
posted 21st February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
“இலங்கையின் முக்கிய விவசாய மாவட்டமான அம்பாறை மாவட்டம் உட்பட மேலும் சில பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில் நெல்லின் உத்தரவாத விலையை ஒரு கிலோ 150 ரூபாவாக உயர்த்த வேண்டும்.”
இவ்வாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தைக் கோரும் தீர்மானம் ஒன்று சம்மாந்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபையின் 59 ஆவது மாதாந்த சபை அமர்வு சபையின் புதிய தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் தலைமையில் திங்கட் கிழமை (21) நடைபெற்றது.
இதன்போதே தற்சமயம் நூறு ரூபாவாக நிர்ணயிக்கப்பப்பட்டுள்ள ஒரு கிலோ நெல்லின் விலையை பாமர விவசாயிகளின் நலன் கருதியும், நஷ்டத்திலிருந்து அவர்களைக் கை தூக்கிவிடும் வகையிலும், உடனடியாக ஒரு கிலோ 150 ரூபாவாக உயர்த்த வேண்டுமென வலியுறுத்தும் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேற்படி தீர்மானம் தொடர்பான பிரேரணையை உப தவிசாளர் ஏ. அச்சி முகம்மது சபையில் முன்மொழிந்து உரையாற்றுகையில்,
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள் இன்று தமது கடின உழைப்பின் மூலம் உற்பத்தி செய்யும் நெல்லுக்கு உரிய நியாயமான விலை நிர்ணயமின்மையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் நெல் விவசாயச் செய்கைக்கென பெரும் முதலீடுகளைச் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதுடன், பன் மடங்கு கூடிய விலையில் விவசாயச் செய்கைக்கான உரம், கிருமி நாசினிகள், மற்றும் களை நாசினிகளைப் பெற்றும், விதைப்பு மற்றும் நாசினிகளைப் பெற்றும், விதைப்பு மற்றும் அறுவடைக்கூலிகள் உயர்ந்த நிலையிலும் செய்கை மேற்கொள்கின்றனர்.
ஆனால் நெல்லுக்கு உத்தரவாத விலை போதுமானதாக இல்லாததால் தாக்குப்பிடிக்க முடியாத கஷ்ட நிலைக்கு அவர்கள் உள்ளாகியுள்ளனர்.
எனவே குறைந்தது ஒரு கிலோ நெல்லை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்யவென அரசாங்கம் உத்தரவாத விலையை உயர்ந்த வேண்டும்” என்றார்.
தவிசாளர் மாஹிர் உரையாற்றுகையில்,
அம்பாறை மாவட்டத்தில் நமது சம்மாந்துறைப் பிரதேச மக்களின் முக்கிய தொழிலாக விவசாயமே உள்ள போதிலும் தற்போதய நிலையில், பல்வேறு நெருக்கடிகளையும், விலை உயர்வுகளையும் அனுபவித்தே விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் உற்பத்தி நெல்லின் விலை வீழ்ச்சி காரணமாக இன்று விவசாயிகள் விரக்தி நிலைக்கு உட்பட்டுள்ளதுடன், பெரும் பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டுள்ளனர். எனவே நெல்லின் உத்தரவாத விலை அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகும்” என்றார்.
உறுப்பினர் ஏ.எல்.எம்.ஜிப்ரி பிரேரணை மீது உரையாற்றுகையில்,
தற்சமயம் வழமை போன்ற விளைச்சலைக் கூடப் பெறமுடியாது விவசாயிகள் திண்டாட்ட நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
ஒரு ஏக்கருக்கு 40 தொடக்கம் 50 மூடைகள் வரை முன்னர் நெல்விளைச்சல் கிடைத்த போதும் தற்சமயம் பெரும்போக அறுவடையில் ஒரு ஏக்கருக்கு 25 அல்லது 30 மூடைகளுக்குள்ளேயே நெல்விளைச்சல் கிடைப்பதாகவுள்ளது.
எனவே நெல்லின் உத்தரவாத விலை உடனடியாக அதிகரிக்கப்பட ஜனாதிபதி மற்றும் விவசாய அமைச்சு ஆவன செய்ய வேண்டும்” என்றார்.
உறுப்பினர்களான எஸ். நளீம், ஏ. யூசுப்லெப்பை உட்பட மேலும் சில உறுப்பினர்களும் பிரேரணை மீது உரையாற்றியதைத் தொடர்ந்து,
நெல்லின் உத்தரவாத விலையை ஒரு கிலோ 150 ரூபாவாக உயர்த்த வேண்டுமென்ற கோரிக்கைத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)