினர்கள் அந்த வீட்டில் தங்கிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள்
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் 100 நாள் செயல்முனைவு கவலையளிப்பதாக வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்;
வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவனாது ‘கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள்குரல் என்ற தொனிப்பொருளில் செயல்படுகின்றது.
நாம் அவர்களை கேட்கிறோம். வட, கிழக்கில் எங்கு கௌரவத்தை பார்க்கமுடியும்? இராணுவமயமாக்கல் மற்றும் சிங்கள உளவாளிகளின் மேலாண்மை, வன்புணர்வு, கொலைகள், கடத்தல்கள், மற்றும் உளவு பார்ப்பதற்காக பணம் பெற்றுக்கொள்ளுதல் இவைகள்தான் உங்கள் கௌரவமா?
அத்துடன், 13ஆவது திருத்தச் சட்டமானது அரசமைப்பு ரீதியாக, அதிகார ரீதியாக பரவலாக்கப்படும் உரிமையை உறுதிப்படுத்துவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
1987இல் தமிழர்களாலும் அவர்களின் அரசியல் தலைவர்களாலும் 13ஆவது திருத்தம் நிராகரிக்கப்பட்டது என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம்.
13வது திருத்தத்தை ஏன் நீங்கள் கோருகிறீர்கள்? இந்த பொருளாதார நெருக்கடியின் போது, 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறு இலங்கையை கட்டாயப்படுத்த இந்தியாவுக்கு வாய்ப்பு இருந்தது. ஆனால், அது செய்யவில்லை.
மேலும், 13வது திருத்தம் ஒற்றையாட்சிக்கு உட்பட்டது. நாங்கள் பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட வட, கிழக்கில் வாழ விரும்புகிறோம். மக்களுக்கு 13ஆவது திருத்தம் பிடிக்குமா அல்லது இறையாண்மை பிடிக்குமா என்று பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களிடம் கேளுங்கள். அதுவே ஜனநாயகம்.
அத்துடன் “நாங்கள் நாட்டை துண்டாடவோ, தனியரசோ கேட்கவில்லை. இலங்கை நாட்டுக்குள் கெளரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்பதாக இந்த ஒருங்கிணைப்பு குழு சொல்கின்றது. இது சம்பந்தன் அல்லது ஜனாதிபதி ரணிலிடம் இருந்து நீங்கள் கட்டளையை பெற்றதுபோல் தெரிகிறது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகார பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் என்றும்அவர்கள் சொல்கிறார்கள்.
நாம் சொல்கிறோம் அதிகாரப் பரவலாக்கம் ஒரு ஜனநாயகம் அல்ல. அதிகாரப் பகிர்வு என்பதும் ஜனநாயகம் அல்ல. நாங்கள் மட்டுமின்றி, ஈழத் தமிழர்கள், அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள், புலம்பெயர் தமிழர்கள் என அனைவரும், பொது வாக்கெடுப்புக்கே அழைப்பு விடுக்கின்றனர்.
தமிழர்கள் எத்தகைய அரசியல் கட்டமைப்பை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்க தமிழர்களை அனுமதிக்குமாறு நாங்கள் கேட்கும் கருவி அதுவே. வாக்கெடுப்பில் தமிழர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் பல விசயங்களை உள்ளடக்களாம் . இந்த முறையே ஜனநாயகம் ஆகும். இருட்டில் இருந்து வெளியே வந்து இது வேண்டும், அது வேண்டும் என்று சொல்லாதீர்கள்.
எனவே, இந்த 100 நாள் செயல் முனைவு குழு வீட்டுக்கு சென்று பொது வாக்கெடுப்பை ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தமிழர்களுக்கு அரசியல் மற்றும் பொருளாதார சுதந்திரம் வேண்டும். இந்த சுதந்திரங்கள் தமிழர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். அதுவரை புலம்பெயர் தமிழ் மக்கள் இங்கு முதலீடு செய்ய மாட்டார்கள்.
பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரம் இல்லாமல் 1983இல் தமிழர்களின் பொருளாதாரத்துக்கு என்ன ஆனது என்பது அனைவருக்கும் நினைவிருக்கிறது.
எனவே, வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு என்ற விடயத்தை பயத்தில் உச்சரிக்காமல், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்பு குழு என்றபெயரை எடுத்துக்கொள்வது ஒரு போலி நாடகம் என்றனர்.
அதிசொகுசு பஸ்களில் அநியாயமாக அறவிடப்படும் கட்டணங்கள்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட பகுதிக்குச் செல்லும் அதேபோன்று அங்கிருந்து கொழும்பு திரும்பும் அதிசொகுசு பஸ்களில் முறையற்ற வகையில் கட்டணங்கள் அறவீடு செய்யப்படுவது வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசாவின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சாதாரண பொதுமக்கள், தமது பயணங்களுக்கான ஆசன முற்பதிவை செய்வதற்கு முயன்றபோது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்துக்கு மேலதிகமாக தொகை கோரப்பட்டுள்ளதாக ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
குறிப்பாக, முற்பகுதியில் இருக்கைகளை ஒதுக்கீடு செய்தல் உள்ளிட்ட சூட்சுமங்களையும் அவர்கள் பயன்படுத்தி கூடிய தொகையை அறிவிடுவதற்கு
முயற்சித்ததோடு, சமகாலத்தில் காணப்படும் வாகனப் பயணங்களின் வீழ்ச்சியையும் பயன்படுத்தி இவ்வாறு எல்லையற்ற வகையில் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசன முற்பதிவு செய்யும் முகவர்களுடன் பயணிகள் மேற்கொண்ட ஒலிப்பதிவுகளும் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலை குறித்த ஆளுநர் கருத்து வெளியிடுகையில்;
வடக்கிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பயணிகள் பஸ்களும் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை அறவிடுமாறு நான் வலியுறுதுகின்றேன்.
மேலும், இவ்விதமாக செயற்படுவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விசேட கரிசனை என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)