
posted 5th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
தொடரும் கடலரிப்பு நிந்தவூரில் - அதிகாரிகள் தூக்கத்தில்
கடலரிப்பினால் தொடர்ந்து ஏற்படும் அனர்த்தங்களால் கலங்கிப்போய் வாழ்வாதாரங்களை இழந்தும், இழந்து கொண்டிருக்கும் மக்களின் அவல நிலைகளை கொஞ்சமாவது திரும்பிப் பார்க்காமல், இருப்பவர்களைத்தான் பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்றார்கள், வாருங்கள் - வந்து, எமது இடத்தில் உங்கள் பாதங்களை வைத்து கொஞ்சம் நேரம் நின்று பாருங்கள். அப்போது தெரியும் நாம் தினமும் படும் துயர்களை.
அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசமான நிந்தவூரில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளது.
கடந்த சில மாதகாலமாக நிந்தவூர்ப் பகுதியில் கடலரிப்பு ஏற்பட்டு பல்வேறு பாதிப்புகளும் ஏற்பட்டுள்ள நிலையில், கடலரிப்பு தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நிந்தூரின் சில பிரதேசங்களில் பாரிய கருங்கற்களிடப்பட்டு கடலரிப்பு தடுக்கப்பட்டுள்ள போதிலும், தற்சமயம் ஏனைய சில பிரதேசங்களில் கடலரிப்பு உக்கிரமடைந்துள்ளதுடன், பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன.
தற்சமயம் நிந்தவூர் கடற்கரைப் பள்ளிவாசலான மஸ்ஜில் றவாஹா பள்ளிவாசல் முன்பான பிரதேசங்களில் கடலரிப்பினால் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
இந்தப் பிரதேசங்களிலுள்ள தென்னை மரங்கள் கடலரிப்பினால் காவு கொள்ளப்பட்டுள்ள அதேவேளையில் கடற்கரையோரமாகவுள்ள மீனவர் வாடிகளும் கடலால் காவு கொள்ளப்படும் அபாய நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை நிந்தவூர்ப் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பு காரணமாக கரைவலை மீன்பிடியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரைவலை தோணிகள் நிறுத்தப்படும் பல இடங்கள் கடலரிப்புக்கு உட்பட்டுள்ளதாலும், கரைவலை இழுப்பதற்கு போதிய இடவசதி கடலரிப்பால் இல்லாமல் போயுள்ளதாலும் கரைவலை மீன்பிடியை மிகச் சிரங்களுக்கு மத்தியிலேயே முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,
கடலரிப்பு காரணமாக கரைவலை மீன்பிடி நிந்தவூரில் பெரும் பாதிப்புக்குள்ளாகி நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் தொழிலை இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகவும், கடற்றொழிலாளர் அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன.
நிந்தவூரிலேற்பட்டுள்ள மிக மோசமான கடலரிப்பு பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைப் பெற்றுத்தர சம்பந்தப்பட்டோர் உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வருவதுடன், கடற்றொழில் அமைச்சர் இந்த விடயத்தை அவசரமாகக் கருதி நடவடிக்கை எடுப்பதுடன், நிந்தவூருக்கு உடனடிகள விஜயமொன்றை மேற்கொண்டு நிலமையை நேரில் அவதானித்து ஆவண செய்ய வேண்டுமெனவும் பிரதேச மக்கள் கோருகின்றனர்.
நிந்தவூரை கடல் விழுங்குவதற்கு முதல் காத்திரமான செயற்பாடுகள் சம்பந்தப்பட்டோரால் முன்னெடுக்கப்படுமா? என பொது மக்கள் அங்காலாய்க்கின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)