தமிழ் மக்கள் பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்த வேண்டியன - யோதிலிங்கம்

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும், உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும்...! அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும் உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும். என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியுமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இன்று வடமராட்சியில் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடந்த 10ம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அடுத்த வருடத்திற்குள் தீர்வு காணப்படும் என்றும், இதற்காக வடக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அடுத்த வாரம் முதல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளேன் எனவும் குறிப்பிட்டுருந்தார்.

இங்கு ஜனாதிபதி வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசவிருப்பதாகக்கூறினாரே தவிர வடக்கு – கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி பேசவிருப்பதாகக் கூறவில்லை.

இதிலும் வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துப்பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் பேசவிருப்பதாகவும் கூறினாரே தவிர தமிழ்த்தேசியக்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மட்டும் பேசவிரப்பதாகவும் கூறவில்லை. மிகக் கவனமாக தனது வழமையான நரித்தந்திரங்களுடன் விவகாரத்தை அணுகியுள்ளார்.

ரணில் வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மட்டும் பேசவிருப்பதாகக் கூறியமைக்குக் காரணம் இனப்பிரச்சினையை வடக்குடன் மட்டும் முடக்குவதற்காகத் தான். ரணில் மட்டுமல்ல தென்னிலங்கையின் பிரதான கட்சிகளிடமும், அமெரிக்கா தலைமையிலான மேற்குலகத்திடமும் இந்த நிலைப்பாடே உள்ளது.

கிழக்கை சேர்த்தால் வடக்கு – கிழக்கு இணைப்பை ஏற்க்க வேண்டி வரும். அது பெருந்தேசியவாதத்துடன் முரண்பாட்டை ஏற்படுத்தும் என்பதாலேயே இலாவகமாகத் தவிர்க்கப்படுகின்றது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் 2009 க்கு பின்னர் கொழும்பை அனுசரித்துச் செல்லும் அரசியலை மேற்கொண்டதனால் இக்கருத்து நிலைக்கு பின்னாலேயே இழுபட்டுச் சென்றது.

ஜனாதிபதியின் இந்த நரித்தந்திரம் வெற்றியடைவதற்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒரு போதும் துணை போகக் கூடாது. அரசுடன் இடம் பெறும் எந்தப் பேச்சுவார்த்தையாக இருந்தாலும் தமிழ்த்தேசியக் கட்சிகள் வடக்கு – கிழக்காக அதாவது தமிழர் தாயகமாகவே அணுக வேண்டும்.

தனித்து வடக்கென்றோ தனித்து கிழக்கென்றோ ஒரு போதும் அணுகக் கூடாது. தமிழ் மக்கள் தமது கூட்டிருப்பையும், கூட்டுரிமையையும், கூட்டடையாளத்தையும், உறுதிப்படுத்துவதற்கு தமிழர் தாயகமாக அணுகுவது அவசியமானதாகும்.

வடக்கு – கிழக்கு இணைப்பு இல்லையென்றால் தமிழர் தாயகம் இல்லை . தமிழர் தாயகம் இல்லையென்றால் தமிழ்த்தேசியம் இல்லை, தமிழ்த்தேசியம் இல்லையென்றால் தமிழர் அரசியலில் அர்த்தமேயில்லை என்ற யதார்த்தத்தை தமிழ்த் தேசியக்கட்சிகள் மறக்கக் கூடாது.

மற்றைய தந்திரம் தமிழ்த் தேசியத்தரப்பின் கோரிக்கையை பலவீனப்படுத்தும் வகையில் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச வேண்டும் என கூறியமையாகும்.

இதன் அர்த்தம் அரசு சார்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச வேண்டும் என்பதாகும். இங்கு பேச்சுவார்த்தை அரசிற்கும், தமிழ்த்தேசிய தரப்பிற்கும் இடையிலானதே!

தமிழ்த் தேசியக்கட்சிகள் சாராத அரசு சார்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்கு கொள்ள வேண்டிய அவசியமில்லை. தமிழ்த்தேசியக் கோரிக்கைகளை நீர்த்துப் போகச் செய்வதற்காகவே ஜனாதிபதி இதனை முன்வைத்திருக்கிறார்.

முஸ்லீம்கள் பிரச்சினைகள் தொடர்பாக சகல முஸ்லீம் கட்சிகளுடனும் பின்னர் பேச்சுவார்த்தையை நடத்தலாம்.
இவற்றை விட அரசியல் தீர்வை 13 க்குள் முடக்குதல், இழுத்தடிப்புச் செய்தல், என்பதும் ஜனாதிபதியின் நோக்கங்களாக உள்ளன. இந்த நோக்கங்களுக்கும் தமிழ்த்தேசியத் தரப்புக்கள் பலியாகக் கூடாது.

