நிந்தவூரில் பொலிஸார் நடவடிக்கை

நிந்தவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான திருட்டு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை ஒழித்துக் கட்டுவதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிந்தவூர்ப் பகுதியில் குறிப்பாக அரசடித் தோட்டம், அட்டபள்ளம் போன்ற பிரதேசங்களில் இடம்பெற்றுவரும் திருட்டு மற்றும் சட்டவிரோத சம்பவங்கள் தொடர்பில் நிந்தவூர்பொலிஸாருக்கு பொது மக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துவருகின்றன.

இதனையடுத்து நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீம் மேற்படி குற்றச் செயல்களை ஒழித்துக்கட்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.

பொறுப்பதிகாரி நஜீமின் நெறிப்படுத்தலில், பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி டி.ஆர்.எல்.ஏ. குணவர்த்தன (எஸ்.ஐ.) பொலிஸ் சார்ஜன்களான அமீர், றியாம், சங்கர், மோகன்லால் ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர கண்காணிப்பிலும், நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்படி நிந்தவூர் பொலிஸ் குழுவினரின் நடவடிக்கை காரணமாக நிந்தவூர்ப் பகுதியில் திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றுடன், செல்போன்கள், ஹெல்மட் என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்றைச் சேர்ந்த மூன்று பேரும், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இருவரும், நிந்தவூரைச் சேர்ந்த ஒருவருமாக ஆறு சந்தேக நபர்கள் திருட்டு சம்பங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் பொலிஸாரால் நீதி மன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலிலும் வைக்கப்பட்டுள்ளனர்.

நிந்தவூர்ப் பிரதேசத்தில் இடம்பெற்றுவரும் திருட்டு மற்றும் சட்ட விரேத செயற்பாடுகளை ஒழித்துக்கட்டுவதில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம்.எம். நஜீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் எடுத்துவரும் நடவடிக்கைகளைப் பொது மக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

நிந்தவூரில் பொலிஸார் நடவடிக்கை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)