நாடளாவிய ஹர்த்தால் வெற்றி
நாடளாவிய ஹர்த்தால் வெற்றி

“மக்களை வதைக்கும், மக்கள் விரோத அரசை விரட்டுவோம், மக்கள் போராட்டத்தை வெற்றியடையச் செய்வோம்”

எனும் தொனிப்பொருளில் இன்று வெள்ளிக்கிழமை (06) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டதுடன், பல முக்கிய பிரதேசங்களில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

நாடும், நாட்டு மக்களும் முகம்கொடுத்துள்ள நெருக்கடிகள் மற்றும் இயல்பு வாழ்க்கைப் பாதிப்புக்களுக்கு தீர்வு பெற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி, பிரதமர் உட்பட அரசு முற்றாகப் பதவி விலகி அரசு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தியே இன்றைய ஹர்த்தால் வெற்றிகரமாக அனுஷ்டிக்கப்பட்டது.

தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த ஹர்த்தால் போராட்டத்தில் அதிகமான தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்கி இணைந்திருந்தன.

இலங்கையில் நீண்ட பல வருடங்களுக்குப் பின்னர் 1000 க்கு மேற்பட்ட தொழிற் சங்கங்கள் ஒன்றினைந்து ஒரே நாளில் முன்னெடுத்த பேராட்டம் இன்றைய அரசுக்கு எதிரான ஹர்த்தால் போராட்டம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நாட்டிலுள்ள அரசு, தனியார், தொழிற் சங்கங்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திலும் இன்று ஈடுபட்டுள்ளன.

இதனால், துறைமுகம், தனியார் போக்குவரத்து, ரயில் உட்பட பொருளாதார மத்திய நிலையங்கள், தபால், வங்கிச் சேவை சுகாதாரம், சமூர்த்தி, தனியார் தொழிற்துறை, ஆசிரியர்கள் சேவைகள் பாதிப்படைந்தன.

இதேவேளை இன்றைய ஹர்த்தால் மற்றும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் கிழக்கு மாகாணத்திலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு, கல்முனை, அக்கறைப்பற்று போன்ற முக்கிய நகரங்களில் வர்த்தக நிலையங்கள், பொதுச் சந்தைகள் மூடப்பட்டு, ஹர்த்தாலுக்கு வலுச்சேர்க்கப்பட்டன.

அத்துடன் அடையாள வேலை நிறுத்தம் காரணமாக அரச வங்கிகள், தனியார் வங்கிகள் சிலவும் இன்று முற்றாக மூடப்பட்டிருந்ததுடன், பாடசாலைகள் பலவும் மூடப்பட்டிருந்தன.

தனியார் போக்குவரத்துகளும் கிழக்கில் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தன.

தினமும் பெருமளவில் மக்கள் திரளும், கல்முனை, அக்கறைப்பற்று போன்ற நகரங்களின் பொதுச்சந்தைகள் வெறிச்சோடிக்காணப்பட்டதுடன், நகர வீதிகள் பலவும் வெறிச்சோடிக்காணப்பட்டன.

அக்கறைப்பற்று உட்பட மேலும் சில இடங்களில் ஜனாதிபதி பிரதமர் உட்பட அரசும் முழுமையாகப் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி மக்கள் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றன.

நாடளாவிய ஹர்த்தால் வெற்றி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)