நல்லாட்சி அரசாங்கம் அன்று முடிந்தளவு கடன் பெற்றாலும் அதனூடாக செய்தது ஒன்றும் இல்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

மத்தள விமான நிலையத்தில் நெல்லை களஞ்சியப்படுத்தும் அளவிற்கு வங்குரோத்து நிலைக்குச் சென்ற நல்லாட்சி அரசாங்கம் தன்னால் இயன்ற அளவிற்கு கடன்களை பெற்றுக் கொண்டதே தவிர அதன் மூலம் செய்தது ஒன்றும் இல்லை என கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதையை திறந்து வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (25.11.2021) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்து உரையாற்றுகையில்;

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் பூரண நிதி அனுசரணையின் கீழ் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் முழு ஆதரவுடன் புதிய விமான ஓடுதளம் மற்றும் ஓடுபாதை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் கீழ் துரிதப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அடிக்கல் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்ட திட்டமாகும். நல்லாட்சி அரசாங்கம் இத்திட்டத்தை முற்றாக நிறுத்தியிருந்தது. அதன்படி, இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டு இன்று பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் ஊடாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தற்போது 48 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுiமையான உரை வருமாறு;

ஆசியாவின் விமான சேவைக்கான கேந்திரநிலையமாக எமது விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு நாம் 2010ஆம் ஆண்டு தீர்மானித்தோம். நிகழ்காலத்துக்கு ஏற்ற வகையில் விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யவே நாம் விரும்பினோம். அதேபோன்று மேலும் 20 ஆண்டுகளுக்கு பின்னரான எதிர்காலத்தை கருத்தில் கொண்டே இந்த அபிவிருத்தி திட்டங்களை நாம் முன்னெடுத்துள்ளோம்.

ஜப்பானின் முன்னால் பிரதமர் ஷின்ஷுவா அபே அவர்களின் தலைமையில் 2014ஆம் ஆண்டிலேயே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்ட ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அபிவிருத்தி திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு முதலீட்டாளர்களுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே 2015ஆம் ஆண்டில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தை இரண்டு கட்டங்களில் நிறைவுசெய்வதற்கு அப்போது திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. 2015ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் இத்திட்டத்தை திட்டமிட்டபடி முன்னெடுத்து செல்லவில்லை. எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2020ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே முதல் கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இன்று நாம் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் இக்கட்டத்தின் பணிகளை ஆரம்பிப்பதனையும் நல்லாட்சி அரசாங்கம் தாமதப்படுத்தியது. இக்கட்டிடத்தின் கூரையின் வடிவமைப்பை மாற்றுவதற்கான தேவை அவர்களுக்கு இருந்தது. இந்த கூரை வடிவமைப்பை மாற்றுவதற்காக மாத்திரம் நல்லாட்சி அரசாங்கம் 661 மில்லியன் ரூபாயை செலவிட்டது. அவ்வாறு திட்டத்தை மாற்ற முயற்சித்தமையாலேயே இரண்டாம் கட்டத்தின் பணிகளை ஆரம்பிக்க தாமதிக்கப்பட்டது.

இன்று முதல் விமான நிலையத்தில் 48 விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக ஒரு ஆண்டிற்கு 6 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் 2023ஆம் ஆண்டளவில் 15 மில்லியன் வரை அதிகரிக்கும்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் மீது விடுதலை புலி பயங்கரவாதிகளினால் நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் உங்களுக்கு நினைவிருக்கும். அப்போது விமான நிலையத்தில் பணியாற்றியவர்கள் அத்தாக்குதலின் கொடூரத்தை அனுபவித்தனர். அந்த அவசர நிலையின் போது இலங்கைக்கு வந்த விமானங்களை மாற்றி அனுப்புவதற்கு வேறு விமான நிலையமொன்று எமக்கு இருக்கவில்லை. அதனால் அண்மித்த நாடுகளுக்கு அவ்விமானங்களை அனுப்புவதற்கு எமக்கு நேரிட்டது. அப்போதே மற்றுமொரு விமான நிலையத்தின் தேவை எமக்கு உணரப்பட்டது. அதற்கமையவே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு மேலதிகமாக மற்றுமொரு விமான நிலையத்தின் தேவை குறித்து எமது அரசாங்கம் கவனம் செலுத்தியது. அதற்கமைய நாம் மத்தள விமான நிலையத்தை நிர்மாணித்தோம்.

2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் மத்தள விமான நிலையத்தை பொருளாதார அபிவிருத்திக்காக பயன்படுத்துவதற்கு மாறாக ராஜபக்ஷர்களை பழிவாங்கும் நோக்கில் நெல் களஞ்சியப்படுத்தினர்.

