நிதிக்காக அல்ல நீதிக்காக போராடுகின்றோம் -மனுவல் உதயச்சந்திரா

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளுக்காக நாங்கள் இரண்டாயிரம் நாட்களாக போராடிக் கொண்டு இருக்கின்றோம் என்றால் நிதிக்காக அல்ல. மாறாக எமது உறவுகள் குறித்து உண்மையும், நீதியும் எமக்கு தேவை. என்பதாகும். ஆணைக்குழுக்கள் பல எம்மிடம் விசாரணைகள் முன்னெடுத்தபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. அதனால்தான் சர்வதேச விசாரணை வேண்டும் என வலியுறுத்துகின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி திருமதி மனுவல் உதயச்சந்திரா புதன்கிழமை (07.09.2022) ஊடகச் சந்திப்பின்போது மேலும் தெரிவிக்கையில்;

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகள் தொடர்பாக சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும் என கோரி நாங்கள் கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சர்வதேசத்திடம் கோரி வருகிறோம்.

இலங்கை அரசில் எவ்வித நம்பிக்கையும் எமக்கு இல்லாத நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச விசாரணையே தேவை என்ற கோரிக்கையை நாங்கள் முன் வைத்தோம்.

ஆனால் 13 வருடங்களாகியும் எமது கோரிக்கை நிறைவேறவில்லை. எமது கோரிக்கை நிறைவேறும் நிலையில் இலங்கையில் இருந்து ஜெனிவா செல்கின்ற அமைச்சர்களும், அரசு சார்பாக செல்கின்றவர்களும் சர்வதேச விசாரணை தேவையில்லை. உள்நாட்டு விசாரணை வேண்டும் என்று கூறுகின்றனர்.

எதிர்வரும் 51 வது ஜெனிவா கூட்டத் தொடரில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

குறித்த கூட்டத் தொடரில் கலந்து கொள்ள உள்ள இலங்கையின் வெளி விவகார அமைச்சர் இலங்கையின் உள்நாட்டு விசாரணை போதும் என வலியுறுத்த உள்ளார். எனினும் உள்நாட்டு விசாரணையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

எத்தனையோ ஆணைக்குழுக்கள் இங்கே வந்து விசாரணைகளை முன்னெடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. அவர்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இவ்வாறான நிலையில் நாங்கள் சர்வதேச விசாரணையையே வலியுறுத்தி நிற்கின்றோம்.

ஜெனிவா கூட்டத் தொடரின் போது இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் தொடர்பில் தீர்க்கமான முடிவு எடுக்கப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்து நிற்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காக நாங்கள் சுமார் இரண்டாயிரம் நாட்களுக்கு மேல் வீதியில் நின்று போராடி வருகிறோம். நீதிக்காகவே நாங்கள் போராடி வருகிறோம். ஆனால் நிதிக்காக போராடவில்லை. எமது உறவுகள் குறித்து உண்மையும், நீதியும் எமக்கு தேவை. தற்போதைய வெளிவிவகார அமைச்சராக உள்ள அலி சப்ரி, நீதி அமைச்சராக இருந்த காலத்தில் ஒவ்வொரு மாவட்டமாக சென்று நிதிக்காக எங்களுடன் கலந்துரையாடினார்.

அவர் நீதிக்காக ஒருபோதும் எங்களுடன் கலந்துரையாடவில்லை. இலங்கையில் உள்நாட்டு விசாரணை போதும் என்று கூற அவருக்கு எவ்வித அருகதையும் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள். நாங்கள்தான் எங்களுக்கு சர்வதேச விசாரணை மடடுமே வேண்டும் என்று நிற்கின்றோம்

தற்போதைய ஜனாதிபதி நல்லாட்சி அரசில் இருந்தார். அப்போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் நல்லதொரு முடிவை தருவதாக கூறி இருந்தார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. தற்போது அவர் ஜனாதிபதியாக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறான சூழ்நிலையில் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தாய்மாரும், உறவும் சர்வதேச விசாரணை மட்டுமே எமக்கு வேண்டும் என்ற கோரிக்கையில் உள்ளனர் என மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

நிதிக்காக அல்ல நீதிக்காக போராடுகின்றோம் -மனுவல் உதயச்சந்திரா

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Mahanadhi - மகாநதி - 22.08.2025

Read More
Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More