பயன்படுத்த வேண்டும்  - ஜனா

கடந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா நான்கு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையினை உதவியாகத் தந்திருந்தது. அப்படியானவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், வடக்கில் சீனர்கள் நடமாடுவதைக் குறைத்துக் கொண்டு, இந்திய முதலீட்டாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் (ஜனா) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பெற்றோலியப் பொருட்கள் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

உண்மையிலேயே என்னுடைய மட்டக்களப்பு மாவட்டம் குறிப்பாக, மீன்பிடி, விவசாயம், கால்நடை போன்றவற்றை கூடுதலாக செய்து அவைகளில் தங்கிவாழும் மாவட்டம். முதலாவதாக அமைச்சர் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். விவசாயத்துக்குத் தேவையான டீசல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் விநியோகிக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. கடந்த போகத்தில் கூட விவசாயிகள் பெருமளவில் நஷ்டமடைந்திருந்தாலும், அந்த அறுவடைக்குத் தேவையான டீசல் கூட சிரமம் இல்லாமல் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

நீண்ட, நெடிய கடல் பரப்பைக் கொண்ட எங்களது மாவட்டத்தில் மீன்பிடிக்கச் செல்லும் எங்களது மீனவர்கள் மண்ணெண்ணை இல்லாத காரணத்தினால் மிகவும் கஷ்ரமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குக் கிடைக்கும் மண்ணெண்ணை கோட்டாவின் அடிப்படையினால் ஒரு வாரத்தில் இரண்டு நாள், அல்லது மூன்று நாட்களுக்கு மேல் தொழிலைச் செய்யமுடியாத நிலையில் இருக்கிறார்கள். அங்கு மண்ணெண்ணை, எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக செய்யக் கூடியதாக இல்லாத நிலையில் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகம், களுவன்கேணி மீன்பிடி சங்கங்களின் ஊடாக விநியோகிக்கப்பட்டாலும் போதுமான அளவு அங்கு விநியோகம் இடம்பெறாமலிருப்பதை அமைச்சர் கவனத்திலெடுத்து சீராக மண்ணெண்ணை விநியோகத்தைச் செய்வதற்கு முயற்சி எடுக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கின்றேன்.

இன்று காலையில் எதிர்க்கட்சித் தலைவர், விவசாயம் சம்பந்தமாக 27 - 2 கீழான பிரேரணையின் மூலமாகச் சுட்டிக் காட்டியிருந்தார். உண்மையில் கடந்த போகங்களில் எங்களது விவசாயிகள் மிகவும் நஷ்டமடைந்த விவசாயிகளாக, அந்த சிறுபோகத்தில் கிடைத்த விளைச்சல்களை கூட நெல் சந்தைப்படுத்தும் சபை பெற்றுக் கொண்டிருந்தாலும் அதற்குரிய பணம் முழுமையாக வழங்கப்படாமலிருக்கும் அதே வேளை, தற்போது மேலதிகமான நெற்களை அவர்கள் கொள்வனவு செய்வதற்கு பணம் இல்லையென்று தயங்குகின்றார்கள்.
ஆனால், விவசாயிகள் தங்களது நெல்லை விற்றால்தான் விவசாயத்தை தங்களினால் செய்ய முடியும்.

கடந்த பாராளுமன்ற அமர்வுகளில் எமது மட்டக்களப்பு அமைச்சர் நசீர் அகமட் உட்பட இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உட்பட விவசாய அமைச்சில் அமைச்சர், அமைச்சின் செயலாளர்கள், மட்டக்களப்பிலிருந்து வருகைதந்த விவசாயிகளுடன் யூரியா விநியோகம் தொடர்பில் பேசியிருந்தோம். அதன்போது 2500 மெற்றிக் தொன் தருவதாக கூறியிருந்தார்கள், ஆனால் விவசாயிகள் 5000 மெற்றிக் தொன் கோரியிருந்தார்கள். இடையில் 4000 மெற்றிக் தொன் உடனடியாக விநியோகிப்பதாக ஒரு உடன்பாடு வந்தது. ஆனால், இதுவரை 1840 மெற்றிக் தொன் மட்டக்களப்பு வந்திருக்கிறது. அதற்குக் கூறும் காரணம் என்னவென்றால் முதல் தடவை பாவிப்பதற்குரிய யூரியா 1943 மெற்றிக் தொன். ஆனால், 1840 மெற்றிக் தொன் தான் இதுவரை கிடைத்திருக்கிறது. 70 வீதம் யூரியாவும், 30 வீதம் சேதனப்பசளையும் வயல்களுக்கு இடவேண்டும் என்று கூறிக் கொண்டிருக்கும் போது அந்த 70 வீதமே மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 9785 மெற்றிக் தொன் தேவையாக இருக்கிறது. ஆனால், காலையில் விவசாய இராஜாங்க அமைச்சர் கூறும் போது ஒருலட்சத்து 20 ஆயிரம் மெற்றிக் தொன் யூரியா நவம்பர் மற்றும் டிசம்பரில் வர இருப்பதாகக் கூறுகின்றார். ஆனால், நான் வேண்டிக் கொள்வது மட்டக்களப்பு, அம்பாரை – கிழக்கு விவசாயிகள் பொலநறுவை, அனுராதபுரம் குருநாகல் விசாயிகளை விட ஒரு மாதம் முன்னதாக விதைப்பைத் தொடங்குவதனால் டிசம்பரில் வர இருக்கும் யூரியா அவர்களுக்குப் பிரயோசனமற்றதாக இருக்கும். எனவே, நவம்பரில் வர இருக்கும் யூரியாவில் தேவையான யூரியாவை மட்டக்களப்பு மாவட்டத்திற்குக் கொடுக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.

அதே வேளையில் சேதனப் பசளையைப் பொறுத்தமட்டில், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தங்களுக்கு சேதனப் பசளை வேண்டாமென்று கூறுகின்றார்கள். தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அதற்குரிய நிவாரணப் பணத்தைக் கொடுப்பனவாக வழங்குமாறு கோருகின்றார்கள். அதேபோல நெற்களுக்கு நாட்டில் விலை நிர்ணயம் செய்யப்படுகின்ற வேளையில் அதற்கான உள்ளீடான யூரியாவுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்பது எங்களுடைய அவா.

அமைச்சர் அவர்கள் கூறும் போதும் கூறியிருந்தார். திருகோணமலையிலிருக்கும் எண்ணைத் தாங்கிகளை ஐந்து வருடத்துக்கு முன்னரே இந்தியாவுக்குக் கொடுத்திருந்தால் இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் எண்ணைத் தட்டுப்பாடு இருந்திருக்காது என்று ஜனாதிபதி அவர்கள் திருகோணமலைக்குச் செல்லும் போதும் கூறியிருந்தார்கள்.

ஆனால், வடக்கில் இந்தியாவுக் கெதிராக சீனர்கள் களம் இறங்கியிருக்கிறார்கள். ஊர்காவற் துறையில் பருத்தித் தீவு என்னும் இடத்தில் சட்ட விரோதமாக கடலட்டைப் பண்ணை சீனர்களால் நடைமுறைப்படுத்தப்படுவதாக வடக்கு மீனவர் சங்கத் தலைவர் கூறியிருக்கின்றார். இது இந்தியாவுக்கு ஆபத்து என்று தமிழ்நாட்டுப் புலனாய்வுத் துறையினர் கூறியிருக்கின்றனர். சீனர்கள் செய்யும் கடலட்டைப் பண்ணைகளுக்கு யாரிடம் அனுமதி பெற்றார்கள். கடந்த வாரம் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தவானந்தா அவர்கள் இந்திய தமிழ் நாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து அங்கு கடலட்டைப் பண்ணைகளைச் செய்ய முதலீடுகளைக் கொண்டு வருவதற்கு பேச்சுவார்த்தைகளை செய்திருந்தார். ஆனால் தற்போது அனுமதியில்லாமல் சீனர்கள் அங்கு நிரம்பி வழிவதாகவும், புதிய புதிய தொழில்நுட்பங்களை அவர்கள் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார்கள். கடந்த பொருளாதார நெருக்கடி நிலையில் இந்தியா நான்கு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையினை உதவியாகத் தந்திருந்தார்கள். அப்படியானவர்களைப் பகைத்துக் கொள்ளாமல், சீனர்கள் அங்கு நடமாடுவதைக் குறைத்துக் கொண்டு, இந்திய முதலீட்டாளர்களை பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

பயன்படுத்த வேண்டும்  - ஜனா

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More