
posted 17th May 2022
சாய்ந்தமருது பிரதேசத்தில் சகிக்க முடியாதளவு வீசும் துர்வாடையானது விலங்கறுமனையில் இருந்து வெளிவருவதற்கான காரணிகள் தென்படவில்லை என களப்பரிசோதனை மேற்கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். எவ்வாறாயினும் இத்துர்வாடைக்கு அந்த விலங்கறுமனைதான் காரணம் என்று நிரூபிக்கப்பட்டால், அது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்கு ஒருபோதும் பின்நிற்க மாட்டேன் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது;
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக இரவு வேளைகளில் மிக மோசமான துர்வாடை வீசி வருவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளைத் தொடர்ந்து, கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் நானும் சந்தித்து, இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்திருந்தோம். இதன்போது முதலில் துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு, தனக்கு அறியத்தருமாறும் அதன் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை தாம் முன்னெடுப்பதாகவும் அவரிடம் வலியுறுத்தியிருந்தேன்.
இந்நிலையில், சுகாதாரத்துறையினர் சாய்ந்தமருது பொலிவேரியன் வீட்டுத்திட்டத்திற்கப்பால் அமைந்துள்ள விலங்கறுமனையை பகல் வேலைகளிலும் இரவு வேளைகளிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் திடீர் விஜயம் மேற்கொண்டு, பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தனர். இதன்போது குறித்த துர்வாடை வீசுவதற்கான வாய்ப்புகள், காரணங்கள் எவையும் விலங்கறுமனையிலோ அதன் சுற்றுச் சூழலிலோ கண்டறியப்படவில்லை என்பதாக குறித்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறாயின் இத்துர்நாற்றம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதற்காக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின்போது கல்முனையை நோக்கி செல்லும் வண்ட் வீதி என்றழைக்கப்படுகின்ற குளக்கரை பாதையோரமாக நீர்நிலைகளில் மாட்டுக்கழிவுகளும் கோழிக்கழிவுகளும் இதர கழிவுகளும் மூடை மூடையாக போடப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டிருக்கிறது.
குறிப்பாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை மற்றும் கிரீன் பீல்ட் வீட்டுத்திட்டம் என்பவற்றை அண்மித்துள்ள வண்ட் வீதியின் ஒரு பகுதியிலுள்ள நீர்நிலையினுள் நூற்றுக்கணக்கான மூடைகளில் ஆடு, மாடு மற்றும் கோழிக்கழிவுகள் காணப்பட்டிருந்தன. இரவு நேரங்களில் எழுகின்ற துர்வாடைக்கு இவைதான் காரணமாக இருக்கலாம் என்று சுகாதாரத்துறையினரால் ஊகிக்கப்படுகிறது. இதையடுத்து, மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் பிரிவினரால் கனரக வாகனங்களின் உதவியுடன் முடியுமானளவு கழிவுகள் மீட்கப்பட்டு, அகற்றப்பட்டுள்ளன. இங்கு இன்னும் ஆழமான பகுதியில் இவ்வாறான கழிவுகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இவற்றையும் ஏனைய குளக்கரை பகுதிகளிலும் இவ்வாறான கழிவுகள் இருக்குமாயின் அவற்றையும் அகற்றுவதற்கு மாநகர சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
விடயம் இவ்வாறிருக்க சிலர் முகநூல்களில் இத்துர்வாடையானது மேற்படி விலங்கறுமனையில் இருந்துதான் வெளிப்படுகிறது எனவும் இதனை மாநகர சபை கண்டுகொள்ளவில்லை எனவும் மாநகர முதல்வராகிய நான் விலங்கறுமனை உரிமையாளரிடம் இலஞ்சம் பெற்றுக்கொண்டு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனமாக இருப்பதாகவும் அபாண்டங்களை சுமத்தியுள்ளனர்.
இத்துர்வாடை விலங்கறுமனையில் இருந்து வெளிவரவில்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் களப்பரிசோதனை செய்து, உறுதிப்படுத்தியிருக்கின்றபோது காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர் என் மீது வேண்டுமென்றே சேறு பூசுவதற்காக வதந்திகளைக் கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். சரி- நாற்றம் இங்கிருந்துதான் வருகிறதோ இல்லையோ- இவர்கள் கூறுவது போன்று விலங்கறுமனையை பூட்டி விடுவது பெரிய காரியமல்ல. ஆனால் மாட்டிறைச்சியை எமது மக்கள் நுகர முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படும் என்பதை சம்மந்தப்பட்டோர் புரிந்து கொள்ள வேண்டும்.
சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் ஏற்கனவே அமையப்பெற்றிருந்த விலங்கறுமனை குடியிருப்புப்பகுதியை அண்மித்திருந்தமையினால், பொது மக்களுக்கு ஏற்பட்ட அசௌகரியம் காரணமாகவே அது அங்கிருந்து அகற்றப்பட்டது. பின்னர் விலங்கறுமனையொன்றின் அவசியம் கருதி ஊரில் இருந்து வெகு தொலைவில் கரைவாகு வயல் பகுதியொன்றில் அதனை அமைப்பதற்கு கல்முனை மாநகர சபையினால் 2009/2010 காலப்பகுதியில் தனியார் நிறுவனமொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அது சுமார் 13 வருடங்களாக அவ்விடத்தில் இயங்கி வருகிறது. ஆனால் அண்மைக்காலமாக மக்களை விசனப்படுத்துமளவுக்கு சாய்ந்தமருது பிரதேசமெங்கும் வீசி வருகின்ற பெரும் துர்நாற்றம் முன்னொருபோதும் ஏற்பட்டதாக அறியக்கிடைக்கவில்லை.
குறித்த விலங்கறுமனையில் இருந்துதான் அந்த நாற்றம் வருகிறது என்று நிரூபிக்கப்பட்டால், அந்த விலங்கறுமனை தொடர்பில் மிகவும் இறுக்கமான நடவடிக்கைகளை எடுக்க தயாராகவே இருக்கிறேன். மேலும், பொது மக்கள் கோரிக்கை விடுத்தால் இதனைப் பூட்டி விடுவதற்கும் எம்மால் நடவடிக்கை எடுக்க முடியும். எதைச் செய்வதானாலும் பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். குறித்த நீர்நிலைகளில் இவ்வாறான கழிவுகளைக் கொட்டுகின்ற ஈனப்பிறவிகள் கண்டறியப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்- அவர்களை அடையாளப்படுத்துவதற்கு பொது மக்கள் முன்வர வேண்டும் என்று நாம் அடிக்கடி வலியுறுத்தி வருகிறோம். அரசியல் காரணங்களுக்காக எம்மீது சேறு பூசுவதை விடுத்து, நேர்மையுடன் அறிவுபூர்வமாகவும் யதார்த்தபூர்வமாகவும் சிந்தித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அனைவரும் முன்வர என்று அன்பாய் அழைக்கின்றேன் என மேலும் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)
For Holiday Bookings click the preferred section
Home Page
Home Page
Apartments Appartments
Resorts
Resorts
Villas
Villas
B & B
B&B
Guest Houses
Guests House