தலை காட்டும் தலைவர்கள்

இலங்கையின் முன்னணி முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தற்சமயம் கிழக்கு மாகாணத்திற்கு, குறிப்பாக அம்பாறை மாவட்டத்திற்கு அடிக்கடி வருகை தந்த வண்ணமுள்ளனர்.

குறிப்பாக முஸ்லிம்களின் முன்னணி அரசியல் கட்சிகளான சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களுமான, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன் ஆகியோரே இவ்வாறு வருகை தரத்தொடங்கியுள்ளனர்.

இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தளமான கிழக்கிற்கு அதிலும் முஸ்லிகளைக் கூடுதலாகக் கொண்ட அம்பாறை மாவட்டத்திற்கு நீண்ட காலமாகத் தலை காட்டாதிருந்த இந்த முஸ்லிம் தலைவர்களின் வருகை இந்த மாதத்தில் பல தடவைகளாக அதிகரித்துள்ளன.

தேர்தல் ஒன்றுக்கு கால்கோள் இடப்பட்டு வரும் நிலையிலேயே முஸ்லிம் தலைவர்களின் வருகையும் அமைந்துள்ளது.

எதிர்வரும் 2023 மார்ச் மாதமளவில் நாட்டிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களின் பதவிக்காலம் முடிவுறுத்தப்படப்போதவதாக தேர்கள் ஆணைக்குழு தெரிவித்து வரும் நிலையிலும், 2024 ஆம் ஆண்டு வரை எந்தத் தேர்தலையும் நடத்த முடியாதென ஜனாதிபதி சூளுரைத்துவருவதுடன், பிரதான எதிர்க்கட்சிகள் உட்பட பல கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்தியே ஆக வேண்டுமென வரிந்து கட்டி நிற்கும் நிலையிலுமே முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்களும் இவ்வாறு உஷாரடைந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இதனிமித்தம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த கட்சியின் முக்கிய தளங்களுள் ஒன்றான நற்பிட்டிமுனைப் பிரதேசத்திற்கு வருகை தந்து ஆதரவாளர்களைச் சந்தித்துள்ளார்.

கட்சியின் பிரதேச முக்கியஸ்தரான கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம். முபீத் மற்றும் அல் - கரீம் பவுண்டேசன் தலைவர் சீ.எம். ஹலீம் ஆகியோருட்பட கட்சி முக்கியஸ்தர்கள் சகிதம் அவர் நற்பிட்டிமுனைப் பிரதேச ஆதரவாளர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

எதிர்கால தேர்தலுக்கு முகம் கொடுத்தல், கட்சிக் கிளைகளின் புனரமைப்பு முதலான விடயங்கள் தொடர்பில் இக் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேவேளை அம்பாறை மாவட்டத்தைப் பிரதி நிதித்துவப்படுத்தும் மேற்படி இரு கட்சிகளும் சார்ந்த மக்கள் பிரதி நிதிகள் “தலை காட்டாப் பிரதி நிதி”களாக கொழும்போ தஞ்சம் என்ற நிலையிலிருப்பதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றமையும் சுட்டிக்காட்த்தக்கது.

தலை காட்டும் தலைவர்கள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)