அவ்வாறான வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட நல்லாட்சி அரசாங்கம் முடிந்தளவு கடன்களை பெற்றுக் கொண்டது. ஆனால் செய்த வேலை ஒன்றும் இல்லை. கடன் பெற்றால் அதனை முதலீடு செய்து ஏதேனுமொன்றை செய்திருக்க வேண்டும். மத்தள விமான நிலையம் எமது நாட்டிற்கே அந்நிய செலாவணியை ஈட்டித்தருகின்றது. அவை நம் நாட்டின் வளங்கள்.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு எந்தவொரு அபிவிருத்தி திட்டமோ, அபிவிருத்தி இலக்கோ காணப்படவில்லை.

மனிதாபிமான செயற்பாட்டின் மூலம் பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, நாட்டில் அமைதி ஏற்படுத்தப்படுத்தப்பட்ட பின்னர் எமது நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை உயர்வடைந்தது. உண்மையில் சுற்றுலாத்துறையானது நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் பிரதான வருவாய் மார்க்கமாக காணப்பட்டது. எமது நாட்டிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததுடன், விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தது.

கொவிட் தொற்று நிலைமையை அடுத்து மக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டமையால் கடந்த காலங்களில் விமான நிலையங்களை மூடினோம். நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டதுடன், நம் நாட்டிற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையும் நிறுத்தப்பட்டது. சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்தது என்று விமான நிலைய அபிவிருத்தி தடைப்படுவதற்கு எமது அமைச்சர்கள் இடமளிக்கவில்லை.

மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிபடுத்தி, இருந்ததைவிடவும் சிறப்பாக சுற்றுலாத்துறையை முன்னெடுத்து செல்வதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்துவதற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டார்.

எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு செயற்பட்டது. அன்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் அடிப்படை பின்னணியை தயார்செய்து திட்டத்தை செயற்படுத்தும் அளவிற்கே கொண்டு சென்றோம்.

இம்முறை அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்வைத்த சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தை துரிதப்படுத்துவதாக தெரிவித்தார்.

வாக்குறுதிகளை வழங்குவது போன்றே எமது அரசாங்கங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அதனை நிறைவேற்றியும் காட்டுகின்றோம். நாம் முன்னெடுக்கும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களின் மூலமும் எமது எதிர்கால சந்ததியினரே நன்மையடைவர் என்பதை நினைவுபடுத்த வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் னு.ஏ.சானக அவர்கள்;

ஐந்து ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த அபிவிருத்தியை மீண்டும் மேம்படுத்தும் தருணம் இது. இத்திட்டத்தை ஆரம்பித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களினாலேயே இத்திட்டத்தை திறந்து வைக்க கிடைத்தமையை பெருமைக்குரிய விடயமாக கருதுகின்றோம். அத்துடன் இத்திட்டம் பல காலங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. இந்த இடைநிறுத்தப்பட்டிருந்த திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும் போது பாரிய சவால்கள் காணப்பட்ட போதிலும் அத்திட்டத்தை முன்னெடுத்து செல்லுமாறு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இத்திட்டத்தை ஒப்படைத்தார்.

இன்று நாம் இலங்கையின் திட்டங்கள் குறித்து நோக்கினாலும், அபிவிருத்தி குறித்து நோக்கினும் அண்மைய வரலாற்றில் அபிவிருத்திகள் நிகழ்ந்திருப்பின் அவை மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஆரம்பிக்கப்பட்டவையே ஆகும். கொழும்பு துறைமுகத்தை எடுத்துக் கொண்டால் அதனை மேம்படுத்தியது அவரே. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைத்தார். அதிவேக நெடுஞ்சாலைகளை அமைத்தார். வீதிகளை கார்பட் செய்தார். மத்தள விமான நிலையத்தை அமைத்தார் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

குறித்த சந்தர்ப்பத்தில் கௌரவ அமைச்சர்களான பிரசன்ன ரணதுங்க, நாமல் ராஜபக்ஷ, கௌரவ இராஜாங்க அமைச்சர்களான னு.ஏ.சானக பிரசன்ன ரணவீர, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான மிலான் ஜயதிலக, உபுல் ராஜபக்ஷ, கோகிலா குணவர்தன, நளின் பெர்னாண்டோ, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசிகொஷி ஹிதெகி, சுற்றுலாத்துறை அமைச்சின் செயலாளர் ளு.ஹெட்டிஆராச்சி, இராஜாங்க மைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர, விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) பு.யு.சந்திரசிறி, உப தலைவர் ரஜீவசிறி சூரியாராச்சி, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் சரத் ரூபசிறி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சட்டத்தரணி சுமித் விஜேசிங்க, ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் தலைமை பிரதிநிதி டெட்சுயா யமாதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நல்லாட்சி அரசாங்கம் அன்று முடிந்தளவு கடன் பெற்றாலும் அதனூடாக செய்தது ஒன்றும் இல்லை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

வாஸ் கூஞ்ஞ

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Mahanadhi - மகாநதி - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 08.09.2025

Varisu - வாரிசு - 08.09.2025

Read More
Varisu - வாரிசு - 06.09.2025

Varisu - வாரிசு - 06.09.2025

Read More
Mahanadhi - மகாநதி - 05.09.2025

Mahanadhi - மகாநதி - 05.09.2025

Read More