
posted 4th July 2024
உறவுகளின் துயர் பகிர்வு
நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாத்த தமிழ் தலைவர் சம்பந்தன்
தமிழ் தேசிய அரசியலை பல்வேறு வகையான கெடுபிடிகளுக்குள்ளிருந்து பாதுகாத்து தனது மக்களின் பிரச்சினைகளை சர்வதேசமயப்படுத்திய மிகச்சிறந்த நல்லிணக்க எண்ணம் கொண்ட மூத்த அரசியல்வாதியும், தமிழ் தலைவருமான திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் ஐயா அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொருளாளரும் முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான ஐ.ஏ. கலீலுர் ரஹ்மான் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்,
அதில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது;
சிறுபான்மைச் சமூகங்களை சமபார்வையுடன் நோக்கிய சம்பந்தன் ஐயா நீண்ட அரசியல் வரலாற்றை கொண்ட மூத்த தலைவர் என்பதையும் தாண்டி நாட்டுப்பற்றும் இனப்பற்றும் சமனாக கொண்ட அரசியலில் முதிர்ச்சியடைந்த தலைவராக விளங்கியவர். நாடும், நாட்டு மக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கிய உள்நாட்டு யுத்த காலத்திலும் ஜனநாயகத்தின் மீது அவருக்கிருந்த நம்பிக்கையால், எவற்றுக்கும் சோரம் போகாமல், விலைபோகாமல் இருந்த ஒரு ஜனநாயகவாதி அவர்.
தொண்ணூறு வயதைக் கடந்திருந்தாலும் தமது மக்களுக்கான தீர்வைப் பெற வேண்டும் என்ற திடகாத்திரம் அவருக்கிருந்தது. சிறுபான்மைச் சமூகங்களை, சம பார்வையில் நோக்கிய இவரின் இழப்பு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பேரிழப்பாகும். சமூக நல்லிணக்கத்தை விரும்பிய அவர் முஸ்லிம் தலைமைகளுடன் நல்லுறவைப் பேணி வந்தார். இன்று வரைக்கும் தீர்க்கப்படாதுள்ள தமிழ், முஸ்லிம் அபிப்பிராய பேதங்களைப் போக்குவதற்கு சம்பந்தன் போன்ற நல்லிணக்க தலைமைகளே இலங்கைக்கு அவசியம் என்பதை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.
அன்னாரின் இழப்பால் துயருறும் சகலருக்கும் எனது ஆறுதல்களை தெரிவித்து கொள்கிறேன்.
எமது தேனாரம் செய்திகளை எமது youtube channelலிலும் பாருங்கள் - நன்றி

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)