ரணில் பெருந்தேசியவாதத்தின் லிபரல் முகத்தையுடையவர். அவர் லிபரல் முகத்தை வெளிப்படையாகக் காட்டுவார். லிபரல் முகம் அம்பலப்படக் கூடாது என்பதற்காக பெருந்தேசியவாத முகத்தை மறைமுகமாகக் காட்டுவார். அவரின் நடத்தைகளை நுணுக்கமாகப் பார்ப்பவர்களுக்குத்தான் பெருந்தேசியவாத முகம் தெரியும். ஏனையவர்களுக்கு பெருந் தேசியவாத முகம் துலக்கமாகத் தெரியாது. தவிர கட்சிகளை உடைத்து பலவீனப்படுத்துவதிலும் ரணில் வல்லவர். அவர் ஒரு போதும் தனது கட்சியைப்பலப்படுத்துவதன் மூலம் தன்னைப்பலப்படுத்துவதில்லை. மாறாக எதிர்த்தரப்பை பலவீனப்படுத்துவதன் மூலமே தன்னைப்பலப்படுத்துகின்றார்.

தற்போது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை கூட்டமைப்பாகக் கையாளாமல் அதன் பாராளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாகவே கையாண்டு வருகின்றார். இது தமிழ்த்தேசிய அரசியலுக்கு ஆரோக்கியமானதல்ல. தேசமாக அணுகுவதில் இது தடைகளையே ஏற்படுத்தும்.

தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வையும் வேண்டி நிற்கின்றது. இனப்பிரச்சினையைத் தீர்க்காமல் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்பதே யதார்த்த நிலை.

சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச தரப்புக்கள் முக்கியமாக இராணுவத்தைக் குறைத்தல், புலம்பெயர் முதலீடுகளை உள்வாங்குதல், அரசியல் ஸ்திரப்பாட்டை உறுதிப்படுத்துதல் ஆகிய மூன்று நிபந்தனைகளையும் பிரதானமாக முன்வைத்துள்ளன.

இனப்பிரச்சினைக்கான தீர்வு இல்லாமல் இந்நிபந்தனைகளை ஒரு போதும் நிறைவேற்ற முடியாது. தவிர இந்திய அரசாங்கமும் பல வழிகளிலும் அழுத்தங்களைக் கொடுக்கின்றது. ரணில் தமிழ்த்தரப்புடன் பேசும் விடயத்தில் அவசரம் காட்டுவதற்கு இவையே காரணமாகும். எனவே தமிழ்த்தரப்பு வரலாறு தந்த இந்தச்சந்தர்ப்பத்தை கவனமாகப் பயன்படுத்துவதற்கு தயக்கம் காட்டக் கூடாது.

ரணில் அறிவிப்புக்கு தமிழ்த்தரப்பின் பதில் வினைகள் திருப்தியானதாக அமையவில்லை. சம்பந்தன் ரணிலின் கால இழுத்தடிப்பு தந்திரத்தை மட்டுமே சுட்டிக்காட்டியிருந்தார். செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் தாயகமாக அணுகுவதன் அவசியத்தை சுட்டிக்காட்டியிருந்தனர்.

கஜேந்திரகுமார் ஒற்றையாட்சிக்குள் முடக்கும் தந்திரோபாயத்தையும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் தந்திரோபாயத்தையும் சுட்டிக்காட்டியிருந்ததார். உண்மையில் குறைந்தபட்சம் தாயகமாக அணுகுதலையும், தமிழ்த்தேசியத்தரப்பாக அணுகுதலையும், தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அனைவரும் ஒரே இலக்கில் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும்.

எனவே, பேச்சுவார்த்தை விவகாரத்தை அணுகும் போது ஜனாதிபதி ரணிலின் சூழ்ச்சித்தனமான செயற்பாடுகளை தமிழ்த்தேசிய நிலை நின்று தமிழ்த்தேசியக்கட்சிகள் புரிந்து கொள்ளுதலும்,

பேச்சுவார்த்தை செயற்பாட்டை தமிழத்தேசமாக அணுகி வடக்கு – கிழக்கு எனப்பிரிப்பதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாமலும்,
பேச்சுவார்த்தை சிறீலங்கா அரசிற்கும் தமிழ்த்தேசிய தரப்புகளுக்கும் இடையேயாகவும், சிறீலங்கா அரசிற்கும் வடக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலானதாக மட்டும் இருக்ககாமலும்,

அரசியல் தீர்வின் கோட்பாட்டு அடிப்படைகளையும், யாப்புச் சட்ட வடிவத்தையும், ஆவண வடிவில் தயாரித்தலும்
பேச்சுவார்த்தையை கட்டம் கட்டமாகவும், 1 ம் கட்டத்தில் நல்லிணக்கத்திற்கான நல்லெண்ண சைகைகளை தெளிவாகக் காட்ட அழுத்தம் கொடுப்பதுடன். சகல ஆக்கிரமிப்புக்களையும் நிறுத்தல்.

