
posted 15th May 2022
நாட்டின் பிரச்சனைகள் நாலாம் - ஆய்ந்து சொல்ல குளுக்களாம்
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆராய்ந்து யோசனைகளை முன்வைக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க நான்கு குழுக்களை நியமித்துள்ளார்.
அத்தியாவசிய உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்காக வஜிர அபேவர்த்தன மற்றும் பாலித ரங்கே பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மருந்து தட்டுப்பாடு தொடர்பில் ஆராய்வதற்காக ருவான் விஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.
உரப் பிரச்னை தொடர்பில் ஆராய்வதற்காக அகில விராஜ் காரியவசம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சாகல காரியவசம் எரிபொருள் பிரச்சனை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுக்கள் குறித்த தரப்பினருடன் கலந்துரையாடி பிரச்னைகளை தீர்ப்பதற்காக யோசனைகளை முன்வைக்கவுள்ளனர் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கூறினார்.
அக்காவின் தாலியை அறுக்க வந்தானே எமனாய் மச்சான்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் ஆண் ஒருவரது உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக கடந்த (10) திகதி சந்தேகத்தின் பெயரில் குறித்த இடத்தினை மருதங்கேணி போலீசார் தமது கட்டுப்பாட்டிற்க்குள் கொண்டுவந்து நீதி மன்ற உத்தரவை பெற்று குறித்த இடத்தை தோண்டுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு மறுநாள் 11ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஸ்மையில் ஜெமில் தலைமையில் சடலம் மீட்கப்பட்டது.
இதில் இராசன் சிவஞானம் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தை சடலமாக காணப்பட்டிருந்தார். குறித்த நபர் விடுதலைப் புலிகளின் சிறைக்கைதிகளுக்கான பொறுப்பாளராக கடமையாற்றியவர் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
12ஆம் திகதி கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளி சட்டத்தரணி ஒருவருடன் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.
இவர் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பின் 14நாள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது குடும்ப தகராறு காரணமாக இடம் பெற்றதென கைதானவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கைதானவர் கொலை செய்யப்பட்டவரின் மனைவியின் தம்பி எனவும் தெரிவித்திருக்கின்றனர்.
கட்டைப்பிராயில் பவுணும், உரும்பிராயில் கலப்பையும் திருட்டு
யாழ். கல்வியங்காடு கட்டைப்பிராய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்த கொள்ளை கும்பல் அங்கிருந்த வயோதிபப் பெண்ணின் 2 பவுண் தங்கச் சங்கிலியை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவமானது நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, யாழ். உரும்பிராய் – கிருஷ்ணன் பகுதியில் அமைந்துள்ள கமநல சேவைகள் திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் கலப்பையை திருடர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
உழவுத் தேவைக்காக கமநல திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்த கலப்பையே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
வாஸ் கூஞ்ஞ
எனக்கோ தந்தைக்கோ நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணம் இல்லை நாமல்
கடந்த திங்கட்கிழமை (09.05.2022) இடம்பெற்ற துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை வழங்குவேன்.
எனது தந்தைக்கோ, எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் அறவே இல்லை.
அனைத்து பொய் குற்றச்சாட்டுக்களையும் நேர்மையாக நாம் சந்திக்கத் தயார் என முன்னாள் அமைச்சரும், முன்னாள் பிரதமரின் மகனுமாகிய நாமல் ராஜபக்ச இவ்வாறு தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விக்கிரமசிங்க அரசை ஆதரிக்கும் விக்னேஸ்வரன்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவளிக்க தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தீர்மானித்துள்ளார்.
"எமது கட்சியில் நான் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிக்கின்றேன். இந்நிலையில், நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளேன்" - என்று விக்னேஸ்வரன் ஊடகங்களிடம் தெரிவித்தார். வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான விக்னேஸ்வரன் எம்.பி., ரணில் அரசின் அமைச்சரவையில் இடம்பெறுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நகைத் திருடர் கைது, திருட்டில் பெண்ணும் சேர்ந்து
மானிப்பாயில் வீடுடைத்து 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்த திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவிய குற்றச்சாட்டில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மே 4ஆம் திகதி மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட சண்டிலிப்பாய் தொட்டிலடியில் உள்ள வீடொன்றில் அங்கு வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை வீடுடைத்து 30 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டிருந்தன.
அதுதொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சம்பவ தினத்தன்று திருட்டு இடம்பெற்ற வீட்டுக்கு அண்மையாக உள்ள பகுதிகளில் பெறப்பட்ட சிசிரிவி காணொளிப் பதிவுகளின் அடிப்படையில் தெல்லிப்பழை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் திருட்டு நகைகளை விற்பனை செய்ய உதவினார் என்ற குற்றச்சாட்டில் கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்களிடமிருந்து திருட்டு நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் மூவரையும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உள்படுத்துவதற்காக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
நெஞ்சில் நிறுத்தவேண்டிய இனவழிப்பு
முள்ளிவாய்க்கால் இனவழிப்பை நெஞ்சில் நிறுத்தி நினைவேந்துவோம். வலி சுமந்தோர் வாழ்வில் ஒளியேற்றுவோம் என்று ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தொடர்பாக விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், “மரபுவழியான தமிழர் தாயகப் பிரதேசங்களில் எமது வாழ்வியல், வரலாறு மற்றும் பண்பாடுகள் மீதான புற வல்லாதிக்கத்தை நாம் பல தசாப்தங்களாக அனுபவித்து வந்திருக்கின்றோம்.
