
posted 14th May 2022
இறக்குமதி மற்றும் கடன்கள் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும், சுய பொருளாதாரத்தில் மக்களிற்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் அது சாத்தியமில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சி அலுவலகத்தில் இன்று முற்பகல் அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
இலங்கையில் அரசியல் ஒழுங்குகள் வித்தியாசமான முறையில் பரபரப்புடன் சென்று கொண்டிருக்கின்றது. முக்கியமாக இலங்கையின் பொருளாதாரம் மீளுமா என்ற முக்கியமான கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
70வதுகளில் இலங்கையில் ஏற்பட்ட பஞ்சம் பட்டின் போல அடுத்தடுத்த வாரங்களில் இலங்கையிலும் ஏற்படலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில்தான் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுள்ளார்.
முதலில் ராஜபக்ச குடும்பம் குறிப்பாக கோட்டபாஜ ராஜபக்ச பதவி விலகி செல்ல வேண்டும் என குரல் கொடுத்தவர்களில் ஒருவராக, ஒரு ஆசனத்துடன் பாராளுமன்றம் வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க அவர்கள், மிக பகிரங்கமாகவே இந்த கோரிக்கையை முன்வைத்து வந்தார்.
அவருடைய கோரிக்கைகள் இப்பொழுது காற்றிலே பறக்கவிடப்பட்டு, அதே ராஜபக்ச அரசில் பதவியேற்றிருக்கின்றார். ஆனால் அவரது காலத்தில் சிலர் பொருளாதார மாற்றங்கள் வரும் என்று நம்புகின்றார்கள். பசில் ராஜபக்ச பொறுப்பேற்ற காலத்திலும் இவ்வாறுதான் செய்திகள் வந்தன.
ஆனால் இலங்கையில் பொருளாதாரம் அதாள பாதாளத்திற்குள் சென்றுள்ளது. அதனை கட்டியெழுப்ப நீண்ட காலங்கள் செல்லும். அதாவது மக்கள் தாம் வாழமுடியும் என்று நம்பிக்கை கொள்ளக்கூடிய சுய பொருளாதார சூழல் ஏற்பட வேண்டும். அதற்கான உரவகைகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொண்டு கொடுக்கும்போதுதான் பொருளாதாரம் ஓரளவு முன்னிலையை கொடுக்கும்.
அதைவிடுத்து மசகு எண்ணையை இறக்கி அதனை சுத்திகரித்து ஏற்றுமதி செய்வதோ அல்லது, துணியை இறக்குமதி செய்து புடவையாக ஏற்றுமதி செய்வதோ முடியாத ஒன்றாகும். அதேவேளை சுற்றுலா உள்ளிட்ட விடயங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடன்களை நம்பி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.
அந்த வகையில் ரணில் விக்ரமசிங்கவின் வருகை ஆரோக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட விரும்பவில்லை. அவருடைய அரசு தக்கவைக்கப்படுமா அல்லது கொண்டு செல்லப்படுமா என்பதை எதிர்வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்
இந்த நிலையில் எங்களது மக்களின் சுய பொருளாதாரம் தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி அதனை கட்டியெழுப்ப கடும் முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் என தெரிவித்தார்.
இப்பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
இந்தியாவின் கூடுதலான கரிசனையிலும், உதவி வழங்கும் நாடுகளையும் இணைத்து வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான தனி நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்க முடியும் என்றும், வடக்கு-கிழக்கின் அபிவிருத்தியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பரசியல் பாதிப்படைய செய்யுமல்லவா எனவும், அதற்கான மாற்று திட்டங்கள் உள்ளதா எனவும் ஊடகவியலாளர் அவரிடம் வினவியபோது இவ்விடயத்தை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
யுத்தம் நடந்து 30 ஆண்டுகள் அதற்கு பின்னர் 12 ஆண்டுகள் கடந்து 42 ஆண்டுகள் இந்த மண்ணிலே கடந்திருக்கின்றது. ஆனால் வடக்கு-கிழக்கில் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இளைஞர்களுக்கான தொழில்வாய்ப்பு உள்ளிட்டவை குறைந்திருக்கின்றன.
இதற்கான வாய்ப்பாக வடக்கு-கிழக்கு இணைந்த வகையில் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான இடைக்கால நிர்வாகத்தை உருவாக்குவது காலத்திற்கு பொருத்தமானது என கருதுகின்றோம்.
இப்பொழுது இருக்கின்ற சூழல் இலங்கையின் அரசியலமைப்புக்குள் இந்தியாவின் கூடுதலான கரிசனையில் உதவி வழங்கும் நாடுகளையும் சேர்த்துக்கொண்டால் வடக்கு-கிழக்குக்கான தனி கட்டமைப்பை உருவாக்க முடியும்.
யுத்த காலத்தில் தென்னிலங்கையில் தொழிற்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதற்கான வாய்ப்பு இல்லாமல் போயுள்ளது. காரணம் யுத்தம். இதனை நிமிர்த்துவதற்கான ஒரு வழியாக இந்த இடைக்கால நிர்வாகத்தினை நாங்கள் பார்க்கின்றோம். இதன் ஊடாக நாட்டுக்கு நிதியை கொண்டுவர முடியும்.
குறிப்பாக உலக நாடுகளின் நிதி, இந்தியாவின் நேரடி கண்காணிப்பில் முதலீடுகளை கொண்டு வருதல், இந்தியாவின் மேற்பார்வையில் கொண்டு வருவதன் ஊடாக பல சலுகைகளையும் எதிர்பார்க்கலாம்.
புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களின் முதலீடுகளை வடக்கு-கிழக்கில் அதிகரிப்பதன் மூலம் தொழில் துறைகளை இயக்க முடியும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY