நாங்களே அபிவிருத்தி செய்வோம்

சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சனிக்கிழமை (03) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் நகரங்களை காண முடியாது. நகரங்கள் இருந்தால் தான் நகரங்களை அபிவிருத்தி செய்யலாம்.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு மாத்திரம் 50 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நகரங்கள் இல்லை.

நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் ஒருபகுதி கூட கிராமிய அபிவிருத்திக்கு ஒதுக்கப்படவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் படுவான்கரை, எழுவான் கரை ஆகிய பிரதேசங்கள் உள்ளன.

எழுவான்கரை பிரதேசத்தில் நகரங்கள் இல்லை. 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஆளும் கட்சிகளுக்கு வாக்களித்தால் தான் அபிவிருத்தி செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டது.

இவ்வாறான பின்னணியில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதேச அபிவிருத்திக்கு இரு பிரதிநிதிகளையும், அரசியல் உரிமைக்காக இரு பிரதிநிதிகளையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்கள்.

காணி அபகரிப்பு, அரசியல் கைதி விடுதலை, சமஷ்டி அடிப்படையிலான தீர்வு குறித்து எமக்கு மக்கள் வழங்கிய பொறுப்பை முறையாக செயற்படுத்தி வருகிறோம்.

ஆனால் 2020 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்த அபிவிருத்தி பணிகளும் முன்னெடுக்கப்படவில்லை. ஏனைய மாவட்டங்களில் அபிவிருத்தி பணிகள் இடம்பெற்றுள்ளன. அபிவிருத்திக்காக தெரிவு செய்யப்பட்ட இரு பிரநிதிகளுக்கு செயற்திறன் இல்லையா என்பது தெரியவில்லை.

மட்டக்களப்பில் படுவான்கரையும், எழுவான் கரையையும் இணைக்கும் பட்டிருப்பு பாலம் எனது பாட்டனார் சி.மு. இராசமாணிக்கம் இருந்த காலத்தில் இருந்ததை போன்று இன்றும் அதே நிலையில் தான் உள்ளது. கிராமங்களை நகரங்களாக மாற்றியமைக்க வேண்டுமாயின் கிராமங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மண்டூர் பிரதேசத்தில் இருந்து பிரதான நகரத்திற்கு வருவதற்கு பாலம் ஒன்று இல்லாத காரணத்தினால் பெரும்பாலானோர் மண்டூர் பிரதேசத்தில் இருந்து வெளியேறியுள்ளார்கள்.

அம்பலாந்துரை ஒரு நகரமாக்க வேண்டுமாயின் அங்கு ஒரு பாலம் நிர்மாணிக்கப்பட வேண்டும். ஆனால் அடிப்படை அபிவிருத்திகள் தற்போது கவனத்திற் கொள்ளப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோட்டைக்கல்லாறு பகுதியில் உள்ள மக்கள் ஏ.டி.எம். சேவை வசதியை பல காலமாக கோருகிறார்கள். நகரமாக அபிவிருத்தி செய்ய முன் ஒரு ஏ.டி.எம்.சேவை வசதியை வழங்குங்கள்.

கோட்டைக்கல்லாறு பகுதிக்கு ஒரு ஏ.டி.எம் இயந்திரத்தை கூட கொண்டு வர முடியாத நிலையில் தான் மட்டக்களப்பு மாவட்ட இரு அபிவிருத்தி நாயகர்கள் உள்ளார்கள்.

செங்கடலடி சந்தை முழுமையாக அபிவிருத்தி செய்யப்படவில்லை. மழை காலங்களில் இந்த சந்தைக்குள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.

அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடுகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முழுமையாக சென்றடைவதில்லை. அமைச்சர் டக்லஸ் தேவானந்தா காலம் காலமாக அமைச்சராக பதவி வகிக்கிறார். மறுபுறம் அங்கஜன் இராமநாதன் பலமுறை இராஜாங்க அமைச்சுக்களை வகித்துள்ளார்.

தற்போது இருவர் இராஜாங்க அமைச்சு பதவிகளை வகிக்கிறார்கள். ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் அபிவிருத்தியடையவில்லை.

இதன் காரணமாகவே அதிகாரத்தை வழங்குமாறு கோருகிறோம். சமஷ்டி கட்மைப்பில் அதிகாரத்தை வழங்கினால் எமது மாகாணங்களை நாங்கள் அபிவிருத்தி செய்வோம்.

பல ஆண்டு காலமாக எமது மக்களின் முன்னேற்றத்திற்காக அதிகாரத்தை கோருகிறோம். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அபிவிருத்தியடைந்தால் அது நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவானதாக அமையும்.“ எனக் குறிப்பிட்டார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, ‘இலங்கை வங்கியுடன் கலந்தாலோசித்து கோட்டைக்கல்லாறு பகுதிக்கு ஏ.டி.எம். இயந்திய சேவையை வழங்க நடவடிக்கை எடுக்கிறேன்“ என்றார்.

மீண்டும் உரையாற்றிய சாணக்கியன், ‘மிக்க நன்றி. நாட்டின் நீதியமைச்சர் ஏ.டி.எம் இயந்திரத்தை பெற்றுக்கொடுப்பதாக குறிப்பிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலான வீடமைப்பு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் அந்த அபிவிருத்தி பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் வாடகை வீடுகளிலும், வீடு இல்லாமலும் வாழ்கிறார்கள். ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை அரசியல் நோக்கமற்ற வகையில் நிறைவு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளில் புறக்கணிப்புக்கள் மாத்திரம் காணப்படுகின்றன. அரசியல் உரிமை ஊடாகவே அபிவிருத்தியை பெற்றுக்கொள்ள முடியும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

அதிகார பகிர்வு தொடர்பில் சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அச்சத்தை போக்கும் செயற்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். ஒருசில இனவாதிகள் அதிகார பகிர்வு தொடர்பில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவித்தார்கள்.

இலங்கை மேலவை கூட்டணி என்பதை அமைத்து தற்போது மக்கள் மத்தியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். பிரதான நகரங்களின் போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் திட்டம் எம்.சி.சி ஒப்பந்தத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணியின் உறுப்பினர்கள் தான் இல்லாமலாக்கினார்கள்.

எம்.சி.சி. தொடர்பில் தவறான நிலைப்பாட்டை இவர்கள் தான் தோற்றுவித்தார்கள். பிளவுபடாத இலங்கைக்குள் தான் அதிகாரத்தை கோருகிறோம்.

அனைத்து மாகாணங்களுக்கும் அதிகாரங்களை வழங்குங்கள். தென்மாகாணத்திற்கு அதிகாரம் வேண்டாம் என்றால் அது உங்களின் பிரச்சினை.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களுக்கு அபிவிருத்தியும், அரசியல் உரிமையும் இல்லாத நிலை காணப்படுகிறது. எமது உரிமைக்காக தொடர்ந்து போராடுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

நாங்களே அபிவிருத்தி செய்வோம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-19.08.2025

Mahanadhi - மகாநதி-19.08.2025

Read More