இந்த நிலையில் உலக ஒழுங்கியலுக்கு ஏற்றவாறான, நியாயமான எமது சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை பல்வேறு தளங்களில், வடிவங்களில் முன்னகர்த்தி ஈழத் தமிழர்களாகிய நாம் இன்றுவரை போராடிய வண்ணம் இருக்கின்றோம். எமது தீர்க்கமான, நியாயமான போராட்ட இலக்குகளை சர்வதேசமும், அதன் பல்தேசிய அமைப்புக்கள் பலவும் அங்கீகரித்து வந்திருக்கின்றன, வருகின்றன.
எனினும், உலகின் சில சர்வதேச, பிராந்திய வல்லரசுகள் பேரினவாத அரசுடன் கரங்கோர்த்து, தத்தமது சுய அரசியல் இலாபங்களுக்காக, உலக நீதியின் ஒழுக்கிற்கு வெளியேநின்று எமது ஆயுதப்போரை இரும்புக் கரங்கொண்டு நசுக்கி மௌனிக்கச் செய்தமை உலகறிந்த உண்மை. "சமாதானத்துக்கான போர்" என்ற பெயரில் ஒரு மிலேச்சத்தனம் அரங்கேறி தாண்டவமாடியது.
2009இன் இதேபோன்றதொரு வாரத்தில் முடித்து வைக்கப்பட்ட இக்கோரத்தனத்துக்கு இரையாக, எமது இனத்தின் ஒரு பகுதியினர் கொத்துக் கொத்தாக கொன்றழிக்கப்பட்டனர். தாய், தந்தையரை, கணவனை, மனைவியை, பிள்ளைகளை பலிகொடுத்த பல்லாயிரம் குடும்பங்கள் உள்ளன. அங்கங்கங்களை இழந்து ஆயிரமாயிரம்பேர் நிர்க்கதியாக்கப்பட்டனர்.
இனவழிப்பு நிலத்தின் பட்டினியும், பயமும், உளவியல் தாக்கமும் தமிழினத்தின் அடுத்த சந்ததியின் அத்திவாரக் கற்களையும் அசைத்துச் சென்ற கொடூரத்தை, மிகப்பெரிய மனித அவலத்தை இன்றுவரை சர்வதேசம் மறந்திருக்க வாய்ப்பில்லை.
ஆசாபாசங்களைத் துறந்து எமக்காகவும், எமது சந்ததிக்காகவும், எமது உரிமைக்காகவும், எமது சுய கௌரவத்திற்காகவும் இந்த தாங்கவொண்ணா வலிகளைச் சுமந்தவர் எங்கள் கண்முன்னே கரமிழந்து நிற்கின்றனர். எமது மக்கள் பட்டினியின் வாயில் படாதபாடுபடுகின்றனர். எமது சமுதாயத்தின் இந்த இருள் நிலையை நாம் இலகுவில் கடந்துசென்றுவிட முடியாது. கண்முன்னே பற்றி எரிந்துகொண்டிருக்கும் அவர்களின் அரும்பொட்டான வாழ்வை கண்டும் காணாது இருந்துவிட முடியாது. எனவே எமது மக்களின் வாழ்வாதாரங்களை கட்டமைப்பது எமது அவசரமும் அவசியமுமான காலக் கடமையாகும். எமது இனத்தின் போர்க்கால வடுக்களை ஆற்றும் மூலத்தேவைகளில் ஒன்றான இக் கைங்கரியத்தை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பாகிய நாம் இயலுமானவரை செய்ய விளைகின்றோம். இந்த மனிதாபிமானம் மிக்க பணியில் இணைந்துகொள்ள அர்ப்பணிப்புள்ள யாவரையும் இரு கரம் நீட்டி அழைக்கின்றோம்.
எமது மனித உரிமையின் மீது விழுந்த மிகப்பெரிய காயத்தை உலகம் மெல்ல மெல்ல மறந்து சென்றாலும் நாம் அதனை மறந்துவிட முடியாது. அந்தத் தழும்பின் அத்தனை வேதனைகளையும் அடுத்த சந்ததிக்கு கற்பிதங்களாக உணர்த்துதல் எமது வரலாற்றுக் கடமையாகும். அதுமட்டுமன்றி எமது வரலாற்றுத் துயரங்களை அடையாளப்படுத்தி அனுட்டித்தல் எமது மனித உரிமையுமாகும்.
எனவே எமது மக்களின் உயிர்களின் கொதிநிலையை அடையாளப்படுத்தும் இந்தப் புனிதமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் எமது பண்பாட்டின் வழியே ஆலயங்களிலும், வீடுகளிலும் விளக்கேற்றி, அந்த அழிக்கப்பட்ட ஆத்மாக்களை ஒரு கணம் நினைவதோடு அன்று எம்மவர் அனுபவித்த பசிப்பிணியை எடுத்து இயம்பும் முள்ளிவாய்க்கால் கஞ்சியை காய்ச்சி அனைவருக்கும் வழங்கி ஒரு நாளேனும் ஒரு பொழுதேனும் அதனை மட்டும் உணவாகக் கொள்வோம்.
அதே நேரம் போரின் கோர வடுக்களை சுமந்து நலிவுற்ற எம் மக்களுக்கு எம்மாலான அறப்பணியை நாமும் செய்து அனைவரையும் தூண்ட இந்த நினைவழியா நாட்களான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் உறுதியேற்க வேண்டி நிற்கின்றோம் என்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY