
posted 13th May 2022
காலிமுகத்திடல் தாக்குதல் - தொடரும் பணிப்புறக்கணிப்பு
காலிமுகத்திடலில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்புப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒன்றிய சம்மேளனம் நேற்று முன் தினம் அறிவித்தது.
எனினும் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு முன்னதாக அதன் பிரதிநிதிகள் தமது சங்கத்தினருடன் எவ்வித கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
எனவே தமது சங்கத்தினால் முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடரும் என அவர் குறிப்பிட்டார்.
153 எம்.பிக்கள் ஆதரவு?
ரணில் பிரதமராக பதவியேற்ற பின்னர் அவருக்கான பெரும்பான்மையை நிரூபிக்க 153 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க உள்ளனர் என்று சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டு உள்ளது.
இந்த தகவலை எதிர்க்கட்சியின் மூத்த உறுப்பினர் தெரிவித்ததாக அந்த இணையத்தளம் மேலும் தெரிவித்துள்ளது.
ஆடு நனைந்த கதை இதுதானா?17 பேர் வெளிநாடு செல்லத் தடை
கொழும்பு - காலிமுகத்திடலில் கடந்த 9 ஆம் திகதி திங்கட்கிழமை இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகள் தொடர்பாக நடைபெறும் எந்தவொரு விசாரணைக்கும் தனிப்பட்ட முறையில் எனது முழு ஒத்துழைப்பையும் வழங்குவேன் என முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனது தந்தைக்கோ அல்லது எனக்கோ நாட்டை விட்டு வெளியேறும் எண்ணம் இல்லை. தொடர்ந்து நான் இங்கேயே இருப்பேன் எனவும் நாமல் கூறியுள்ளார்.
காலிமுகத்திடலில் ஒரு மாதத்துக்கு மேலாக அமைதியான முறையில் போராடி வந்த போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ராஜபக்ஷ ஆதரவாளர்கள் கடந்த 9 ஆம் திகதி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்தே நாடெங்கும் வன்முறை வெடித்தது. நாடெங்கும் ஆளும் கட்சி ஆதரவாளர்கள் இலக்குவைத்து தாக்கப்பட்டதுடன், அவர்களது சொத்துக்களும் சேதமாக்கப்பட்டன.
இந்நிலையில் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் தாக்குதலின் பின்னணியில் மஹிந்த ராஜபக்ச, நாமல் உள்ளிட்டவர்கள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அலரி மாளிகை முன்பாக ஆர்ப்பாட்டத்தில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதின் பின்னணியில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் வெளிநாடு செல்ல தடை விதிக்கக் கோரி, பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த கோட்டை நீதிவான், மனுவில் பெயர் குறிப்பிடப்பட்ட மஹிந்த, நாமல் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்லத் தடை விதித்து நேற்று உத்தரவிட்டார்.
வடக்கு பாடசாலைகளில் மாணவர் வருகை வீழ்ச்சி!
வடக்கு மாகாண பாடசாலைகள் நேற்று ஊரடங்கு தளர்வை தொடர்ந்து ஆரம்பமானபோதும் மாணவர்களின் வருகையில் பெரும் வீழ்ச்சி காணப்பட்டது.
நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையை தொடர்ந்து நாடு முழுவதும் இரு நாட்கள் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு நடைமுறைக்கு வந்தது.
காலை 7 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்டமையால், நகரப் பாடசாலைகளுக்கு வருகை தரும் மாணவர்களின் விகிதம் கடுமையாகக் குறைந்திருந்தது. இதேபோன்று பாடசாலை நிறைவுறும் தருணத்தில் மீள ஊரடங்கு சட்டம் அமுலானமையாலும் பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைகளுக்கு சமுகமளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மண் சரிவு எச்சரிக்கை!
சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு!
பாடநெறிசாரா நடவடிக்கைகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான 2022/2021 கல்வியாண்டுக்குரிய பல்கலைக்கழக அனுமதிக்கான நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை குறித்த நேர்முகத்தேர்வுகளை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டின் தற்போதைய சூழ்நிலை காரணமாக அதனை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.
5 மணி நேரம் மின் தடை?
இன்று காலை 6 மணியுடன் ஊரடங்கு தளர்த்தப்பட்டால் மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரம் 05 மணித்தியாலங்களாக அதிகரிக்கும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்றும், நாளையும் சுழற்சி முறையில் மூன்று மணி 20 நிமிடங்களுக்கு மின் துண்டிப்பு மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதிச் சபாநாயகர் பதவிக்கு 17 ஆம் திகதி மீண்டும் தேர்தல்
இரண்டாவது தடவையாகப் பிரதிச் சபாநாயகராகத் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தன் பதவியை மீளவும் ராஜினாமாச் செய்துள்ள நிலையில், பிரதிச் சபாநாயகரை தெரிவு செய்யும் தேர்தல் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை 17ஆம் திகதி பாராளுமன்றம் கூடும் போதும் முதல் விடயமாக நடைபெறும்.
அதை அடுத்து ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள பிரேரணையை விவாதத்துக்கு எடுப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.
நேற்று முற்பகல் பாராளுமன்றத்தில் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஜனாதிபதிக்கு எதிராக நம்பிக்கை இல்லாப் பிரேரணை ஒன்றை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சமர்ப்பித்துள்ளது.
அதனை நம்பிக்கையில்லாப் பிரேரணை என்ற வடிவத்தில் எடுப்பதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.
ஜனாதிபதியின் நடவடிக்கைகள் குறித்து அதிருப்தி வெளியிடும் பிரேரணையாக அதன் வாசகங்களை மாற்றினால் அதனைச் சபையில் எடுப்பதற்கு அனுமதிக்க முடியும் என்று சபாநாயகர் ஏற்கனவே தம் முடிவை அறிவித்து இருக்கின்றார் என்பது தெரிந்ததே.
அதன்படி வாசகங்களை மாற்றி அதனை உடனடியாக பாராளுமன்றில் வாதத்துக்கு எடுக்க எதிர்க்கட்சிகள் கேட்டுக் கொண்டுள்ளன. எனினும் இத்தகைய பிரேரணை ஏதும் சமர்ப்பிக்கப்பட்டு ஐந்து நாடாளுமன்ற அமர்வு நாள்கள் பூர்த்தியான பின்னரே அதனை சபையில் விவாதத்துக்கு எடுக்க முடியும் என்பது பாராளுமன்ற நிலையியல் கட்டளை விதியாகும்.
ஆகவே, இப் பிரேரணையை 17 ஆம் திகதி சபையில் எடுப்பதாயின், அதற்காக பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்தும் பிரேரணை ஒன்று அதற்கு முன் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவேண்டும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அதை எதிரணி செய்வதற்கு அனுமதிக்க நேற்றைய கூட்டத்தில் சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார்.
இதன்படி, 17ஆம் திகதி செவ்வாய்க் கிழமை காலையில் பாராளுமன்றம் கூடியதும் முதலில் பிரதி சபாநாயகர் தேர்வு நடைபெறும். அதைத்தொடர்ந்து நிலையியற் கட்டளைகளை இடை நிறுத்தும் பிரேரணை ஒன்றை எதிரணி சமர்ப்பிக்கும். அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதியின் நடவடிக்கை கள் குறித்து அதிருப்தி தெரிவிக்கும் பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நாடாளு மன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாக செலவிட
கிளிக்செய்து தேடுங்கள் Search now
கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்
தேடுங்கள் Search now
15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer
இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now
ENJOY YOUR HOLIDAY