
posted 11th November 2022
தீவகப் பகுதிகளில் நீண்டகாலமாக பகல் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, 60 பவுண் நகைகளை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்களும் வேலணை, புங்குடுதீவு, காரைநகர் பகுதிகளில் பகல் வேளைகளில் வீடுடைத்து திருடி வந்தவர்கள் என்று கூறப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் கொட்டடியை சேர்ந்த 20, 22 வயது நபர்கள் என்று அறிய வருகிறது. அத்துடன், அவர்களிடம் இருந்து நகைகளை கொள்வனவு செய்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு சந்கேத்தில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் 16 நீதிமன்ற பிடிவிறாந்துகள் இருக்கின்றன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சந்தேகநபர்கள் வேலணையில் 20 பவுண் நகைகளையும், வேலணை - வங்களாவடியில் ஏழரை பவுண் நகைகளையும், சுருவிலிலில் 13 பவுண் நகைகளையும், முழங்காவிலில் 11 பவுண் நகைகளையும் களவாடியுள்ளனர். அத்துடன், காரைநகரில் வீடு உடைத்து பெறுமதியான பொருட்களை திருடியமையை ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும், களவாடிய நகைகளை விற்று போதைப் பொருட்களை வாங்கினர் என்றும் விசாரணைகளில் தெரியவந்ததாகக் கூறப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)