செய்தித் துளிகள்

பொது மக்களுக்கு இடரற்ற வகையில் எரிபொருள் வழங்க ஆவன செய்யுங்கள்

இன்றைய சூழ்நிலையில் தினமும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் பொது மக்களிற்கு, எரிபொருள் விநியோகத்திலும் அநாவசியமாக மேலதிக துன்பங்கள் ஏற்படுவது தடுக்கப்பட்ட வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சட்டத்தரணியுமான ந.ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.
அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேய இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படும் சிறிதளவு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக, மிக நீண்ட நேரம், பல்வேறு அசௌகரியங்களோடு வீதிகளில் நின்று கொண்டிருக்கும் பெரும் எண்ணிக்கையிலான பொது மக்கள் மத்தியில் சில வேளைகளில் முரண்பாடுகளும் சச்சரவுகளும் ஏற்படுவது ஆச்சரியமானது அல்ல.

இந்த நீண்ட வரிசைகளில் ஒழுங்கு முறைகளை மீறி, சமூகப் பொறுப்பற்று செயற்படும் பல நபர்களும் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர். இன்றைய சூழ்நிலையில் சகல எரிபொருள் நிலையங்களும் விநியோக நடவடிக்கைகளை நேர்மையாக மேற்கொள்வதாக கருத முடியாமலும் உள்ளது. இந்த நிலைமையில் எரிபொருளுக்கான நீண்ட வரிசைகளில் சில சந்தர்ப்பங்களில் ஏற்படும் அமைதியின்மையை கையாள்வதற்கு இராணுவத்தை ஈடுபடுத்தும்போது பிரச்னை மோசமடைவதையும், கண்மூடித்தனமான பலாத்கார பிரயோகம் அடக்குமுறையாக விஸ்வரூபம் எடுப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

கடந்த 18ம் திகதி முல்லைத்தீவு, விசுவமடுவில் பொதுமக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையில் ஏற்பட்ட மோதலும், அதை அடுத்து ஏவப்பட்ட அடக்கு முறை அட்டகாசமும் இந்த நெருக்கடியான கால கட்டத்தில் இனிமேலும் நிகழக்கூடாது.

எரிபொருள் விநியோக நடவடிக்கைகளில் இருந்து இராணுவத்தை முற்றாக விலக்கிக் கொள்வதன் மூலமே இதனை உறுதிப்படுத்த முடியும். இந்த நடவடிக்கைகளில் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலை நாட்டும் பொறுப்பு பொலீஸ் துறைக்கே உரியது. இதில் இராணுவத் தலையீடு தேவையற்றது.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் இதுவே பொருத்தமான அனுகுமுறை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். எரிபொருள் விநியோக விடயத்தில் சகலரின் ஒத்துழைப்பையும் கோரியுள்ள வட மாகாண ஆளுனர் இதனை கவனத்தில் கொள்ள முன்வர வேண்டும் என விரும்புகின்றோம்.
இன்றைய சூழ்நிலையில் தினமும் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து நிற்கும் பொது மக்களுற்கு, அநாவசியமாக மேலதிக துன்பங்களும் ஏற்படுவது தடுக்கப்பட்டேயாக வேண்டும் என்றுள்ளது.



கனேடிய நாட்டுத் தூதுவர் - யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கைக்கான கனேடிய நாட்டுத் தூதுவர் டேவிட் மக்கினன் டேவிட் நேற்று யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் சம்மேளனப் பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடினார்.

யாழ். நகரிலுள்ள தனியார் விடுதியொன்றில் நேற்று (22) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கச் சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அ. அன்னராசா, செயலாளர் நா. வர்ணகுலசிங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டர்.
இந்த சந்திப்பின்போது வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் நவீன மீன்பிடி முறைமை மற்றும் கடற்றொழில் உபகரணங்கள் தொடர்பாக நாம் கோரிக்கைகளை முன்வைத்த போது கனேடிய நாட்டுத் தூதுவர் சாதகமாக பரிசீலிப்பதாக தெரிவித்ததுடன், சந்திப்பு மிகவும் ஆக்கபூர்வமாக அமைந்தது என கடற்றொழிலாளர்களின் பிரதிநிகள் சந்திப்புக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.



மின்சார வயர்களைக் களவாடியவர்கள் கைது

வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின்தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வடமராட்சி குடாரப்பு பகுதியில் மின் தட வழியில் சென்ற மின் வயர்கள் வெட்டப்பட்டு களவாடப்பட்டது. இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆழியவளை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு திருடப்பட்ட மின் வயர்கள் 2 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் அறிந்து கொண்டனர்.

அதனை அடுத்து பண்ணை உரிமையாளருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதேவேளை 2 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வயரின் பெறுமதி சுமார் 10 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.



வீதியைக் கடந்த இராணுவ வீரன் பிக்கப் மோதி மரணம்

வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் பஸ்ஸில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட இராணுவ வீரர் மீது பிக்கப் வாகனம் மோதியதில் இராணுவ சிப்பாய் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற இவ் விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

முல்லைத்தீவு பகுதியில் உள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றும் இராணுவ வீரர் ஒருவர் விடுமுறையில் வீடு சென்று இ.போ.சபை பஸ்ஸில் மீண்டும் கடமைக்கு திரும்பிய போது வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் ஆவணம் ஒன்றை ஒப்படைப்பதற்காக பேரூந்தில் இருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது எதிர் திசையில் வந்த பிக்கப் வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து இராணுவ வீரரை மோதியதில் இராணுவவீரர் 7மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு, படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் வைத்தியசாலைக்கு கொண்டு வருவதற்கு முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் ஈரப்பெரியகுளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஐ.சீ. பண்டார தலைமையில் ஈரப்பெரியகுளம் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி டீ.சீ.எல். ஜெயவர்த்தன தலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

செய்தித் துளிகள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

உங்கள் விடுமுறையை உலகத்தில் எங்கும் உல்லாசமாகச் செலவிட

கிளிக்செய்து தேடுங்கள் Search now

கையிற்கு அடக்கம் - காலத்திற்கு மறவா - உல்லாச உலகம்

தேடுங்கள் Search now

15%ற்கு மேலான விலைக்கழிவு - கை நழுவ விடாதீர்கள் Offer

இடத்தை ஒதுக்குங்கள்>>> Book Now

ENJOY YOUR HOLIDAY