
posted 25th November 2021
வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய கால நிலை கடந்த சில தினங்களாக நீடித்து வருகின்றது.
குறிப்பாக தொடரும் பெருமழை காரணமாக வடக்கு, கிழக்கில் ஆறுகள், குளங்சகள் நிரம்பி வழியத்தொடங்கியுள்ளதுடன், மலையகப்பகுதிகளில் மண் சரிவு அபாய எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த சீரற்ற கால நிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்கக் கூடிய சாத்திய நிலையுள்ளதாகத் தெரிவிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இரவு பகலாகப் பெருமழை பெய்து வருகின்றது.
இதனால் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ளுர் வீதிகள் வெள்ளக்காடாகக் காட்சியளிப்பதுடன், தாழ்ந்த பிரதேசங்களில் மழை நீர்த்தேங்கிவெள்ளப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மழை தொடரும்பட்சத்தில் வயல் வெளிகளில் மழை நீர் தேங்கி பெரும்போக நெற்செய்கை பாதிக்கப்படும் நிலமை ஏற்படலாமென விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
மேலும் தொடர் மழை காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில் நின்ற பாரிய ஆலமரம் ஒன்று அட்டப்பள்ளம் பிரதேசத்தில் அடியோடு வீதிக்கு குறுக்கே சாய்ந்து சில மணி நேரங்கள் போக்குவரத்து தடையும் ஏற்பட்டது.
சுமார் 70 வருடங்கள் பழமை வாய்ந்த பாரிய ஆலமரம் இது வெனத்தெரிய வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்