
posted 13th January 2023
கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் ஏற்பாட்டில் கல்விப் பணியில் 33 வருடங்களை நிறைவு செய்து ஓய்வுபெற்ற கல்முனை கல்வி வலைய உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸுக்கான பணிநயப்பு விழா மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அஷரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை கல்வி வலய தமிழ் மொழி ஆசிரிய மையத்தின் தலைவரும் ஆசிரியருமான ஜெஸ்மி எம். மூஸா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் கலந்து சிறப்பித்தார். முதன்மை அதிதிகளாக தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எம். பாஸில் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவானர் எம்.எப். ஹிபத்துல் கரீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கௌரவ அதிதிகளாக நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா, கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ், மட்டக்களப்பு கல்வியற் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் சத்தார் எம். சதாத் ஆகியோருடன் கல்வி அதிகாரிகள், அதிபர், ஆசிரியர்கள் உள்ளீட்ட கல்முனை கல்வி வலய தமிழ்மொழி ஆசிரிய மையத்தின் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு தேசிய கீதம், தமிழ் வாழ்த்துப்பாடல் பாடப்பட்டதுடன் வரவேற்பு நடனமும் இடம்பெற்றது. ஓய்வு பெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் பற்றிய 'தீரா ஆசிரியம்' என்ற நூலும் வெளியிடப்பட்டதுடன் அவருக்கு பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பத்திரம், நினைவுச் சின்னம், பரிசுப் பொதி என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
அத்துடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டன. பலர் பாடல்களையும் பாடி சபையோரை மகிழ்வித்தனர். ஆசிரியர்களான ஏ.ஆர்.எம். புஹாரி, ஏ.எம். றியாஸ் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள்.
இங்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் உரையாற்றுகையில் உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் மிக நீண்ட காலமாக தமிழ் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு மிகவும் கனதியானது.
தமிழ், முஸ்லிம் என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரையும் ஒன்றிணைத்த இந்த விழா எடுத்திருப்பது இவர் தமிழுக்கு ஆற்றிய சேவைக்கான பெறுபேறாகும்.
இவரது ஒய்வு நிலை கல்முனை கல்வி வலயத்திற்கு பெரும் இழப்பாகும். தமிழ் பாடத்தை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கலாநிதி சத்தார் எம்.பிர்தௌஸின் கற்பித்தலை முன்மாதிரியாகக் கொண்டு பின்தொடர வேண்டும். பெற்றோரின் மறைவின் பின்னர் தனது அயராத முயற்சியினால் நான்கு பட்டங்களைப் பெற்றிருப்பது பெரும் சாதனையாகும்.
அது மாத்திரமன்றி தனது உடன் பிறப்புக்களையும் கல்வியின் பக்கம் திருப்பி நல்வழிகாட்டியவர். இன்று இவர் ஓய்வுபெற்றாலும் தமிழ் மொழி வளர்ச்சிக்காக இன்னும் உவகை வேண்டும் என கேட்டக் கொள்கின்றேன் என்றார்.
முதன்மை அதிதியாகக் கலந்து கொண்ட தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் பீடாதிபதி எம்.எம். பாஸில் உரையாற்றுகையில்;
பல்துறைகளை சிலாகித்துப் பேசுகின்ற கிராமம் மருதமுனையாகும். இங்கு தமிழ் மொழி கற்பிப்பதில் புகழ்பூத்த பெருமைக்குரியவர் கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் ஆவார்.
இவரது தமிழ் கற்பித்தல் மிகவும் ஆழமானது. மாணவர்களை இலகுவில் சென்றடையக் கூடியதுமாகும். கலாநிதி சத்தார் எம் பிர்தௌஸ் பல கஷ்டங்களை எதிர்கொண்டு பல பட்டங்களைப் பெற்றவர். இவரது 33வருட பணியென்பது மிகவும் கனதியானது. ஓய்வு பெற்றாலும் தமிழை வளர்க்க இவர் இன்னும் பாடுபட வேண்டும் என்பது எனது அவாவாகும் என்றார்.
முதன்மை அதிதியாகக் கலந்து கொண்ட ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் பதிவாளர் எம்.எப். ஹிபத்துல் கரீம் உரையாற்றுகையில்;
தமிழுக்கு எல்லோரும் சேர்ந்து விழா எடுத்திருப்பது மிகவும் சிறப்பானதாகும். கிழக்கில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் என்பன இவரை விரிவுரையாளராக நியமிக்கமுடியாமல் போனமை இந்த பல்கலைக் கழகங்களுக்கு கிடைத்த துரதிஷ்டமாகும். கலாநிதி சத்தார் எம். பிர்தௌஸ் எதிர்கால சமூகத்திற்காக இன்னும் தமிழ்பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)