படையினர் பறித்த காணிகளை மீள வழங்குதல், அரசியல் தீர்மானம் மூலம் அரசியல் கைதிகள் அனைவரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்தல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் தீர்மானங்களை முழுமையாக நிறைவேற்றுதல், அரசியலமைப்புப் பேரவையிலும் சுயாதீன ஆணைக்குழுக்களிலும் தமிழ் மக்களுக்கும் அங்கத்துவம் வழங்குதல், அரசியலமைப்புப் பேரவையிலும், சுயாதீன ஆணைக்குழுக்களிலும் தமிழ் மக்களின் விவகாரங்களில் தீர்மானிக்கும் அதிகாரம் தமிழ்ப்பிரதிநிதிகளிடத்தே இருத்தல்,
தமிழ் மக்கள் சுயசார்புப் பொருளாதாரத்தில் ஈடுபடுவதற்கான சூழலை உருவாக்கிக் கொடு;த்தல், (உதாரணம் வடக்கு -கிழக்கிற்கென தனியான பொருளாதார சபை)

பேச்சுவார்த்தையின் 2 ம் கட்டத்தில் அரசியல் தீர்விற்கான கோட்பாட்டு அடிப்படைகளான தேச அங்கீகாரம், இறைமை அங்கீகாரம், சுயநிர்ணய அங்கீகாரம். சுயநிர்ண சமஸ்டி என்பவற்றிற்கு அழுத்தம் கொடுத்தல், இவை ஏற்றுக் கொண்டதை உறுதிப்படுத்தும் வகையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்த்தேசிய தரப்பிற்குமிடையே ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்படல் வேண்டும், மேலும் 3 ம் கட்டத்தில் அரசியல் தீர்விற்கான யாப்பு வடிவம் பற்றிப்பேசுதல், இதில் தாயக ஒருமைப்பாட்டைப் பேணும் வகையில் வடக்கு – கிழக்கு இணைந்த அதிகார அலகு, சுயநிர்ணயமுடைய சுயாட்சி அதிகாரங்கள், கூட்டு அதிகாரத்தில் தேசிய இனமாகப் பங்கு பெறுதல், சுயாட்சி அதிகாரங்களுக்கான பாதுகாப்பு என்பவற்றிற்கு அழுத்தங்களைக் கொடுத்தல்,

கட்சிகளின் தலைவர்களும் துறைசார் நிபுணர்களும், அடங்கிய பேச்சவார்த்தைக்குழு ஒன்று உருவாக்கப்பட்டு அக்குழுவே பேச்சுவார்த்தையில் ஈடுபடல்,

தமிழ்த் தேசியக்கட்சிகள் பேச்சுவார்த்தை விடயத்தில் பொறுப்பற்ற தனமாக நடந்து கொண்டால் இக்கட்சிகள் மக்கள் முன் அம்பலப்படுத்த சமூகவிஞ்ஞான ஆய்வு மையம் தயங்காது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் என்றும்

பேச்சுவார்த்தை செயற்பாட்டிற்கு சர்வதேச சாட்சிகள் தேவை. இந்தியா உட்பட மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகளை நடுவராகக் கொண்டே பேச்சுவார்த்தைச் செயற்பாடுகள் இடம்பெறல், இணைந்த வடக்கு கிழக்கில் முஸ்லீம் மக்களின் வகிபாகம் தொடர்பாக அவர்களுடன் பேசித் தீர்க்கலாம்.

அவர்களது தனி அதிகார அலகுக் கோரிக்கையையும், சாதகமாக பரிசீலிக்கலாம். முஸ்லீம்கள் சம்மதிக்கவில்லையாயின் கிழக்கிலுள்ள தமிழ்ப்பிரதேசங்களை நிலத் தொடர்ச்சியற்ற வகையிலாவது வடக்குடன் இணைத்து வடக்கு - கிழக்கு இணைப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் பேச்சுவார்த்தையில் உறுதிப்படுத்த வேண்டியன - யோதிலிங்கம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

மேலதிக செய்திகள் | Additional News

Varisu வாரிசு 23.08.2025

Varisu வாரிசு 23.08.2025

Read More
Varisu வாரிசு 21 & 22.08.2025

Varisu வாரிசு 21 & 22.08.2025

Read More
Mahanadhi மகாநதி 21.08.2025

Mahanadhi மகாநதி 21.08.2025

Read More
Mahanadhi - மகாநதி-20.08.2025

Mahanadhi - மகாநதி-20.08.2025

Read More