பலநாள் கள்ளர்கள் அகப்பட்டனர்

முல்லைத்தீவு மாந்தை கிழக்கில் நீண்ட நாட்களாக இடம்பெற்ற சைக்கிள் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 3 சைக்கிள்கள், 05 தண்ணீர் பம்பிகள் மீட்கப்பட்டுள்ளன.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதா நெருக்கடி காரணமாக சைக்கிளுக்கான விலையும் அதிகரித்துள்ளது.

எரிபொருள் தட்டுப்பாட்டினால் மக்கள் அதிகளவில் சைக்கிள் பாவனையில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் பாடசாலை மாணவர்கள் தொடக்கம் விவசாயிகள் வரையில் சைக்கிளை வாங்கி வருகின்றார்கள். அதிகளவு கேள்வி சைக்கிள்களுக்கு காணப்படுவதால் அவற்றைத் திருடி மாற்றம் செய்து விற்பனை செய்யும் திருடர்களின் செயற்படுகளும் அதிகரித்துள்ளன.

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பொலீஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் சைக்கிள் திருட்டு மற்றும் தண்ணீர்ப் பம்பிகள் திருட்டில் ஈடுபட்டு அவற்றை விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் மளிகைக் கடையில் நின்ற சைக்கிள் ஒன்றைத் திருடி சென்றவேளை பொதுமக்களால் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்ட பின் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

நட்டாங்கண்டல் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ரட்னநாயக்க தலைமையிலான குழுவினர் விசாரணை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் கைது செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் அவருடன் தொடர்புடைய மாந்தை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 03 சைக்கிள்கள் 05 தண்ணீர்ப் பம்பிகள் மீட்கப்பட்டன.

பலநாள் கள்ளர்கள் அகப்பட்டனர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)